ஆக்டிவா, ஸ்பிளெண்டர்னு ஒன்னு விடாம எல்லாத்தையும் ஒழிச்சுக்கட்ட போகுது! ஓலா எஸ்1 ஏர் ரைடு ரிவியூ!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக எஸ்1 ஏர் (Ola S1 Air) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது பலர் அறிந்த ஒன்றே. இதுவே, நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான இ-ஸ்கூட்டர் மாடல் ஆகும்.
ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களுடன் இணைந்து எஸ்1 ஏர்-ம் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த நிறுவனம் மின்சார இருசக்கர வாகன விற்பனையில் ஏற்கனவே சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிதாக எஸ்1 ஏர்-ஐ ஓலா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களுக்கு ஆப்பு வைக்க வேண்டும் என்பதையே முழு இலக்காகக் கொண்டு ஓலா செயல்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே புதிய எஸ்1 ஏர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இந்த வாகனத்தையே ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. அப்போது ஓலா எஸ்1 ஏர் பற்றி எங்களுக்கு கிடைக்கப் பெற்ற சில முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஓலா எஸ்1 ஏர்-இல் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன?.. சாதாரணமாக பார்க்கும்போது இந்த புதிய ஓலா எஸ்1 ஏர் அதன் மற்ற உடன் பிறப்புகளைப் போலவே தென்படுகின்றது. அதாவது, எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகிய மாடல்களுக்கும் இதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாததைப் போல தென்படுகின்றது.

காரணம் அவற்றில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் டிசைனிங் யுக்தி அப்படியே இந்த எஸ்1 ஏர்-க்கும் பயன்படுத்தப்பட்டு இருப்பதுதான். அதாவது, ரோபோட் போன்ற லுக் அதற்கு அப்படியே வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, முன் மற்றும் பின் பக்கங்களில் வளைவான பாடி பேனல்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதனால்தான் எஸ்1 ஏர் ஸ்கூட்டரின் தோற்றம் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஆகியவற்றுடன் அப்படியே ஒத்துப்போகின்றது. அதேவேளையில், இந்த வாகனத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் லேசான மாற்றங்களைச் செய்து இருக்கின்றது. அதைக் கண்டறிய நாம் சற்று உற்று நோக்கிப் பார்க்க வேண்டும்.

எஸ்1 ஏர் உருவாக்கத்திற்காகப் புதிய தளத்தைப் பயன்படுத்தி இருக்கின்றது. இதன் அடிப்படையில் புதிய ஃப்ரேம் எஸ்1 ஏர் கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த ஃப்ரேம் ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் கால் வைக்கும் இடத்தைக் கூடுதல் தட்டையானதாக மாற்றி இருக்கின்றது.
மேலும், வழக்கமான கைப்பிடிகள் மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப்பையே எஸ்1 ஏர்-இல் ஓலா எலெக்ட்ரிக் பயன்படுத்தி இருக்கின்றது. இந்த விஷயங்களே எஸ்1 ஏர-ஐ மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்க செய்கின்றது. இதுமட்டும் இல்லைங்க, ஓலா புதிய மோட்டாரையே எஸ்1 ஏர்-இல் பயன்படுத்தி இருக்கின்றது.

தன்னுடைய முந்தைய மாடல்களில் அது மின்சார மோட்டாரை வாகனத்தின் மையப் பகுதியில் பொருத்தும் முறையை கையாண்டு வந்தது. ஆனால், புதிய எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹப் மோட்டாரை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அதாவது, வீலிலேயே மோட்டார் இடம் பெற்றிருக்கும். இதுமாதிரியான மாற்றங்களையே ஓலா எலெக்ட்ரிக் அதன் புதிய எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் செய்திருக்கின்றது.
இந்த புதிய ஹப் மோட்டார் வழக்கமான இயக்கத்தின்போது 3.62 பிஎச்பி பவரை வெளியேற்றும். அதுவே சற்று சூடுபிடித்துவிட்டது என்றால், அதாவது, ஆக்சலரேஷனை முழுமையாக திருகினால் கூடுதலாக 6 பிஎச்பி வரை அது வெளியேற்றும். மேலும், அது 150 என்எம் டார்க் வரை வெளியேற்றும் திறனையும் கொண்டிருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். அதேவேளையில், வெறும் 3.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும் திறனைக் கொண்டதாகவும் இந்த ஹப் மோட்டார் இருக்கின்றது. இந்த மோட்டாருக்கான மின்சக்தியை வழங்க ஓலா நிறுவனம் 2.98kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கை எஸ்1 ஏரில் பயன்படுத்தி இருக்கின்றது.
இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 125 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அராய்-ம் இந்த ரேஞ்ஜை உறுதி செய்திருக்கின்றது. பன்முக ரைடிங் மோட்கள் எஸ்1 ஏர்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகியவையே அவை ஆகும்.

இதில், இருப்பதிலேயே அதிக ரேஞ்ஜைத் தரக் கூடியதாக ஈகோ மோட் இருக்கின்றது. இதை பயன்படுத்தி பயணிக்கும்போது 125 கிமீ ரேஞ்ஜ் திறனை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும். அதுவே, நார்மல் மோடை பயன்படுத்தினால் 100 கிமீ ரேஞ்ஜையும், ஸ்போர்ட் மோடை பயன்படுத்தினால் 87க்கும் குறைவான ரேஞ்ஜை மட்டுமே எஸ்1 ஏர் வழங்கும்.
ஆகையால், இந்த ஸ்கூட்டரை அதிக ரேஞ்ஜ் தரக் கூடியதாக மாற்றுவது உங்கள் கையில் மட்டுமே இருக்கின்றது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரைடை கூடுதல் சுவாரஷ்யமானதாக மாற்றுவதற்காக ஓலா நிறுவனம் எஸ்1 ஏர்-இல் 7 அங்குல திரையை வழங்கி இருக்கின்றது. மூவ் ஓஎஸ் 3.0 சாஃப்ட்வேர் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

நிற தேர்வை பொருத்த வரை ஓலா எஸ்1 ஏர் ஆறு விதமான ஆப்ஷன்களில் கிடைக்கும். கோரல் கிளாம் (Coral Glam), போர்ஸ்லைன் ஒயிட் (Porcelain White), ஸ்டெல்லர் ப்ளூ (Stellar Blue), மிட்நைட் ப்ளூ (Midnight Blue), லிக்யூடு சில்வர் (Liquid Silver) மற்றும் நியான் (Neon) ஆகியவையே அவை ஆகும்.
ஓலா எஸ்1 ஏர் ஓட்ட எப்படி இருக்கின்றது? பெயருக்கு ஏற்பவே அதன் இயக்கமும் காற்றைப் போல இருக்கின்றது. ஆனால், அதன் மூத்த சகோதர மாடலான எஸ்1 ப்ரோவை அதனால் நெருங்க முடியவில்லை. இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் ஹைப்பர் மோட் வேற லெவல் வேகத்தில் சீறி பாய உதவியாக இருக்கின்றது.

அதன் அளவிற்கு வேகத்தை எஸ்1 ஏர் எட்டவில்லை என்றாலும், நேர்கோட்டு பயணத்தில் இந்த வாகனம் தரமான வேகத்தை வெளிப்படுத்துகின்றது. இதை ஓட்டி பார்க்க எங்களுக்கு சற்று குறைவான நேரமே கிடைத்தது. மேலும், நிறுவனத்தின் பீட்டா சாஃப்ட்வேரே (beta software) எஸ்1 ஏரில் பயன்படுத்தப்பட்டு இருந்ததால், அதை ஓட்டும் சில சிக்கல்கள் இருந்ததை நாங்கள் எதிர்கொண்டோம்.
குறிப்பாக, நாங்கள் ஓட்டி பார்த்த ஓர் யூனிட் க்ரூஸ் மற்றும் ஸ்போர்ட் மோட் ஆகியவற்றை ஆக்டிவேட் செய்யும்போது அவை சரியாக ஒத்துழைக்கவில்லை. இதேபோல், மற்றொரு யூனிட் ஈகோ மோடிற்கு போகவே மறுத்துவிட்டது. பீட்டா சாஃப்ட்வேர் இருந்ததால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என நாங்கள் கருதுகின்றோம்.

விற்பனைச் செய்யப்படும் எஸ்1 ஏர்-இல் இது போன்ற சிக்கல்கள் இருக்காது என்றே நம்புகின்றோம். ஈகோ மோடை பயன்படுத்தி எஸ்1 ஏரை ஓட்டும்போது அது குறைவான வேகத்தில் இயங்கி, பேட்டரி நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டது. நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ற மோட் இதுவே ஆகும்.
குறிப்பாக, ஆமைபோலோ அல்லது நத்தை போன்றே ஊர்ந்து செல்லக் கூடிய டிராஃபிக் நேரங்களில் இந்த மோடை தாராளமாக பயன்படுத்தலாம். இது பேட்டரியை மிச்சப்படுத்துவதோடு சிறந்த இயக்க அனுபவத்தையும் வழங்கும். அதேநேரத்தில் ஸ்போர்ட் மோடில் மணிக்கு 70 கிமீ வேகத்தை அசால்டாக தொட முடிகின்றது.

அதேவேளையில் இந்த மோட் பேட்டரியை வேகமாக குடிப்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. எனவே அதிக ரேஞ்ஜை பெற வேண்டும் என்றால் இந்த மோடை தவிர்ப்பதே நல்லது. இதேபோல், இதன் பிரேக்கிங் சிஸ்டமும் மிக சூப்பராக இருக்கின்றது. காம்பி பிரேக்கிங் சிஸ்டமே எஸ்1 ஏர்-இல் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது மிக சிறப்பாக வேலை செய்கிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடைகூட நொடிப் பொழுதில் கட்டுக்குள் கொண்டு வர இது பேருதவியாக இருந்தது. குறிப்பாக, பின் பிரேக் சற்று ஷார்ப்பாக இருந்தது. த்ரோட்டில் மற்றும் பிரேக் இரண்டையும் ஒரே நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தால் மட்டுமே வேகம் கட்டுக்குள் வருகிறது.

தொடர்ந்து, பிரேக் பிடித்த உடன் சீறிப் பாய வேண்டும் என நினைத்து ஆக்சலரேஷனை முறுக்கும்போது, அது பதிலளிக்க சில செகண்டுகளை எடுத்துக் கொள்கின்றது. பிரேக்கிங் சிஸ்டத்தை போலவே ஓலா நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தி இருக்கும் சஸ்பெஷன் செட்-அப்பும் மிக சிறப்பாக வேலை செய்கின்றது.
இந்த சஸ்பென்ஷன் செட்-அப்பில், ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா எனக் கண்டுபிடிக்க நினைத்தோம். ஆனால், அது நடக்கவில்லை. ஓலா இதன் இருக்கை அமைப்பில் இன்னமும்கூட வேலைகளைச் செய்திருக்கலாம் என நாங்கள் நினைத்தோம். ஆனால், அது சூப்பரான மற்றும் பேலன்ஸான ரைடு வழங்கும் வகையிலேயே இருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா நிறுவனம் ஆக்டிவா, ஸ்பிளெண்டர் போன்ற ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களே இல்லாத உலகத்தை உருவாக்கும் நோக்கில் செயல்படத் தொடங்கி இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த நோக்கத்திற்கு மிகுந்த உதவியாக புதிய வருகையான எஸ்1 ஏர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாங்கள் இதை ரைடு செய்ததன் வாயிலாக இது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, நேரான சாலையில் செல்லும்போது இந்த வாகனம் உங்களுக்கு செம்ம ஃபன்னான ரைடிங் அனுபவத்தை வழங்கும்.


Click it and Unblock the Notifications









