பக்கா சென்னைக்காரங்க இரசனையில்... அமெரிக்க பைக் எல்லாம் தோற்று போகும்!! ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இந்தியாவின் முன்னணி பைக் உற்பத்தி நிறுவனம். மாதந்தோறும் கிட்டத்தட்ட இலட்சக்கணக்கிலான பைக்குகளை இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் விற்பனை செய்கிறது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது புது, புது பைக்குகளை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துவிடுகிறது. அந்த வகையில் புதியதாக விற்பனைக்கு வந்திருக்கும் ராயல் என்ஃபீல்டு பைக் தான், கோன் கிளாசிக் 350 (Goan Classic 350) ஆகும். கோவாவில் நடைபெற்ற 2024 மோட்டோவெர்ஸ் (Motoverse) கண்காட்சியில் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவா, இந்தியாவின் மோட்டார்சைக்கிள்களின் தலைநகரம் என சொல்லும் அளவிற்கு பைக் ரேசிங் பந்தயங்களுக்கு மிக பிரபலமானது. மேலும், கோவாவில் பைக்குகளை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்பவர்களும் அதிகமாக உள்ளனர். இத்தகைய ஊரில் நடந்த 2024 மோட்டோவேர்ஸ் நிகழ்ச்சியின் 2வது நாளில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் புதிய கோன் கிளாசிக் 350 பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

கோன் கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.35 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பைக் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே நமது டிரைவ்ஸ்பார்க் குழு கோன் கிளாசிக் 350 பைக்கை ஓட்டி பார்த்தது. அப்போது இந்த புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கை பற்றி எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இங்கு விரிவான ரிவியூவாக வழங்கியுள்ளோம். வாருங்கள் அதனை பற்றி இனி காணலாம்.
தோற்றம் & வசதிகள்: கோன் கிளாசிக் 350 ஆனது ராயல் என்ஃபீல்டின் புதிய பாப்பர்-ஸ்டைல் மோட்டார்சைக்கிள் ஆகும். அதாவது, ஒரேயொரு இருக்கை உடன் உயரமான ஹேண்டில்பாரை கொண்ட பைக். 1930ஆம் காலக்கட்டத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் இவ்வாறான பாப்பர்-ஸ்டைல் மோட்டார்சைக்கிள்கள் செயல்திறன்மிக்கவை ஆக விளங்குகின்றன. 1930களிலேயே வந்துவிட்டாலும், பைக் நிறுவனங்கள் இவ்வாறான பைக்குகளை 1940, 50களில் தான் அறிமுகம் செய்ய ஆரம்பித்தன.

ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 போன்ற இன்றைய கால பாப்பர்-ஸ்டைல் பைக்குகள் கவர்ச்சிக்கரமான கலர் ஆப்ஷன்களில், சிறிய அளவிலான பெட்ரோல் டேங்க் மற்றும் மேல் நோக்கி வளைக்கப்பட்ட ஸ்டைலிஷான சைலன்சர் குழாய் உடன் உருவாக்கப்படுகின்றன. புதிய ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பைக்கிலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறான பைக்குகள் பார்ப்பதற்கு பயங்கரமானதாக இருந்தாலும், ஓட்டுவதற்கு மிகவும் எளிதானவை.
புதிய கோன் கிளாசிக் 350 ஆனது அடிப்படையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் ஆகும். பாப்பர்-ஸ்டைல் தோற்றத்திற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹேண்டில்பாரின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாலும், இதற்கேற்ப ஹெட்லைட் கொஞ்சம் கீழிறக்கப்பட்டு உள்ளது. இதற்காக, பைக்கிற்கு முன்பக்கத்தில் ஃபெண்டரை சிறியதாக்கி உள்ளனர். பைக்கிற்கு முன்பக்கத்தில் 19-இன்ச் ஸ்போக்டு சக்கரம் ட்யூப்லெஸ் டயர் உடன் உள்ளது.

இதில் பைக்கின் டயரை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில், வித்தியாசமாக யோசித்து பைக்கின் டயர்களுக்கு வெள்ளை நிறத்தில் சுவரை ராயல் என்ஃபீல்டு கொடுத்துள்ளது. இது பைக்கிற்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளது. பைக்கிற்கு முன்பக்கத்தில் வட்ட வடிவில் எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலே புதிய மினி ஏப் ஹேங்கர் ஹேண்டில்பார் உள்ளது. ராயல் என்ஃபீல்டு 650சிசி பைக்குகளில் உள்ளதை போல் ஹேண்டில்பாரில் மெட்டல் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது.
ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை பயணத்திற்கான வழிக்காட்டும் வசதியை கொண்டதாக உள்ளது. நீர்த்துளி வடிவில் பெட்ரோல் டேங்க் மற்றும் நன்கு முன்பக்க வழங்கப்பட்ட டிரைவர் கால் வைக்கும் பகுதி உள்ளிட்டவை எல்லாம் நாம் எதிர்பார்த்தவை தான். ஓட்டுனரின் இருக்கை தாழ்வாக வழங்கப்பட்டுள்ளதால், ஹேண்டில்பாரை நன்கு மேல்நோக்கி பிடிக்க வேண்டியதாக இருக்கும்.

தேவையென்றால், கோன் கிளாசிக் 350 பைக் உடன் பின் இருக்கையையும் பெற்றுக் கொள்ளலாம். பைக்கின் பின்பக்க ஃபெண்டர் ஆனது சக்கரத்தை பிடித்திருக்கும் ஸ்விங்கார்ம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தை போல் பின்பக்கத்தில் பிளிங்கர்ஸ் உடன் வட்ட வடிவில் டெயில்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. பைக்கின் முன் சக்கரம் 19-இன்ச்சில் இருக்க, பின் சக்கரம் வெறும் 16-இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பைக்கிற்கு முக்கோண வடிவம் கிடைத்துள்ளது.
சக்கரங்கள் மற்றும் டயர்களில் வழக்கமான கிளாசிக் 350 பைக் உடன் ஒப்பிடுகையில், புதிய கோன் கிளாசிக் 350 பைக் வேறுப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே விற்பனையில் உள்ள கிளாசிக் 350 பைக்கில் 18-இன்ச்சில் பின் சக்கரம் பொருத்தப்படுகிறது. மொத்தம் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த பைக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாக் பிளாக், பர்பிள் ஹஸ், ரேவ் ரெட், ட்ரிப் டீல் என்பவை அவை ஆகும்.

இதில், ஷாக் பிளாக் கலர் ஆப்ஷனில் பைக் முழுவதுமாக கருப்பு நிறத்திலும், கிராஃபிக்ஸ் பளபளப்பான கருப்பு நிறத்திலும் கிடைக்கும். ஆனால், ராயல் என்ஃபீல்டு பிராண்ட் பேட்ஜ் மட்டும் கோல்டு நிறத்தில் கிடைக்கும். பர்பிள் ஹஸ் கலர் ஆப்ஷனில் அடர் மெட்டாலிக் பர்பிள் கலர் ஆப்ஷனில் பைக் கிடைக்கும். ரேவ் ரெட் பெயிண்ட் ஆப்ஷனில் ஹெவி மெட்டாலிக் சிவப்பு நிறத்தில் பைக் கிடைக்கும். இதற்கேற்ப இந்த ரெட் கலர் ஆப்ஷனில் அனோடைஸ்டு சக்கர ரிம்கள் கிடைக்கும்.
மேலும், ரேவ் ரெட் கலர் ஆப்ஷனில் ராயல் என்ஃபீல்டு பிராண்டின் பேட்ஜ் சில்வர் நிறத்தில் வழங்கப்படும். ட்ரிப் டீல் கலர் ஆப்ஷன் ஆனது கோவாவை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கலர் ஆப்ஷனில் பைக் பச்சை கலந்த நீல நிறத்தில் கிடைக்கும். ஆனால், பெட்ரோல் டேங்க் மட்டும் ஆரஞ்ச் நிறத்தில் கிடைக்கும். மேலும், இந்த ட்ரிப் டீல் கலர் ஆப்ஷனிலும் பைக்கின் சக்கரங்கள் அனோடைஸ்டு ரிம்கள் உடன் வழங்கப்படும்.

மெக்கானிக்கல் பார்ட்ஸ்: ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 பைக்கில் 349சிசி ஏர்-கூல்டு, SOHC என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6,100 ஆர்பிஎம்-இல் 20.2 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-இல் 27 என்.எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. புதிய கோன் கிளாசிக் 350 பைக் லிட்டருக்கு 36.2கிமீ மைலேஜ் தரக்கூடியது என ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.
ட்வின் டவுண்ட்யூப் ஸ்பைன் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 130மிமீ டிராவல் உடன் 41மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் 105.3மிமீ டிராவல் உடன் ட்வின் ஷாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், பின்பக்க சஸ்பென்ஷன் ஆனது 6-ஸ்டெப் ப்ரீலோடு அட்ஜெஸ்மெண்ட் வசதி உடன் உள்ளது.

பிரேக்கிற்கு முன் சக்கரத்தில் ட்வின்-பிஸ்டன் காலிபர்கள் உடன் 300மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் உடன் 270மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கூடுதல் பாதுகாப்பிற்கு ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் உள்ளது. சியட் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த பைக்கின் டயர்களில் முன் டயர் 100/90-19 அளவிலும், பின் டயர் 130/90-16 என்கிற அளவிலும் உள்ளன.
கோன் கிளாசிக் 350 பைக்கின் நீளம் 2,130மிமீ, அகலம் 825மிமீ, உயரம் 1,200மிமீ ஆகும். முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 1,400மிமீ ஆகும். கிளாசிக் 350 பைக் உடன் ஒப்பிடுகையில், புதிய கோன் கிளாசிக் 350 பைக் 15மிமீ தாழ்வானது; 40மிமீ கூடுதல் அகலமானது; 110மிமீ உயரமானது ஆகும். மேலும், முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் இந்த புதிய பைக்கில் 10மிமீ அதிகமாக உள்ளது.

அதேபோல், தரையில் இருந்து ஓட்டுனர் அமரும் இருக்கை ஆனது புதிய கோன் கிளாசிக் 350-இல் 55மிமீ தாழ்வானதாக உள்ளது. ஆனால், இரு பைக்குகளிலும் அடிப்பகுதி ஆனது ஒரே மாதிரியாக 170மிமீ ஆக உள்ளது. புதிய கோன் கிளாசிக் 350 பைக்கின் எடை முழு பெட்ரோல் டேங்க் உடன் 197 கிலோ ஆகும்.
ரைடிங் இம்பிரெஷன்ஸ்: புதிய ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 ஆனது ஓர் பக்கா பாப்பர்-ஸ்டைல் பைக் ஆகும். இதற்கேற்ப இந்த பைக்கிற்கு கண்ணை கவரக்கூடிய வண்ணங்களில் கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளதால், சாலையில் செல்லும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்க்டியதாக கோன் கிளாசிக் 350 உள்ளது.

ஏப்-ஸ்டைலில் ஹேண்டில்பார்ஸ், தாழ்வான இருக்கை மற்றும் நன்கு முன்பக்கமாக பொருத்தப்பட்ட ரைடர் கால் வைக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், இது மிகவும் சவுகரியமான ரைடிங் பொசிஷனை கொண்ட பைக் என்பது. கால்களை முன்னால் நீட்டிக் கொண்டு நன்கு சவுகரியமாக அமர்ந்துக் கொண்டு, ஹேண்டில்பார்களை பிடித்து தொங்கியப்படி இந்த பைக்கை ஓட்ட முடிகிறது.
இதனால், உடலை அதிகமாக அசைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. இருப்பினும், கோன் கிளாசிக் 350 பைக்கின் இந்த ரைடிங் பொசிஷன் ஆனது குறுகிய தொலைவு பயணங்களுக்கும், நகர்புற பயணங்களுக்கும் தான் சரியாக இருக்கும். தொலைத்தூர பயணங்களுக்கு கொண்டு சென்றால், இந்த சவுகரியமே உங்களுக்கு முதுகு வலியை ஏற்படுத்திவிடும். ரைடர் இருக்கை படகு போன்று சாய்வாக இருப்பதும் கூட சிலருக்கு முதுகு வலியை தரலாம்.

அதேபோல், உயரம் குறைவான ரைடர்களுக்கும் இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை ஓட்டுவதற்கு சற்று சிரமமாக இருக்கலாம். இந்த பிரச்சனையை தீர்க்க, கோன் கிளாசிக் 350 பைக்கிற்கு சில ஆக்ஸஸரீகளை ராயல் என்ஃபீல்டு வழங்கியுள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கே உண்டான உறுமும் சத்தத்தை இந்த பைக்கில் முதல் 3 கியர்கள் வரையில் நன்றாகவே கேட்க முடிந்தது.
டாப் கியரில் செல்லும்போதும் குறைவான வேகத்தில் சென்றால் சைலன்சரின் உறுமலை கேட்க முடிகிறது. டாப் கியரில் செல்லும்போது என்ஜின் பவர் அதிகமாக கிடைப்பது போல் நாங்கள் உணரவில்லை. இதற்கேற்ப இந்த பைக்கின் எடையும் குறைவாக உள்ளதால், என்ஜின் அதிகமாக உழைக்கும்போது அதிர்வுகளை உணர முடிந்தது. இந்த அதிர்வுகளை நம்மால் சமாளிக்க முடிகிறது என்றாலும், பயணத்தை ஜாலியாக என்ஜாய் செய்ய முடியவில்லை.

இருப்பினும், என்ஜின் உடன் இணைக்கப்பட்ட கியர்பாக்ஸ் மிகவும் மென்மையாக இருப்பதை சொல்லியே ஆக வேண்டும். இதனால், நெரிசல் மிகுந்த நகர்புறங்களிலும் ஓட்டுவதற்கு இது மிகவும் ஏற்ற பைக் ஆகும். சஸ்பென்ஷனை பொறுத்தவரையில், முன்பக்க சஸ்பென்ஷன் செட்-அப் மென்மையானதாக பள்ளம், மேடுகளை மென்மையாக கையாளக் கூடியதாக உள்ளது.
அதுவே, பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப் விரைப்பானதாக உள்ளது. இதனால், கொஞ்சம் வேகத்தில் செல்லும்போது, பள்ளம், மேட்டில் இறக்கி ஏற்றினால் இருக்கையில் இருந்து கொஞ்சம் விலகி போகிறோம். பைக்கின் அடிப்பகுதி மிகவும் தாழ்வானதாக இருப்பினும், நாங்கள் பார்த்த வரையில் எந்த பள்ளம், மேட்டிலும் அடிவாங்கவில்லை.

அதேபோல், வளைவுகளில் திரும்பும்போதும், பைக் தாழ்வானதாக இருப்பது பிரச்சனையாக தெரியவில்லை. இதனால், பைக்கை நன்றாகவே பேலன்ஸ் & கண்ட்ரோல் செய்ய முடிகிறது. பிரேக்குகளை பொறுத்தவரையில், முன் பிரேக் கொஞ்சம் விட்டு, விட்டு பிடிப்பதுபோல் எங்களுக்கு தெரிந்தது. ஆனால், பின்பக்க பிரேக் ஷார்ப்பாக இருந்தது. அதேபோல், பின்பக்க ஏபிஎஸ்-உம் நன்றாக செயல்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப்-10 பைக்குகளுள் ஒன்று. இதன் காரணமாகவே, கிளாசிக் 350 பைக்கை மேலும் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக கோன் கிளாசிக் 350 என்கிற புதிய பைக்கை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் இவ்வாறான பாப்பர்-ஸ்டைல் பைக்குகளுக்கு அந்த அளவிற்கு பெரிய மார்க்கெட் கிடையாது.
இதனால், புதிய கோன் கிளாசிக் 350 ஆனது அனைவரும் விரும்பக்கூடிய பைக் என சொல்ல முடியாது. குறிப்பாக, அவ்வப்போது தொலைத்தூர பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இந்த பைக் செட் ஆகாது. இதனை ராயல் என்ஃபீல்டு எவ்வாறு சமாளிக்க உள்ளது என்பதை பார்க்க ஆவலாக உள்ளோம். தினந்தோறும் குறுகிய தொலைவு பயணங்களுக்கு ஸ்டைலாக கொண்டு செல்ல ராயல் என்ஃபீல்டு கோன் கிளாசிக் 350 ஏற்றதாகும்.


Click it and Unblock the Notifications









