இப்போ புரியுது ஆல்டோ விலையை இந்த பைக்கிற்கு ராயல் என்பீல்டு ஏன் வச்சிருக்குனு.. சூப்பர் மீட்டியோர்650 ரிவியூ!
இந்தியாவில் க்ரூஸர் ரக இருசக்கர வாகனங்களுக்கான சந்தை மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது அசூர வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. லாங் டிரைவ் மற்றும் இருசக்கர வாகன ரைடை அதிகம் விரும்புவோர் மத்தியில் இந்த ரக பைக்குகளுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பதே அதன் வளர்ச்சிக்கான காரணமாக இருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவின் க்ரூஸர் இருசக்கர வாகன பிரிவை விரிவுப்படுத்தும் விதமாக ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியது. இந்த பைக்கையே நாங்கள் சமீபத்தில் டெஸ்டு ரைடு செய்து பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவம் மற்றும் பைக் பற்றி நாங்கள் தெரிந்துக் கொண்ட சில முக்கிய விஷயங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம்.

வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம். பதிவிற்குள் போவதற்கு முன்னர், நம்மில் பலருக்கு சூப்பர் மீட்டியோர் 650 பற்றிய தெரியாத ஓர் தகவலை பார்த்துவிடலாம். ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீட்டியோர் 650 எனும் பெயரை முதன் முதலில் மணிக்கு 100 மைல் (160.9 கிமீ) வேகத்தில் செல்லும் பைக்கிற்கே வைத்திருந்தது.
அந்த மோட்டார்சைக்கிள் 1959 இல் மிக சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதற்கு பின்னர் இப்போதே சூப்பர் மீட்டியோர் பெயரை தன்னுடைய இருசக்கர வாகனத்திற்கு உலகின் பழைமையான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு வைத்திருக்கின்றது. மேலும், ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை 2022இல் மிலனில் நடைபெற்ற ஐக்மா (EICMA) மோட்டார் ஷோவிலேயே முதல் முறையாக காட்சிப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து அதனை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கியது. இந்த வாகனத்தையே நாங்கள் பெங்களூருவில் உள்ள முக்கிய சாலை ஒன்றில் வைத்து ரைடு ரிவியூ செய்து பார்த்தோம். அது பற்றிய விரிவான தகவலைக் காணலாம், வாங்க.
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் (Royal Enfield Super Meteor 650 Design & Features): ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் இரட்டையர்கள் பைக் மாடலான கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகியவற்றை தயாரிக்க பயன்படுத்தும் அதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே சூப்பர் மீட்டியோர் 650 பைக்கையும் உருவாக்கி இருக்கின்றது.

ஒரே பிளாட்பாரத்தை பயன்படுத்தி இருந்தாலும் முற்றிலும் தனித்துவமான லுக் மற்றும் அம்சங்களைக் கொண்டதாகவே சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை ராயல் என்பீல்டு தயார் செய்திருக்கின்றது. நேர்த்தியான மற்றும் நீளமான க்ரூஸர் தோற்றம் அதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் தனித்துவமான டிசைனே இரட்டையர்கள் பைக் மாடல்களிடம் இருந்து அதனை தனித்துவமானதாகக் காண்பிக்கின்றது.
வட்ட வடிவ ஹெட்லைட், கண்ணீர் துளி போன்ற அமைப்புடைய ஃப்யூவல் டேங்க், ஸ்கூப் போன்ற வடிவிலான இருக்கை, முன் பக்கத்தில் புது ரகத்திலான ஃபூட்பெக்குகள், நீளமான மற்றும் தழ்வான ஸ்டைலில் எக்சாஸ்ட் குழாய் ஆகியவையே சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் தனித்துவமான தோற்றத்திற்கு காரணமாக இருக்கின்றது.

இதுதவிர பைக்கின் அழகிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக முன் மற்றும் பின் பக்கங்களில் கவர்ச்சியான ஃபென்டர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது தவிர, உயரமான மற்றும் அகலமான டூரிங் ஸ்டைல் ஹேண்டில்பார், பெரிய விண்ட்ஷீல்டு ஆகியவையும் பைக்கின் அழகிற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இதைத்தொடர்ந்து, மாடர்ன் கால சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் சிலவும் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த எல்சிடி திரை ப்யூவல் அளவு, கியர் பொசிஷன், இன்டிகேட்டர், ஓடோமீட்டர் மற்றும் ட்ரிப் மீட்டர் ஆகியவற்றின் தகவல்களை நமக்கு வழங்கும்.

மேலும், ப்ளூடூத் வாயிலாக செல்போனை இணைக்கும் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு இரண்டையும் இணைக்கும்போது டர்ன்-பை-டர்ன் நாம் செல்லும் வழி தடம் பற்றிய தகவலை அந்த சிறிய பாட் வழங்கும். இத்துடன், செல்போனை சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் சூப்பர் மீட்டியோர் 650 மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டிருக்கின்றது.
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் ஸ்பெக்ஸ் மற்றும் பரிமாணங்கள் (Royal Enfield Super Meteor 650 Specs & Dimensions) பற்றிய விபரம்: ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் 648 சிசி பாரல்லல் டவின் எஸ்ஓஎச்சி மோட்டாரையே பயன்டுத்தி இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். இதே மோட்டாரே இரட்டையர்கள் பைக்குகளில் ராயல் என்பீல்டு நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது. அதேவேளையில், அளவுகள் விஷயத்தில் இந்த பைக் 650 ட்வின் பைக்குகளிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்கின்றது.
2,260 மிமீ நீளம், 890 மிமீ அகலம் மற்றும் 1,155 மிமீ உயரத்துடன் சூப்பர் மீட்டியோர் 650 உருவாக்கப்பட்டு உள்ளது. இநத் க்ரூஸர் பைக்கின் வீல் பேஸ் 1,500 மிமீ ஆகும். தொடர்ந்து இந்த பைக்கின் உருவாக்கத்தில் புதிய சேஸிஸ் மற்றும் சஸ்பென்ஷன் ஆகியவையே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஸ்டீல் ட்யூப்ளர் ஸ்பின் ஃப்ரேமுடன் கூடிய 43 மிமீ யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், ட்வின் ஷாக்குகள் பின் பக்கத்திலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த இரண்டும் ஷோவா பிராண்டுடையது ஆகும். பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புதிய ஃப்ரேமே அதனை சற்று தாழ்வானமாக மாற்றியிருக்கின்றது.
இதன் இருக்கை உயரம் 740 மிமீ ஆகும். இந்த அளவு தாழ்வான உயரமே பைக்கின் இயக்கத்தை மிகவும் சுலபமானதாக மாற்றி இருக்கின்றது. அதேவேளையில், இதன் மிகக் குறைவான உயரம் காரணமாக சில நேரங்களில் இயக்கம் சற்று சிரமமாகவும் தென்படுகின்றது. டூ-வீலரில் மிக சிறந்த நிறுத்தம் அனுபவத்திற்காக இரு வீல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டிஸ்க் பிரேக் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

முன் பக்க வீலில் 320 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 300 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ட்வின் பிஸ்டன் காலிபர்கள் இரு டிஸ்க் பிரேக்குகளிலும் வழங்கப்பட்டிருக்கின்றது. இவை பைக்கின் உச்சபட்ச வேகத்தைக் கூட அசால்டாக கையாள உதவியாக இருக்கும்.
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் ரைடிங் அனுபவம் எப்படி இருந்தது? (Royal Enfield Super Meteor 650 Riding Impressions): க்ரூஸர் ரக பைக்கை அதிகம் விரும்புவர்களுக்கு இந்த பைக் மிகவும் பிடித்தாக இருக்கும். அதேநேரத்தில், மற்ற வழக்கமான மோட்டார்சைக்கிளை மட்டுமே ஓட்டி பழகியவர்களுக்கு இந்த பைக் ஆரம்பத்தில் சிரமமானதாக தெரியும்.

அதற்கு கால்கள் கூடுதலாக முன்னோக்கி வைக்க வேண்டும் என்பதே காரணமாக இருக்கின்றது. இந்த பைக்கில் சற்று தூரம் குறைவான டிராவலை மேற்கொள்ளும்போது எஞ்ஜின் குளிர்ச்சியாகவே இருக்கும். அதுவே, லாங் டிரைவ் சென்றீர்கள் என்றால் எஞ்ஜின் கடும் உஷ்னமாக தொடங்கும். இந்த உஷ்ணம் உங்களின் கால் வரைக்கும் தெரியும்.
சில நேரங்களில் இந்த உஷ்ணம் உங்களையே சிவப்பு நிறமாக்கிவிடலாம். இந்த பைக்கின் சஸ்பென்ஷன் செட்-அப் மிக சிறந்ததாக உள்ளது. ஆனால், பைக்கின் 240 கிலோ எடை குறைவான வேகத்தில் சற்றே கடினமானதாக பைக்கைத் தென்பட செய்கின்றது. அதேவேளையில் பைக்கின் சேஸிஸ் மற்றும் முன் பக்க யுஎஸ்டி ஃபோர்க் ஆகியவை பைக்கின் ரைடை மிகவும் சுவாரஷ்யமானதாக மாற்றி இருக்கின்றது.

ஆனால், பின் பக்க ஸ்பிரிங்கில் நம்மால் பெரிய அளவில் சௌகரியத்தை எதிர்பார்க்க முடியாது. ஆகையால், பின்னால் அமர்ந்து நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு லேசான சிரமமத்தை சூப்பர் மீட்டியோர் 650 வழங்கலாம் என யூகிக்க முடிகின்றது. இந்த பைக்கில் மிக எளிதான திருப்பங்களை எங்களால் செய்ய முடிந்தது.
அதுதவிர ஏபிஎஸ் மற்றும் டிஸ்க் பிரேக் செட்-அப் விரைவான நிறுத்தத்திற்கு ஏதுவானதாக இருந்தது. ஆனால், சீக்கிரமே வேலை செய்யத் தொடங்குவதைபோல் நாங்கள் உணர்கின்றோம். அது எரிச்சலூட்டும் வகையில் இருந்தது. இதைத்தவிர வேறு எந்த சிக்கலையும் க்ரூஸர் ரக பைக்கான சூப்பர் மீட்டியோர் 650இல் எங்களால் காண முடியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகக் கூடிய க்ரூஸர் ரக பைக்குகளில் சூப்பர் மீட்டியோர் 650ம் ஒன்றாக மாறி இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 3.5 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மிக சிறந்த நடுத்தர எடைக் கொண்ட க்ரூஸராக சூப்பர் மீட்டியோர் 650 காட்சியளிக்கின்றது. இதனாலேயே இந்தியர் க்ரூஸர் இருசக்கர வாகன பிரியர்களின் கனவு வாகனமாக இது மாறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









