100% சார்ஜில் 163கிமீ பயணம்... கப்பல் மாதிரி இயங்கும் ரிவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி?

ஜப்பானை சேர்ந்த யமஹா உலகளவில் முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஆகும். அப்படிப்பட்ட யமஹா நிறுவனம் இந்தியாவில் பெங்களூருவை சேர்ந்த ஒரு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பார்த்து தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளது என சொன்னால் நம்ப முடிகிறது. அவ்வாறு யமஹாவை வசீகரித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் ரிவர் இண்டீ ஆகும்.

பெங்களூருவை சேர்ந்த ரிவர் நிறுவனத்தின் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புதியதாக 3வது ஜென்ரேஷன் அப்கிரேடை பெற்றுள்ளது. முதன்முதலாக 2023ஆம் ஆண்டில் இண்டீ ஸ்கூட்டரை ரிவர் அறிமுகம் செய்த நிலையில், அதற்குள்ளாக 3வது ஜென்ரேஷன் அப்கிரேட் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இவ்வாறு ஜென்ரேஷன் அப்கிரேட் வழங்கப்படும்போது வாகனத்தின் தோற்றம்தான் பெரியதாக மாற்றப்பட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சிகள் நடக்கும். மற்றப்படி, மெக்கானிக்கல் பாகங்களில் பெரியதாக மாற்றங்கள் இருக்காது.

river indie gen 3 test ride review

ஆனால், ரிவர் நிறுவனம் இண்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த முறை தோற்றத்தில் மாற்றம் கொண்டுவராமல், அதன் மெக்கானிக்கல் சிஸ்டத்தில் அப்கிரேட்களை கொண்டுவந்துள்ளது. இதனால், ஏற்கனவே ரிவர் இண்டீ ஸ்கூட்டரை ஓட்டியிருந்தாலும் அதன் புதிய 3வது ஜென்ரேஷனை ஓட்டி பார்க்க ஆவலாக இருந்தோம். அதன்படி, கிட்டத்தட்ட 1 வாரத்திற்கு இந்த புதிய ஸ்கூட்டரை ஓட்டிப் பார்த்தோம். அதன் மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இங்கே விரிவான ரிவியூ ஆக வழங்கியுள்ளோம்.

புதுசா என்னென்ன...

ரிவர் இண்டீ 3வது ஜென்ரேஷனில் மிக முக்கியமான மாற்றமாக பெல்ட் டிரைவ் சிஸ்டத்தில் இருந்து செயின் டிரைவ் சிஸ்டத்திற்கு ஸ்கூட்டர் மாற்றப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் செயின் & ஸ்ப்ராக்கெட் செட்-அப்பை குறைந்தது 20 ஆயிரம் கிமீ தொலைவிற்கு மாற்ற வேண்டிய தேவை இருக்காது என ரிவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

river indie gen 3 test ride review

இது முந்தைய பெல்ட் டிரைவ் சிஸ்டத்தின் 10 ஆயிரம் கிமீ ஆயுட்காலத்தை விட டபுள் மடங்கு அதிகமாகும். மேலும், இது அதிக இயக்க ஆற்றலை முன்பை விட இன்னும் வீரியமாக வழங்குகிறது. இதனால் ஆற்றல் பகிர்வு ஆனது முன்பை விட வேகமாக உள்ளதாக உணர்ந்தோம். செயின் டிரைவ் சிஸ்டம் ஆனது ஸ்கூட்டரில் பேனல்களுக்கு அடியில் மறைவாக வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தேவைப்பட்டால் பேனல்களை எளிதாக அகற்றி ஸ்கூட்டரின் செயின் டிரைவ் சிஸ்டத்தை தொடர்ந்து பராமரிக்கலாம். ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் சிறந்த பிடிப்புக்காக மேம்படுத்தப்பட்ட டயர்கள் புதிய ரிவர் இண்டீயின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். ஏற்கனவே வாங்கி பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில், ஓட்டுநர் இயக்கவியலும் திருத்தப்பட்டுள்ளது.

river indie gen 3 test ride review

மறுவடிவமைக்கப்பட்ட திரையில் துல்லியமான ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் தகவல்களை பெற முடிகிறது. மேம்பட்ட அப்ளிகேஷன் இணைப்புடன், பயணங்கள் குறித்த விவரங்கள் மற்றும் ரியல்-டைம் சார்ஜிங் நிலை விபரங்களையும் பெறலாம். புதிய ரிவர் இண்டீ ஜென் 3, முந்தைய மாடலை விட 7 கிலோ குறைவாக 135 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

கிரவுண்ட் கிளியரன்ஸ் 168 மில்லி மீட்டரில் இருந்து 177 மில்லி மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதால், உயரமான வேகத்தடைகளில் மோதும் பிரச்சனை இல்லை. ரிவர்ஸில் செல்ல முன்பு சிக்கலான 2-ஸ்டெப் ஃபங்க்‌ஷன் வழங்கப்பட்டது. அது தற்போது ஒற்றை பொத்தானாக மாற்றப்பட்டுள்ளது. பிரீமியம் தோற்றத்திற்காக இண்டீ வலிமையான ஹேண்டில்பார் கவர்கள், மேம்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாகங்கள், ஹேண்டில்பார் முனைகளில் கைவிரல் பாதுகாப்பான்களை பெற்றுள்ளது.

river indie gen 3 test ride review

எது எல்லாம் மாறவில்லை...

புதிய ரிவர் இண்டீ ஜென் 3 ஸ்கூட்டரில் மோட்டார் மாறவில்லை. வழக்கம்போல் ஸ்கூட்டரின் மத்தியில் வழங்கப்பட்டுள்ள மோட்டார், அதிகப்பட்சமாக 8.98 bhp (6.7 kW) மற்றும் 26 Nm டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டாரை இயங்க வைக்க 4 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியின் 100% டூ 0% சார்ஜில் கிடைக்கும் IDC ரேஞ்ச் 163 கி.மீ என கூறப்பட்டாலும், எங்கள் சோதனைகளில் 80 முதல் 100 கி.மீ வரை (மோட்களைப் பொறுத்து) ரேஞ்ச் கிடைத்தது. ஈக்கோ, ரைடு, ரஷ் என மூன்று ரைடிங் மோட்களுடன் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வருகிறது.

river indie gen 3 test ride review

ஏற்கனவே கூறியதுபோல், இண்டீயின் வடிவமைப்பும் மாறவில்லை. தனித்துவமான இரட்டை ஹெட்லேம்ப்கள், ஒருங்கிணைந்த கிராஷ் கார்டுகள், நீண்ட ஃபுட்போர்டு, முன் ஃபுட்பெக்குகள் மற்றும் பின்பக்கத்தில் செவ்வக வடிவ டெயில்லைட் ஆகியவை அப்படியே உள்ளன. பின் இருக்கையில் அமரும் பயணி கால் வைத்து கொள்வதற்கு ஸ்கூட்டரின் இரு பக்கங்களிலும் கூடுதலாக ஃபுட்பெக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

தேவைப்பட்டால் அவற்றை பொருட்களை கட்டி எடுத்துச் செல்லவும் பயன்படுத்தலாம். 1996 மி.மீ நீளமுள்ள இண்டீ, பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விட 100 மி.மீ அளவிற்கு நீளம் அதிகம் ஆகும். இந்த கூடுதல் இடத்தின் மூலமாக ஸ்கூட்டரை ஓட்டுபவர் நன்கு கால்களை நீட்டி அமர முடிகிறது.

river indie gen 3 test ride review

மேலும், இதன் மூலமாக நன்கு பெரியதாக 43 லிட்டர் கொள்ளளவில் அண்டர்சீட் ஸ்டோரேஜ் மற்றும் 12 லிட்டர் கொள்ளளவில் லாக் வசதியுடன் க்ளோவ்பாக்ஸ் (சார்ஜிங் போர்ட் உட்பட) பகுதியை இந்த ஸ்கூட்டரில் ரிவர் நிறுவனம் வழங்கியுள்ளது. ஓட்டுநர் மற்றும் பின் இருக்கைப் பயணி இருவருக்கும் அகலமான, நன்கு குஷன் உடன் கூடிய இருக்கை வழங்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து ரைடர் இருக்கை உயரம் 787 மில்லி மீட்டராக உள்ளது.

ஓட்டுவதற்கு எப்படி?

பயணத்தின்போது எங்களுக்கு ரிவர் இண்டீ ஜென் 3 பரிச்சயமான உணர்வை அளித்தது. சீராகப் புறப்பட்டு, எல்லா வேகங்களிலும் குறைந்த சத்தத்துடன் மோட்டார் இயங்குகிறது. மூன்று ரைடிங் மோட்களும் வெவ்வேறு பண்புகளை வழங்குகின்றன. ஈக்கோ மோட் ஆனது வேக வரம்பு உள்ள பகுதிகளுக்கும், குறுகிய தூர பயணங்களுக்கும் குறைந்த சார்ஜில் இயங்குவதற்கு ஏற்றதாக உள்ளது.

river indie gen 3 test ride review

ஆனால் சற்று வேகமாக செல்ல வேண்டிய நகரச் சாலைகளில் இதில் சற்று மந்தமாக உணரலாம். தினசரி நகரப் பயணங்களுக்கு 'ரைடு' மோட் உகந்தது. இதில் 80 கி.மீ/மணி உச்ச வேகத்தையும், சிங்கிள் சார்ஜில் 90 கி.மீ ரேஞ்சையும் அடையலாம். த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் மென்மையாகவும், படிப்படியாக இயக்க ஆற்றலை வழங்கக் கூடியதாகவும், சீராகவும் செயல்படுகிறது.

ரைடு மோடில் நகர நெரிசலில் எளிதாகக் ஸ்கூட்டரை கட்டுப்படுத்த முடிகிறது. நெடுஞ்சாலைகளில் முன்னால் செல்லும் வாகனங்களை முந்துவதற்கும் சீராக வேகத்தைக் கூட்டுகிறது. ரேஞ்சை பற்றி கவலைப்படாமல் உற்சாகத்தை விரும்புபவர்களுக்கு 'ரஷ்' மோட் ஏற்றது. இந்த மோடில் 90 கி.மீ/மணி என்கிற அதிகப்பட்ச வேகத்தையும், சிங்கிள் சார்ஜில் 70 கி.மீ ரேஞ்சையும் பெறலாம். ரஷ் மோடில் த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் மிகக் ஷார்ப்பாக உள்ளது.

river indie gen 3 test ride review

அதிக உற்சாகத்துடன் தினசரி பயணங்களை மேற்கொள்வதற்கும் இது ஏற்றதாக இருக்கும். மெக்கானிக்கல் பாகங்களை பொறுத்தவரையில், புதிய ரிவர் இண்டீ ஜென் 3 ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தாலும், சற்று இறுக்கமானதாக உள்ளது. முன்பக்க டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் விரைப்பானதாக பள்ளம் மேடுகளில் குலுக்கல்களை ஏற்படுத்தினாலும், பின்பக்க இரட்டை ஷாக் சஸ்பென்ஷன் செட்-அப் தினசரி பயணத்திற்கு சாலைத் தடைகளை ஓரளவு உறிஞ்சுகிறது.

இருப்பினும் ஒட்டுமொத்தத்தில் இந்த ஸ்கூட்டரில் வேகமாக பயணிக்கும்போது கரடுமுரடான பகுதிகளில் மேடு பள்ளங்கள் உணரப்படலாம். பின் இருக்கைப் பயணி உடன் செல்லும்போது குலுக்கல்கள் எதுவும் தெரியவில்லை. பெரிய அளவு மற்றும் 135 கிலோ எடை இருந்தபோதிலும், இண்டீ ஜென் 3 வியக்கத்தக்க வகையில் சுறுசுறுப்பானதாக உள்ளது. உடனுக்குடன் திசையை மாற்றி, போக்குவரத்து நெரிசலில் எளிதாக ஊடுருவ வழிவகுக்கிறது.

river indie gen 3 test ride review

80 கி.மீ/மணி வேகத்தை நெருங்கும்போது ஸ்கூட்டரில் சிறிது தடுமாற்றத்தை உணர்ந்தோம். முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே அதிக இடைவெளியை கொண்ட இவ்வாறான ஸ்கூட்டரில் சிறிய 14 அங்குல சக்கரங்களுடன் அத்தகைய சூழலை எதிர்கொள்வது சற்று சிரமமானதாக இருந்தது. பிரேக்கிங்கிற்கு சிபிஎஸ் உடன் 200 மி.மீ டிஸ்க் பிரேக்குகள் இரு சக்கரங்களிலும் உள்ளன.

முன் பிரேக் வலுவான பிடிப்பை வழங்குகிறது. பின் பிரேக்கைப் பயன்படுத்தும்போது சில சமயங்களில் முன்னோக்கி தள்ளபடுவதை நாங்கள் உணர்ந்தோம். இண்டீ ஜென் 3 அடாப்டிவ் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கையும் கொண்டுள்ளது. ரைடிங் பொசிஷன் இந்த ஸ்கூட்டரில் மற்றொரு சிறிய குறைப்பாடு ஆகும். இருக்கைக்கும், ஃப்ளோர் போர்டுக்கும் இடையேயான தூரம் குறைவாக இருப்பதால், முழங்கால்களை சற்று உயர்த்திய நிலையில் அமர வேண்டியுள்ளது.

river indie gen 3 test ride review

இதனால், ஓட்டுபவர் கால்களை நன்கு முன்னோக்கி நீட்டிக் கொண்டால், தளர்வாக அமரலாம். இருக்கையில் இருந்து ஹேண்டில்பார் அமைந்துள்ள தூரம் மற்றும் இருக்கையின் அகலம் தினசரி பயணத்திற்குப் போதுமானவை. ரிவர் இண்டீ ஜென் 3 ஸ்கூட்டர் உடன் 400 வாட்ஸ் மற்றும் 750 வாட்ஸ் என இரண்டு சார்ஜர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

750 வாட்ஸ் சார்ஜர், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் ஆக மூன்று மணி நேரத்திற்கும் சற்று அதிகமாகவும், முழு சார்ஜ் ஆக நான்கு மணி நேரத்திற்கும் சற்று அதிகமாகவும் எடுத்துக் கொள்கிறது. ரிவர் நிறுவனத்தின் ஸ்டாண்டர்ட் 400 வாட்ஸ் சார்ஜர் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லை. 750 வாட்ஸ் சார்ஜர் வேகமானது என்றாலும், அதில் நீண்ட கேபிள்களையும், பிற பிராண்டுகளின் ஃபாஸ்ட் சார்ஜிங் அமைப்புகளுடன் இணக்கத்தன்மையையும் ரிவர் வழங்கியிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

river indie gen 3 test ride review

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ரிவர் இண்டீ ஜென் 3 அதன் முந்தைய மாடலை விட ஒரு முழுமையான தயாரிப்பாக விளங்குகிறது. செயின் டிரைவ், எடை குறைப்பு, மேம்படுத்தப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை இண்டீயின் முந்தைய பதிப்புகளின் முக்கிய குறைகளை நிவர்த்தி செய்கின்றன. பயன்பாட்டை மையமாகக் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால், மிகப்பெரிய ஸ்டோரேஜ் இடவசதி, அதிகமான நிஜ உலக ரேஞ்ச், மென்மையான பவர்டிரெய்ன் உள்ளிட்டவற்றில் ரிவர் இண்டீ ஜென் 3 ஸ்கூட்டரை மிஞ்ச முடியாது.

மேலும் போட்டியாளர்களிடம் இருந்து தனித்து நிற்கும் வடிவமைப்பும் இதன் பலம் ஆகும். இருப்பினும், ரிவர் நிறுவனத்தின் சேவை நெட்வொர்க் முக்கிய நகரங்களுக்கு வெளியே குறைவாகவே உள்ளதை மறந்துவிட வேண்டாம். மற்றுமொரு முக்கிய குறைபாடு, வேகமான சார்ஜிங் மற்றும் பிற EV சார்ஜிங் அமைப்புகளுடன் இணக்கத்தன்மை இல்லாதது ஆகும்.

Article Published On: Saturday, May 23, 2026, 15:29 [IST]
English summary
River indie gen 3 test ride review in tamil design features battery range all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X