ஒட்டுமொத்த இந்தியாவே புக்கிங் போட ரெடியாகும் RE பைக் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு? மொத்தமும் மேட்-இன்-சென்னை!!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து புதியதாக 2026 குரில்லா 450 (Guerrilla 450) மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே விற்பனையில் இருந்த குரில்லா 450 பைக் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குரில்லா 450 பைக்கின் முந்தைய டாஷ் (Dash) மற்றும் ஃபிளாஷ் (Flash) என்கிற வேரியண்ட்களில் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ள நிலையில், புதியதாக 'அபெக்ஸ்' (Apex) என்கிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மார்க்கெட்டில் பிரபலமான ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 (Himalayan 450) பைக்கின் அதே பிளாட்ஃபார்ம் மற்றும் என்ஜின் சிஸ்டத்தை கொண்டு உருவாக்கப்படும் குரில்லா 450 பைக் கடந்த 2024 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வழங்கப்பட்டிருக்கும் மிக முக்கிய அப்கிரேட் இதுவாகும். இதன் மூலமாக, ஏற்கனவே குரில்லா 450 பைக்கை ஓட்டியவர்கள் தெரிவித்த குறைப்பாடுகளை ராயல் என்ஃபீல்டு சரி செய்துள்ளது.

அவை எந்த அளவிற்கு சரி செய்யப்பட்டுள்ளன?
புதிய குரில்லா 450 அபெக்ஸ் பைக்கை வாங்கலாமா? இந்த பைக் ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? என்கிற கேள்விகளுக்கு எல்லாம் விடை தேடும் விதமாக, புதிய 2026 ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 அபெக்ஸ் பைக்கை நாங்கள் ஓட்டிப் பார்த்தோம். அதன் மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இங்கே ரிவியூ (Review) ஆக வழங்கியுள்ளோம்.
புதிய அப்டேட்கள்: ஏற்கனவே கூறியதுபோல், 2026 குரில்லா 450 பைக்கில் முக்கிய அப்டேட்டாக புதியதாக ஸ்போர்டியரான அபெக்ஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதியதாக வழங்கப்பட்டுள்ள அலுமினியத்திலான ஹேண்டில்பாரினால் குரில்லா 450 அபெக்ஸ் வேரியண்ட்டில் ரைடிங் பொசிஷன் சிறப்பாக உள்ளது. மற்ற டாஷ் மற்றும் ஃபிளாஷ் வேரியண்ட்களுடன் ஒப்பிடுகையில், இந்த புதிய வேரியண்ட்டில் ரைடர் சற்று முன்னோக்கி மற்றும் தாழ்வாக அமர்ந்து பைக்கை ஓட்ட வேண்டியதாக உள்ளது.

இத்தகைய ரைடிங் பொசிஷன் நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் பைக்கை ஓட்டுவதற்கும், வேகமாக சீறி பாய்வதற்கும் ஏற்றதாக இருக்கும். மேலும், இதற்கேற்ப அபெக்ஸ் வேரியண்ட்டில் சாதாரணமான சாலைகளுக்கு ஏற்ற வ்ரெடெஸ்டைன் செண்டாரோ எஸ்டி (Vredestein Centauro ST) டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், டாஷ் மற்றும் ஃபிளாஷ் வேரியண்ட்களில் வழக்கமான ட்யூயல்-பர்பஸ் சியட் க்ரிப் எக்ஸ்.எல் ஆர்.இ டயர்களே தொடரப்பட்டுள்ளன.
இருப்பினும், அவற்றின் டயர்களிலும் புதிய டயர் மூலக்கூறுகளை பயன்படுத்தி, டயர் டிரெட் பேட்டர்னை மாற்றியமைத்து முன்பை விட கூடுதல் பிடிமானத்தை கொண்டுவந்துள்ளனர். இவை மட்டுமின்றி, வேறு சில பாகங்களும் மற்ற வேரியண்ட்களில் இருந்து அபெக்ஸ் வேரியண்ட்டை வேறுப்படுத்திக் காட்டுகின்றன. அவற்றில் முக்கியமானது, முன்பக்க கௌல் (Cowl) ஆகும்.

இது ராயல் என்ஃபீல்டு ஸ்க்ரம் 440 (Scram 440) பைக்கில் உள்ளதை போன்று எல்இடி ஹெட்லைட்டிற்கு மேலே வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பின்பக்க கௌலையும் தேவைக்கேற்ப நீக்கிக் கொள்ளலாம். அதாவது, பின் இருக்கையில் பயணி அமர்வதாக இருந்தால் பின்பக்க கௌலை நீக்கிக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் சிங்கிள் சீட் மட்டுமே கொண்ட பைக்காக இதனை பயன்படுத்த முடியும்.
இவற்றுடன், 2026 குரில்லா 450 பைக்கில் ஸ்ட்ரீட் மற்றும் ஸ்போர்ட் என்கிற இரு ரைடு மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. மெமரி செயல்பாட்டுடன் இந்த ரைடு மோட்கள் வழங்கப்பட்டுள்ளதால், பைக்கை ஆஃப் செய்யும்போது என்ன ரைடு மோட்-ஐ கொண்டிருந்தோமோ அதே ரைடு மோடில் பைக் ஸ்டார்ட் ஆகும். மெமரி செயல்பாட்டுடனான ரைடிங் மோட்கள் 2026 குரில்லா 450 பைக்கின் டாஷ் மற்றும் ஃபிளாஷ் வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், டாஷ் மற்றும் ஃபிளாஷ் வேரியண்ட்களுடன் சேர்த்து புதிய அபெக்ஸ் வேரியண்ட்டிலும் பயணத்திற்கான வழிக்காட்டியாக அப்டேட்டான திரை வழங்கப்பட்டுள்ளது. இதனால், பயணத்திற்கான வழிக்காட்டுதலை பெற மொபைல் போனை பயன்படுத்த தேவை இருக்காது. இருப்பினும், இந்த வசதி தற்போதைக்கு ஆண்ட்ராய்டு போன்களுடன் இணைக்கக்கூடியதாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
புதிய 2026 குரில்லா 450 பைக்கில் நான்கு புதிய கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மூன்று கலர் ஆப்ஷன்கள் புதிய அபெக்ஸ் வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன. அவையாவன, அபெக்ஸ் கருப்பு, அபெக்ஸ் சிவப்பு மற்றும் அபெக்ஸ் பச்சை ஆகும். இதில், அபெக்ஸ் கருப்பு கலர் ஆப்ஷனில் கருப்பு மற்றும் கிரே நிறங்களில் பைக்கின் பெட்ரோல் டேங்க் மற்றும் சைடு பேனல்கள் வழங்கப்படும்.

கருப்பு நிற பெட்ரோல் டேங்கில் இருந்து தனித்து தெரியும் வகையில், சிவப்பு நிறத்தில் 'Royal Enfield' லோகோ கிடைக்கும். அதுவே, அபெக்ஸ் சிவப்பு கலர் ஆப்ஷனில் சிவப்பு நிறத்திலான பெட்ரோல் டேங்கில் அடர் கிரே நிறத்தில் 'Royal Enfield' லோகோவும், அபெக்ஸ் பச்சை கலர் ஆப்ஷனில் பெட்ரோல் டேங்கின் பாதி அடர் பச்சை நிறத்திலும் கிடைக்கும். அதேநேரம், அபெக்ஸ் பச்சை கலர் ஆப்ஷனில் பைக்கை சுற்றிலும் சில பகுதிகளில் மஞ்சள் நிற ஸ்ட்ரிப் மற்றும் நீல நிற ஃபினிஷ் கிடைக்கும்.
மாற்றம் செய்யப்படாதவை
புதிய டயர்கள் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட ஹேண்டில்பார் செட்-அப்பை தவிர்த்து, 2026 ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக்கின் புதிய அபெக்ஸ், டாஷ் மற்றும் ஃபிளாஷ் வேரியண்ட்களில் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதன்படி, அதே 452சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஷெர்பா என்ஜின் தான் தொடரப்பட்டுள்ளது.

லிக்யுடு-கூல்டு என்ஜினான இது அதிகப்பட்சமாக 39 பிஎச்பி மற்றும் 40 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் & அசிஸ்ட் க்ளட்ச் வழங்கப்பட்டுள்ளது. ட்வின்-ஸ்பர் ஸ்டீல் ஃபிரேமில் உருவாக்கப்பட்டுள்ளதால் 2026 குரில்லா 450 பைக்கில் என்ஜின் இறுக்கமாகவும், பாதுகாப்பாகவும் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய குரில்லா 450 பைக்கில் சஸ்பென்ஷன் செட்-அப்பில் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், அவ்வாறு எதுவும் இல்லை. இதனால், முன்பக்கத்தில் அதே 43மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கத்தில் லிங்கேஜ்-டைப் மோனோஷாக் செட்-அப் தொடரப்பட்டுள்ளது. மேலும், 17-இன்ச் சக்கரங்களின் அளவுகளிலும் மாற்றமில்லை.

பைக் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?
2026 ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 பைக்கை நாங்கள் வழக்கமான நகர்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓட்டிப் பார்த்தோம். அத்துடன், கோ-கார்ட் (Go-kart) டிராக்கிலும் ஓட்டிப் பார்த்தோம். இதன் மூலம் பார்க்கையில், முந்தைய குரில்லா 450 பைக்கை ஓட்டியதற்கும் இதற்கும் கவனிக்கத்தக்க வித்தியாசங்கள் தெரிந்தன.
ஏற்கனவே கூறியதுபோல், புதிய அலுமினிய ஹேண்டில்பார் செட்-அப் புதிய அபெக்ஸ் வேரியண்ட்டில் முன்பை விட சற்று முன்னோக்கியும், தாழ்வாகவும் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான சாலைகளுக்கு மிகவும் ஏற்ற வ்ரெடெஸ்டைன் செண்டாரோ எஸ்டி டயர்களுடன் இத்தகைய ஹேண்டில்பார் செட்-அப் வழங்கப்பட்டுள்ளதால், காலியான சாலைகளில் சீறிப் பாய முடிகிறது.

மேலும், மலைப்பாதைகளிலும், கோ-கார்ட் டிராக்குகளிலும் கூட ஜாலியாக பைக்கை ஓட்ட முடிகிறது. ஹேண்டில்பார் கிரிப்பை பயன்படுத்துவதிலும், பைக்கின் எடை பெருமளவிற்கு முன்பக்கத்தில் இருப்பதாலும் இயக்கத்தின்போது பைக் செல்லும் திசையை எளிதாக மாற்ற முடிகிறது. ஹேண்டில்பாரில் கூடுதல் கிரிப் மற்றும் சாலைக்கேற்ற டயர்களினால் பெரிய வளைவுகள் நிறைந்த சாலைகளிலும் தைரியமாக பைக்கை ஹேண்ட்லிங் செய்ய முடிகிறது.
குரில்லா 450 பைக்கின் ஷெர்பா என்ஜின் வழக்கம்போல் நல்ல ரெஸ்பான்ஸ் உடன் செயல்படுகிறது. 3,000 ஆர்பிஎம்-ஐ தாண்டிய பின் என்ஜினின் ஆற்றல் இன்னும் சிறப்பாக கிடைக்கிறது. இதனால், மணிக்கு 100கிமீ மேலான அதிவேகத்திலும் என்ஜினில் இருந்து எந்த இடையூறுகளும் இன்றி ஜாலியாக பைக்கை ஓட்ட முடிகிறது. இருப்பினும், ஸ்ட்ரீட் மற்றும் ஸ்போர்ட் ரைடு மோட்களுக்கான வித்தியாசத்தை எங்களால் ஓட்டிப் பார்த்து கண்டறிய முடியவில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு எங்களுக்கு பைக்குடன் குறைவான நேரமே கிடைத்தது.

முன்னோக்கி சாய்ந்தப்படி, சற்று கவனத்துடன் ஓட்ட வேண்டிய ரைடிங் பொசிஷனை கொண்டிருப்பினும், புதிய குரில்லா 450 அபெக்ஸ் பைக் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்ற பைக் கிடையாது என எங்களால் கூற முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், முன்பை விட கூடுதல் சவுகரியமான பின்பக்க சஸ்பென்ஷன் மற்றும் 450சிசி பைக்குகளிலேயே மிகவும் சவுகரியமான இதன் சீட் பொசிஷன் ஆகும்.
எங்களுக்கு டெஸ்ட் ரைடு செய்து பார்க்க வழங்கப்பட்ட பைக்கில் பின் இருக்கை ஆனது லாக் செய்யப்பட்ட கௌல் உடன் வழங்கப்பட்டதால், புதிய குரில்லா 450 பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது எவ்வாறு உள்ளது என்பதை எங்களால் அறிய முடியவில்லை. இரு சக்கரங்களிலும் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏபிஎஸ்-ஐ ஆஃப் செய்து வைக்க முடியவில்லை என்றாலும், பைக்கின் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் சாலையில் கூடுதல் பிடிமானம் கொண்ட டயர்களினால் பைக்கை நிறுத்துவது மிகவும் எளிதாக உள்ளது. புதிய குரில்லா 450 பைக்கை பற்றி இத்தனை பிளஸ் பாயிண்ட்கள் இருந்த போதிலும், சில மைனஸ் பாயிண்ட்கள் இருப்பதையும் தவிர்க்க முடியவில்லை.
அவற்றுள் முக்கியமானது பைக்கின் பெட்ரோல் டேங்க் ஆகும். ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த பைக்கின் பெட்ரோல் டேங்கை இன்னும் கொஞ்சம் பெரியதாக வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பைக்கின் எடையை கருத்தில் கொண்டு இவ்வாறு அது வழங்கியிருக்கும் என கருதுகிறோம். அதேபோல், பின்பக்க சஸ்பென்ஷன் செட்-அப் நன்றாக இருப்பினும், தலைகீழான முன்பக்க ஃபோர்க்குகள் இன்னும் சிறப்பானதாக வழங்கப்பட்டிருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2026 குரில்லா 450 பைக்கில் வழக்கமான வேரியண்ட்களில் சில மாற்றங்களை செய்ததுடன், புதியதாக அபெக்ஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்திருப்பது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிறந்த முடிவாகவே நாங்கள் பார்க்கிறோம். அதை விட முக்கியமாக, அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட புதிய அபெக்ஸ் வேரியண்ட்டை கூடுதல் பிடிமானம் கொண்ட டயர்கள் உடன், தாழ்வான மற்றும் முன்னோக்கிய ரைடிங் பொசிஷனில் வழங்கி இருப்பது தினசரி பயணங்களுக்கான பைக்கை தேடுபவர்களை ஈர்க்கும்.
புதிய அபெக்ஸ் வேரியண்ட்டின் அறிமுகத்தின் மூலமாக, இந்தியாவின் விலை குறைவான மிடில்வெயிட் ரோட்ஸ்டர் பைக்குகள் வரிசையில் ராயல் என்ஃபீல்டு குரில்லா 450 முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். அதேநேரம், பழைய குரில்லா பைக் ரசிகர்களுக்காக டாஷ் மற்றும் ஃபிளாஷ் வேரியண்ட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications









