ஃபுல்-சார்ஜில் 150கிமீ ஓடக்கூடிய முதல் ராயல் என்ஃபீல்டு இ-பைக்! பின்னால் ஒருவரை வைத்து ஓட்ட எப்படி இருக்கு?
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் 'ஃபிளையிங் ஃப்ளீ' (Flying Flea) கான்செப்ட்டை 2024ஆம் ஆண்டின் இறுதியில் EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்திய போது ஒட்டுமொத்த நாடும் ராயல் என்ஃபீல்டு என்ன இப்படியொரு மோட்டார்சைக்கிளை மார்க்கெட்டில் களமிறக்குகிறது என ஆச்சிரியமாக பார்த்தனர். கடந்த 2025ஆம் ஆண்டில் அதே EICMA கண்காட்சியில் ஃபிளையிங் ஃப்ளீ கான்செப்ட்டில் இருந்து உருவாக்கப்பட்ட விற்பனைக்கு தயாரான மோட்டார்சைக்கிளை 'ஃப்ளையிங் ஃப்ளீ சி6' என்கிற பெயரில் களமிறக்கிய போது அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது.
ஏனெனில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எப்போதும் தனது பாரம்பரியமிக்க பெட்ரோல் என்ஜின் மோட்டார்சைக்கிள்களின் உறுமும் சத்தம் மற்றும் ரசிகர்கள் உடனான உணர்வுபூர்வமான நெருக்கத்திற்காக அறியப்படுகிறது. இத்தகைய ஓர் நிறுவனம், ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), ஹோண்டா (Honda), பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) போன்ற முன்னணி நிறுவனங்களை விட முன்னதாகவே எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

அப்போது பலரும் ராயல் என்ஃபீல்டு ஃப்ளையிங் ஃப்ளீ சி6 என்றால் என்ன என்று குழப்பமடைந்தனர். ஆனால், முதல்முறையாக அறிமுகமாகி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஃப்ளையிங் ஃப்ளீ சி6 தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. தற்போதைக்கு இது பெங்களூருவில் மட்டுமே கிடைக்கிறது. அங்கு இந்த எலெக்ட்ரிக் பைக்கை ஒரு நாள் முழுவதும் ஓட்டிப் பார்த்த எங்களது அனுபவங்களை இங்கே விரிவான ரிவியூ (Review) ஆக வழங்கியுள்ளோம்.
தோற்றம் மற்றும் வடிவமைப்பு
ராயல் என்ஃபீல்டு ஃப்ளையிங் ஃப்ளீ சி6 பைக்கை நேரில் பார்க்கும்போது முதலில் உங்களை ஆச்சரியப்படுத்துவது அதன் கச்சிதமான வடிவமைப்பு ஆகும். இது இன்றைய பெரிய, கம்பீரமான ராயல் என்ஃபீல்டு பைக் மாடல்களைப் போல இல்லை. மாறாக, இது சிறியதாகவும், மெல்லியதான தோற்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் பாராசூட் மூலம் போர் களத்திற்கு அனுப்பும் அளவுக்கு கச்சிதமாகவும், குறைந்த எடையிலும் இருந்த அன்றைய கால ஃப்ளையிங் ஃப்ளீ மோட்டார்சைக்கிளில் இருந்து இந்த வடிவமைப்பு பெறப்பட்டுள்ளது.

இந்த சிறிய மற்றும் கச்சிதமான உடலமைப்பு, ராயல் என்ஃபீல்டு ஃப்ளையிங் ஃப்ளீ சி6 பைக்கின் எடையை வெறும் 124 கிலோவாகக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. இதனை நிஜமாக்க, ராயல் என்ஃபீல்டு என்ஜினீயர்கள் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு தொடர்பில்லாத பல புதிய பொருட்களைப் பயன்படுத்தி கடினமாக உழைத்துள்ளனர் என்பது தெரிகிறது.
ஃப்ளையிங் ஃப்ளீ சி6 பைக்கின் பிரேம் ஆனது அலுமினியத்தால் ஆன சிங்கிள் பீஸாக உள்ளது. இது பேட்டரி பேக்கை பாதுகாக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. ஸ்விங்கார்ம் கூட அலுமினியத்தால் ஆனது. பேட்டரி கேசிங் மிகவும் இலகுவான மெக்னீசியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய மோட்டார்சைக்கிள் ஒன்றில் மெக்னீசியம் பயன்படுத்தப்பட்டிருப்பதை இதுவே முதல்முறை ஆகும்.

மெக்னீசியம் ஃபின்கள் பேட்டரி பேக்கை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன. இந்த இலகுவான பொருளுக்குக் கீழே ஆன்போர்டு சார்ஜர் உள்ளது. ஃப்ளையிங் ஃப்ளீ சி6 பைக்கின் மற்ற தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களில், பல தசாப்தங்களாக எந்த பைக்கிலும் காணப்படாத கிரிடர் சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் முக்கியமானதாக உள்ளன.
மிதப்பது போன்ற எஃபெக்ட்டில் இருக்கை வடிவமைப்பு (தேவையென்றால் பின் இருக்கையை பொருத்திக் கொள்ளலாம்), மெல்லிய 19-இன்ச் அலாய் சக்கரங்கள், எல்இடி விளக்குகள் மற்றும் வட்ட வடிவ திரை என இவை அனைத்தும் ஃப்ளையிங் ஃப்ளீ சி6 பைக்கை சாலையில் தனித்துவமாகக் காட்டுகின்றன.

ஆனால் ஃப்ளையிங் ஃப்ளீ சி6 பைக்கில் வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அம்சங்களை பார்க்கும்போது, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இதுவரை பயன்படுத்தாத பல அம்சங்களை பயன்படுத்தியுள்ளது என்பதை அறிய முடிகிறது. குறிப்பாக, புதிய யூசர் இன்டர்பேஸ் மற்றும் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய கிராபிக்ஸ் உடன் உள்ள 3.5 இன்ச் அளவிலான வட்ட வடிவ வண்ண டிஎஃப்டி தொடுதிரை ஆனது மற்ற எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
இந்த பைக்கில் உள்ள மற்ற சிறப்பம்சங்களில் கார்னரிங் ஏபிஎஸ், மிகவும் சென்சிட்டிவ் ஆன டிராக்ஷன் கண்ட்ரோல், சாவியில்லாமல் பைக்கை ஸ்டார்ட் செய்யும் வசதி மற்றும் சேசிஸ் ஃபிரேமில் உள்ள ஒரு கம்பார்ட்மென்ட்டில் உள்ள வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் வசதி ஆகியவை அடங்கும். எஃப்.எஃப் (FF) மொபைல் செயலி வழியாக மொபைல் போன் இணைப்பு சிறப்பாக செயல்படுகிறது.

இதன் மூலமாக, உங்களிடம் ஆண்ட்ராய்டு போன் இருந்தால், கூகுள் வரைப்படத்தை திரையில் காண முடியும். ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் தங்கள் மொபைல் போனின் திரையை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்க வேண்டியதாக உள்ளது. மேலும், தங்களது தனிப்பட்ட விஷயங்கள் வெளியில் தெரியக் கூடாது என நினைக்கும் ஓட்டுநர்களுக்காக டிஎஃப்டி தொடுத்திரையை இன்காக்னிட்டோ (Incognito) மோடில் பயன்படுத்தும் வசதியையும் ராயல் என்ஃபீல்டு வழங்கியுள்ளது.
ஹேண்டில்பாரின் இடதுபக்கத்தில் உள்ள ஒரு ரோட்டரி டயல் மூலம் ரைடு மோட்களை மாற்றலாம். இருப்பினும், இன்டிகேட்டர்கள் ஒரு ஸ்விட்ச் மூலம் இயக்கப்படுகின்றன. இது டிஎஃப்டி தொடுத்திரைக்கான கண்ட்ரோல்களுக்கு மத்தியில் தவறான இடத்தில் இருப்பதுபோல் தெரிகிறது; மேலும் அவை தானாக ரத்தாவதும் இல்லை. இந்த விலை வரம்பில் உள்ள ஒரு மோட்டார்சைக்கிளுக்கு இது எரிச்சலூட்டுவதாக உள்ளது.

மோட்டார், பேட்டரி பேக் மற்றும் சார்ஜிங்
ஃப்ளையிங் ஃப்ளீ சி6 சிறியதாக இருந்தாலும், இது குறிப்பிடத்தக்க ஆற்றலை வழங்குகிறது. ராயல் என்ஃபீல்டு தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கிற்காக 101 வோல்ட்டில் உயர் மின்னழுத்த சர்க்யூட் அமைப்பை உருவாக்கியுள்ளது. ஃப்ளையிங் ஃப்ளீ சி6 பைக்கின் நிரந்தர காந்தக மின்னியக்குவிசை மோட்டார் அதிகப்பட்சமாக 3,500 ஆர்பிஎம்-இல் 20.6 பிஎச்பி (15.4 கிலோவாட்ஸ்) ஆற்றலையும், 60 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.
ராயல் என்ஃபீல்டு கூற்றுப்படி, 3.7 வினாடிகளில் பைக் 0-இல் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டவும், மணிக்கு 115 கிமீ என்கிற உச்சப்பட்ச வேகத்தை அடையவும் இது உதவுகிறது. மோட்டாரில் இருந்து தொடர்ச்சியாக 10.72 பிஎச்பி (8 கிலோவாட்ஸ்) ஆற்றலை பெற முடிகிறது. அல்ட்ராவயலட் (Ultraviolette) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்குகளைத் தவிர, இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள மற்ற எல்லா எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விடவும் ஃப்ளையிங் ஃப்ளீ சி6 அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது.

இந்த மோட்டார் 3.91 kWh பேட்டரி உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 154 கிமீ ரேஞ்சை பெறலாம் என்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் (IDC-ஆல் சான்றளிக்கப்பட்டது). சார்ஜ் செய்ய வேண்டிய நேரம் வரும்போது, ஆன்போர்டு 2 கிலோவாட்ஸ் சார்ஜர் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக உள்ளது. நீங்கள் எந்தவொரு நிலையான 16 ஆம்பியர் சுவர் சாக்கெட்டிலும் பைக்கை சார்ஜ் செய்யலாம்.
இதன் மூலமாக, ஃப்ளையிங் ஃப்ளீ சி6 பைக்கின் பேட்டரியை 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய குறைந்தது 65 நிமிடங்கள் ஆகும். முழு 0-100 சதவீதம் சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் பதினாறு நிமிடங்கள் ஆகும். வேகம், சாதாரணம் மற்றும் ட்ரிக்கல் என மூன்று விதமான வேகங்களில் பேட்டரியை சார்ஜ் செய்யலாம். பயணத்தின்போது ஒவ்வொரு முறையும் பிரேக்கை பயன்படுத்தும்போது மற்றும் வேகத்தைக் குறைக்கும்போது ரீஜெனரேட்டிவ் சிஸ்டம் மூலம் பேட்டரி சார்ஜ் ஆகுகிறது.

பயண அனுபவம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய ஃபிளையிங் ஃப்ளீ சி6 பைக்கை 'சிட்டி-பிளஸ்' (City-Plus) மோட்டார்சைக்கிள் என்று அழைக்கிறது. இது உண்மையில் பைக்கிற்கு மிகவும் பொருத்தமான பட்டப்பெயர் என்றுதான் சொல்ல வேண்டும். மழை, நகரம், நெடுஞ்சாலை, ஸ்போர்ட் மற்றும் ஒரு தனிப்பயன் முறை (விருப்பத்திற்கேற்ப ரைடர் செட் செய்துக் கொள்ளலாம்) என இந்த பைக்கில் ஐந்து ரைடிங் மோட்கள் (Riding Modes) உள்ளன.
இவை ஒவ்வொன்றிலும் த்ரோட்டில் ரெஸ்பான்ஸ், பவர் லெவல், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் ஆகியவை வெவ்வேறு விதமாக அமைகின்றன. சாலையில் இயங்கும் விதத்தை பொறுத்தவரையில், சாலைகளில் ஃப்ளையிங் ஃப்ளீ சி6 எந்தவித சிரமமும் இல்லாமல் இயங்குகிறது. எந்த ரைடிங் மோடிலும் செயற்கையான வேக வரம்புகள் இல்லை, இதனால் ஓட்டும்போது பைக் சுறுசுறுப்பான உணர்வை அளிக்கிறது.

ரைடிங் மோட்களை மாற்றும்போது ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. இருப்பினும், 'சிட்டி' ரைடிங் மோடிலும் கூட, ஃப்ளையிங் ஃப்ளீ சி6 பைக்கில் ஓவர்டேக் செய்வது எளிதாக உள்ளது. இருப்பினும், நீங்கள் வேகமாக பைக்கை ஓட்ட விரும்பினால், 'ஸ்போர்ட்' ரைடிங் மோட் ஏற்றதாக இருக்கும். இதன் கூர்மையான த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் உங்களையும், சிக்னல்களில் சி6 பைக்கை கூர்ந்து பார்க்கும் பிறரையும் ஆச்சரியப்படுத்தும்.
ஏற்கனவே கூறியதுபோல், சி6 பைக்கின் அதிகபட்ச வேகம் 115 கிமீ/மணி ஆகும். நெடுஞ்சாலையில் போதுமான நேரமும் இடமும் இருந்தால், ஃப்ளையிங் ஃப்ளீ சி6 இந்த வேகத்தை எளிதாக அடைகிறது. நிஜ உலக ரேஞ்சைப் பொறுத்தவரை, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்து கலவையாக பயன்படுத்தியதில் சுமார் 100 கிமீ தூரத்தை அடைந்தோம்.

இருப்பினும், நீங்கள் 'ஸ்போர்ட்' ரைடிங் மோடில் மட்டுமே பயண செய்ய விரும்பினால், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 60-70 கிமீ ரேஞ்சை எதிர்பார்க்கலாம். மெல்லியதான 90-செக்ஷன் டயர்களுடன் கூடிய 19-இன்ச் சக்கரங்கள் அசாதாரணமாகத் தோன்றினாலும், அவை சுழலும்போது ஏற்படும் இடையூறுகளைக் குறைத்து, இயங்கும் தூரத்தை மேம்படுத்துகின்றன.
மெல்லியதான டயர்கள் ஓரிரு வளைவுகளில் பழகுவதற்கு நேரம் எடுத்தாலும், வழக்கமான சாலைகளிலும், கரடு முரடான பாதைகளிலும் கூட போதுமான பிடிமானத்தை வழங்குகின்றன. ஒட்டுமொத்த பயண தரம் உண்மையிலேயே ஈர்க்கக்கூடியதாக உள்ளது. மேலும் சமீபத்திய பல ராயல் என்ஃபீல்டு பைக் மாடல்களை விடவும் சிறந்ததாக உள்ளது. முன்புறத்தில் உள்ள கிரிடர் சஸ்பென்ஷன் ஃபோர்க் சாலை பள்ளம், மேடுகளை அமைதியாக உறிஞ்சி கொள்கிறது.

அதேபோல், பின்புறத்தில் உள்ள மோனோஷாக் சிறப்பாக செயல்படுகிறது; ஆனால் கூர்மையான பள்ளங்களையும் மேடுகளையும் உணர முடிவதால், முன்புறத்தை விட சற்று இறுக்கமாக உள்ளது. திடீரென கொடுக்கப்படும் ஸ்ட்ராங் பிரேக்கிங்கின் போதும் ஃபிளையிங் ஃப்ளீ சி6 நிலைத்தன்மை உடன் இருப்பது ஓட்டுபவருக்கும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுக்கும் நம்பிக்கையளிக்கிறது. முன்பக்க பிரேக் கூர்மையாகவும் கணிக்கக்கூடியதாகவும் உள்ளது.
இருப்பினும், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் அமைப்பினால், ஏபிஎஸ் (ABS) அடிக்கடி குறுக்கிடுவதால், பின்பக்க பிரேக்கை சற்று சிக்கலாக உணர்ந்தோம். முன் மற்றும் பின் பிரேக்குகள் இரண்டும் கை லீவர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. கால் மூலம் இயங்கும் பின்பக்க பிரேக்குகளில் பழகியவர்களுக்கு இது சற்று பழக வேண்டியிருக்கும். இருக்கையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பைக்கின் வடிவமைப்பில் செலுத்திய கவனத்தை பைக்கின் என்ஜினீயரிங்கிலும் செலுத்தியிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஆகையால், குறுகிய தூர நகர பயணங்களுக்கு புதிய ஃபிளையிங் ஃப்ளீ சி6 போதுமானதாக உள்ளது. ஆனால் நீங்கள் நீண்ட தூர பயணம் செய்ய விரும்புபவராக இருந்தால், ஃப்ளையிங் ஃப்ளீ சி6 பைக்கின் இருக்கை அசௌகரியமாக இருக்கும். நீக்கக்கூடிய பின் இருக்கை சிறியதாக உள்ளது; மேலும் பின் இருக்கை பயணி கால் வைக்கும் பகுதிகள் ஸ்விங்கார்மில் பொருத்தப்பட்டுள்ளன. அதாவது, அவை பின்பக்க சஸ்பென்ஷன் உடன் நகர்கின்றன, இது பின்னால் அமர்பவருக்கு வசதியாக இருக்காது என்று நாங்கள் நினைக்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ரூ.2.79 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில், புதிய ராயல் என்ஃபீல்டு ஃப்ளையிங் ஃப்ளீ சி6 உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றதாக இல்லாமல் போகலாம். ஆனால் ராயல் என்பீல்டின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான ஃப்ளையிங் ஃப்ளீ சி6, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு பைக் என்பதை சொல்லியே ஆக வேண்டும். இது வேகமானது, இலகுவானது மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்தது.

நகரத்திற்குள் ஓட்டுவதற்கு இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதன் கச்சிதமான பரிமாண அளவுகள் மற்றும் வழக்கத்திற்கு மாறான ஸ்டைல் காரணமாக இது எங்கு சென்றாலும் கவனத்தை ஈர்க்கிறது. இருப்பினும், ஃப்ளையிங் ஃப்ளீ சி6 பைக்கின் ரேஞ்ச் குறைவாக உள்ளது. இதனால் நகர பயன்பாட்டிற்கு அப்பால் எதற்கும் பொருந்தாது. மேலும் இது தற்போதைக்கு பெங்களூருவில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற நகரங்களுக்கு படிப்படியாக விற்பனைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில், நீங்கள் பிரீமியம் தரத்தில், நகரப் பயன்பாட்டிற்கு என்றே தனித்துவமான எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை தேடுகிறீர்கள் என்றால், மேலும் சிறந்த பொறியியல் மற்றும் தனித்துவமான தோற்றத்தைப் பாராட்டக் கூடியவர்கள் என்றால், ராயல் என்ஃபீல்டு ஃப்ளையிங் ஃப்ளீ சி6 பைக்கை தாராளமாக வாங்கலாம். இருப்பினும், நீங்கள் மிகவும் வழக்கமான தோற்றம் உடைய ஒன்றை விரும்பினால், ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃப்ளீ ஸ்க்ராம்ப்ளர் எஸ்6 (Scrambler S6) பைக்கிற்காக காத்திருக்க அறிவுறுத்துகிறோம்.


Click it and Unblock the Notifications









