இப்படி ஓரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தான் தேடிட்டு இருந்தோம்! ரிவர் இண்டி இவி எப்படி இருக்குது?
பெங்களூருவை அடிப்படையாகக் கொண்ட எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனம் ரிவர் இவி இந்நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான இண்டி என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த மார்ச் மாதம் முதன்முறையாக பொதுவெளியில் காட்சிப்படுத்தியது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தனித்துவமான டிசைனுடன் "SUV of Scooters' என்ற டேக்லேனுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல்முறையாக பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்டு சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முதல் முறையாக விற்பனைக்கு வர தயாராகிவிட்டது. இந்த ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும்போது ரூ1.25 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அந்நிறுவனத்தின் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி எங்கள் குழு பெங்களூருவில் இந்த ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி பார்த்து ரிவ்யூ செய்தது. இதுதான் இங்கு விரிவாக காணப்போகிறோம்.
டிசைன் மற்றும் அம்சங்கள்: ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன் நிச்சயம் தனித்துவமான டிசைன் அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. மார்க்கெட்டில் உள்ள மத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசைனை போல இல்லாமல் இது தனித்துவமான பாக்ஸி செட்டப்பை முன்பக்கமும், பின்பக்கமும் கொண்ட ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆக இருக்கிறது.

முன்பக்கம் டூயல் ஸ்கொயர் எல்இடி ஹெட்லைட் WALL E கண்கள் போல வடிவமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க ஏப்ரான் மொத்தம் மூன்று விதமான கலர் ஆப்ஷன்களில் வருகிறது. மான்சூன் ப்ளூ, சம்மர் ரெட் ஸ்ப்ரிங் எல்லோ இந்த ஏப்ரான் கிளாசிக் பினிஷ் உடன் கூடிய முன்பக்க ஃபென்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் தான் டர்ன் இண்டிகேட்டர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் பக்கவாட்டுப் பகுதியில் சற்று தனித்துவமான லுக் கொண்டதாக இருக்கிறது. இதில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது, முக்கியமாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 14 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இது பார்க்க சிறப்பான லுக்கை தருகிறது இந்த பைக்கில் 6 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்கூட்டர் குறித்த முக்கியமான தகவல்கள் எல்லாம் வருகிறது. ரைடு மோடு, ஸ்பீடு முதல் சார்ஜிங் லெவல் வரை ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஃப்ளோர் போர்டு அகலமாக வழங்கப்பட்டுள்ளது. இது போக உயரமாக இருப்பவர்களும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டும் போது முட்டி ஹேண்டில் பாரில் தட்டாமல் இருக்கும் அளவிற்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து சுமார் 770 மிமீ உயரத்தில் சீட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டியூப்ளர் கார்ட் ரெயில் முன்பக்கம் வழங்கப்பட்டுள்ளது. இது ஃபூட் டிரஸ்டாகவும் பயன்படுத்த முடியும். ஃப்ளோர் போர்டில் ஏதாவது பொருட்களை எடுத்துச் சென்றால் கால்களை இந்த ஃபூட் ரெஸ்டில் வைத்துக் கொண்டு பயணிக்க முடியும். அதே நேரம் நீண்ட நேரம் பயணத்திற்கு கால்களை ரிலாக்ஸ் செய்ய இதை பயன்படுத்தலாம்.

இந்த ஸ்கூட்டரின் முன் பக்கம் உள்ள ஏப்ரான் பகுதியில் 12 லிட்டர் ஸ்டோரேஜ் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்டும் இருக்கிறது. இதுபோக சீட்டுக்கு கீழே 43 லிட்டர் ஸ்டோரேஜ் பகுதி இருக்கிறது இதில் ஒரு பெரிய ஹெல்மெட்டையே வைத்து செல்லும் அளவிற்கு இடவசதி இருக்கிறது. இதனால் அதிகமான பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பக்கம் மிகப்பெரிய செவ்வக வடிவிலான கிளாஸ் எல்இடி பிரேக் லைட் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேலே ரிவர் லோகோ வழங்கப்பட்டுள்ளது மேலும் டர்ன் இன்டிகேட்டரும் ரிப்லேக்ட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இது பார்க்கவே அம்சமாகவும், காண்பவர்களை ஈர்க்கும் வகையிலும் உள்ளது. மொத்தத்தில் இந்த ஸ்கூட்டரின் டிசைன் தனித்துவமாக இருக்கிறது.

ஸ்பெக் மற்றும் டைமென்ஷன்: ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை 1365 மீமி வீல் பேஸ் மற்றும் 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கிறது. இது 300 மிமீ அளவு கொண்ட தண்ணீரில் தாராளமாக கடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் சீட் 770 மிமீ உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஃப்ளோர் போர்டு 20 இன்ச் அகலம் கொண்டதாக இருக்கிறது.
இந்த ரிவர் இண்டி எலெக்டரிக் ஸ்கூட்டர் ஸ்டீல் பிரேம் செட்டப்பை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷனை பொருத்தவரை 32 மீமி ஸ்டெலஸ்கோப் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், டுவின் ஷாக் அப்சர்பர் பின்பக்கத்திலும், அலுமினியம் டூயல் சைடு ஸ்விங் ஆர்ம் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் நாம் முன்னரே குறிப்பிட்டது படி 14 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 120 செக்சன் பெரிய டயர் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் பவரை பொருத்தவரை காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக் 3 பிஸ்டன் கேலிபருடனும், பின்பக்கம் 200 மிமீ சிங்கிள் கேலிபர் டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக் வழங்க முக்கியமான காரணம் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் தான். இது 9 பிஎச்பி பவரையும் 26 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட மோட்டராக வழங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் ரியர் வீல், பெல்ட் டிரைவ் செட்டப் உடன் வழங்குகிறது.

இந்த ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை பொருத்தவரை ஐபி67 தரச் சான்று பெற்ற 4 கிலோவாட்ஹவர் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் என்எம்சி கெமிஸ்ட்ரி செல்கள் இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜில் 120 கிலோமீட்டர் வரை பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் வேர்ல்டில் 100 கிலோ மீட்டராவது பயணிக்கும். இந்த பேட்டரி 0-80 சதவீத சார்ஜை 5 மணி நேரத்தில் ஏற்றி விடும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தற்போது ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் இல்லை. இதனால் இந்த ஸ்கூட்டரை வேகமாக சார்ஜ் செய்ய முடியாது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் ஸ்கூட்டர் ஆகிய இரண்டுக்கும் ஐந்து ஆண்டுகள் அல்லது 50,000 கிலோமீட்டர் வரை வாரண்டியை ரிவர் நிறுவனம் வழங்குகிறது.
ரைடிங் இம்ப்ரஷன்: இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மொத்தம் எக்கோ, ரைடு, ரஷ் என்ற மூன்று ரைட்டிங் ஆப்ஷன்கள் உள்ளன. எக்கோ மோட்டில் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்க முடியும். அதுவே ரைட் மோடிற்கு மாற்றினால் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்க முடியும்.
இருப்பதிலேயே அதிக வேகத்தை வெளிக்காட்டும் மோடாக ரஷ் மோடு இருக்கிறது. இந்த மூடில் ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 0-40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 நொடிகளில் எட்டிப் பிடித்து விடும். அதே நேரம் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகம் வரை சீறிப்பாயும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரிவர் இண்டி ஸ்கூட்டரை ஓட்டி பார்க்கும்போது இதன் ஆக்சிலரேஷன் சீராகவும், முறையாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ரஷ் மோடில் பயன்படுத்தினால் வேகமாக பயணிக்க முடியும். மற்ற சாதாரண பயன்பாட்டிற்கு ரைட் மோடை பயன்படுத்தலாம். பேட்டரி பவர் குறைவாக இருக்கும் நேரத்தில் எக்கோ மோடில் போட்டு சார்ஜர் இருக்கும் இடம் வரை செல்ல பயன்படுத்தலாம்.
இந்த ஸ்கூட்டரை ஓட்டி பார்க்கும்போது இதில் உள்ள பெரிய டயருடன் கூடிய பெரிய வீல்கள் சாஃப்டான சஸ்பென்ஷன் செட்டப் ஆகியன சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக பள்ள மேடுகளில் ஓட்டி செல்லும் போது அதன் அதிருவுகள் பெரிய அளவில் டிரைவருக்கு வருவதில்லை. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வீல்பேஸ் கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் திருப்பங்களின் போது எந்தவிதமான பிரச்சனை ஏற்படுத்தாமல் ஸ்டேபிளாக இருக்கிறது.
இதன் பிரேக்குகளை பொருத்தவரை காம்பி ப்ரேக் சிஸ்டம் இருக்கிறது. ஆனால் அது சற்று வித்தியாசமாக செயல்படுவதை உணர்ந்தோம். நம் பின்பக்க பிரேக் பிடிக்கும் போது பின்பக்க பிரேக்குக்கு முன்பாகவே நாம் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாக முன்பக்க பிரேக் பிடிக்கிறது. ஆனால் பின்பக்க பிரேக் எங்கேஜ் ஆவது சற்று தாமதமாக இருக்கிறது. இதை சற்று வித்தியாசமாக நாம் உணர முடிகிறது.
இறுதி தீர்ப்பு: ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தனித்துவமான டிசைனுடன் அதிக அளவிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன் உடன் சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்ற ஸ்கூட்டராக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் இல்லாததும், இதன் காம்பி பிரேக் சிஸ்டத்தில் உள்ள வித்தியாசமான செயல்பாடுகளும் ஒரு பிரச்சினையாக இருந்தாலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாம் சிட்டி பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் வித்தியாசமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரும்பும் மக்களுக்காக பரிந்துரை செய்யலாம்.


Click it and Unblock the Notifications









