ஏழை, எளியோர் எல்லாருக்குமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஓட்டி பார்க்கும்போது தான் சுஸுகியின் தரம் தெரியுது!!

சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இ-ஆக்ஸஸ் (e-Access) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்த சுஸுகி இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டர் கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது. மார்க்கெட்டில் இன்னும் அறிமுகம் செய்யப்படாத இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நாங்கள் பெங்களூரு சாலைகளில் ஓட்டி பார்த்து டெஸ்ட் ரைடு (Test Ride) செய்தோம். அப்போது ஸ்கூட்டரை பற்றி எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அனுபவங்களை ரிவியூவாக இங்கே வழங்கியுள்ளோம்.

தோற்றம்: பிரபலமான ஜப்பானிய 2-வீலர் நிறுவனமான சுஸுகி மோட்டார்சைக்கிள் உருவாக்கியுள்ள புதிய இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டர் ஆனது தோற்றத்தில் மிகவும் அட்வான்ஸானதாக உள்ளது. குறைந்தது 5 வருடங்கள் அல்லது அதற்கு மேலான வருடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது போன்றதான அட்வான்ஸான தோற்றத்தை கொண்டுள்ளது. விற்பனையில் இருக்கும் பெட்ரோல் இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டர் 2007ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் இருமுறை மட்டுமே அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

suzuki e-access electric scooter review

இதனால்கூட, இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் தோற்றம் முற்றிலும் அட்வான்ஸானதாக தெரியலாம். ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் சில ஷார்ப்பான லைன்கள் மற்றும் லேயர்கள் இடம்பெற்றுள்ளன. செவ்வக வடிவிலான ஹெட்லைட் சிஸ்டத்தில் அதற்கேற்றப்படியான தனித்துவமான கௌல் உள்ளது. ஹெட்லைட் செங்குத்தான வடிவில் இடம்பெற்றுள்ளது.

எல்இடி இண்டிகேட்டர்கள் இரண்டும் ஸ்கூட்டரின் முன்பக்கத்திற்கு இரு முனைகளிலும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் சுஸுகி லோகோ சற்று கீழே வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் கீழே ஃபெண்டர் உடன் டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷன் ஃபோர்க் மற்றும் 12-இன்ச் மெஷிண்டு அலாய் சக்கரம் உள்ளது. சக்கரத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

suzuki e-access electric scooter review

புதிய இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் பக்கவாட்டு ஆனது தற்போதைய ஆக்ஸஸ் ஸ்கூட்டரையே பெரிதும் ஒத்துக் காணப்படுகிறது. இருப்பினும், 'இ-ஆக்ஸஸ்' பேட்ஜ்ஜை புதியதாக பார்க்க முடிவதுடன், பேனல் ஒன்று பின் இருக்கைக்கு அடியில் இருந்து பின்பக்க பிரேக் லைட் வரையில் புதியதாக வழங்கப்பட்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த பேனலில் சுஸுகி நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த பேனல், ஹெட்லைட்டிற்கான கௌல் மற்றும் ஹெட்லைட்டை சுற்றியிருக்கும் பேனல்கள் உள்ளிட்டவை பளிச்சிடும் நிறத்தில் ஸ்கூட்டரில் இருந்து தனியாக தெரியக்கூடிய வகையில் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தை போலவே பின் சக்கரமும் 12-இன்ச் அலாய் சக்கரம் ஆகும். ஆனால், இதில் டிரம் பிரேக் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் டெயில்ல்லைட் ஆனது U-வடிவில் உள்ளது. அதற்கேற்ப எல்இடி இண்டிகேட்டர்கள் வளைக்கப்பட்டுள்ளன.

suzuki e-access electric scooter review

தொழிற்நுட்ப அம்சங்கள்: சுஸுகி இ-ஆக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.2 இன்ச்சில் முழு-வண்ண டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரை சுற்றி நிலவும் கால சூழலை பொறுத்து பகல் அல்லது இரவு மோட்களை ஆட்டோமேட்டிக்காக மாற்றக்கூடியதாக இந்த டிஸ்பிளே விளங்குகிறது. இந்த மோட்களை மேனுவலாகவும் மாற்றலாம். இந்த டிஸ்பிளே மூலமாக, எந்த ரைடு மோடில் ஸ்கூட்டரை இயக்குகிறோம், பேட்டரியின் சார்ஜ் சதவீதம் என்ன, ஸ்கூட்டரின் வேகம் என்ன உள்ளிட்ட விபரங்களை நேர்த்தியாக காட்டக்கூடியதாக உள்ளது.

இந்த மல்டி-இன்ஃபர்மேஷன் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் ஆனது ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலமாக ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியை ஏற்கக்கூடியதாக உள்ளது. இதனால், ரைடர் தனது மொபைல் போனை சுஸுகி கனெக்ட் மொபைல் செயலி மூலமாக ஸ்கூட்டர் உடன் இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலமாக மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் & குறுஞ்செய்திகளை ஸ்கூட்டரின் டிஸ்பிளேவில் கண்ட்ரோல் செய்யலாம்.

suzuki e-access electric scooter review

அத்துடன், பயணத்திற்கான வழிக்காட்டி மற்றும் வெப்ப காலநிலை குறித்த அப்டேட்களையும் ஸ்கூட்டரின் டிஸ்பிளே வாயிலாக பெறலாம். மேலும், ஸ்கூட்டரை நிறுத்துவதற்கான பார்க்கிங் பகுதியை அறிவது, வாகனம் குறித்த விபரங்கள், சேவை எச்சரிக்கைகள் மற்றும் டிஜிட்டல் வேலட் உள்ளிட்டவற்றையும் சுஸுகி கனெக்ட் செயலி மூலமாக பெறலாம்.

இதில் டிஜிட்டல் வேலட் ஆனது மூன்று ஓட்டுனர் உரிமங்களை சேமித்து வைக்கக்கூடியதாக உள்ளது. ஸ்விட்ச்கியர் உபயோகப்படுத்துவதற்கு மிகவும் சவுகரியமாக உள்ளது. பெட்ரோல் ஆக்ஸஸ் ஸ்கூட்டரில் ஹேண்டில்பாருக்கு வலதுப்பக்கத்தில் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யவதற்காக வழங்கப்படும் ஸ்விட்ச் இடத்தில் இ-ஆக்ஸஸில் ரைட் மோட்களை மாற்றுவதற்கான ஸ்விட்ச் இடம்பெற்றுள்ளது.

suzuki e-access electric scooter review

டிஎஃப்டி டிஸ்பிளேவுக்கே கீழே இடதுப்பக்கத்தில் சிறிய அளவிலான ஸ்டோரேஜ் பகுதி அரை லிட்டர் கொள்ளளவில் உள்ளது. இதற்கு பக்கத்திலேயே ஒளிரக்கூடிய 2ஏ யுஎஸ்பி மொபைல் போன் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த சிறிய ஸ்டோரேஜ் பகுதிக்கு அருகே மல்டி-ஃபங்க்சன் க்னாப் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி மாற்றி திருப்பவதன் மூலமாக ஸ்கூட்டரின் சார்ஜிங் பகுதியை அணுகுவதுடன், இருக்கைக்கு அடியில் உள்ள 17 லிட்டர்கள் கொள்ளளவிலான ஸ்டோரேஜ் பகுதியையும் பயன்படுத்தலாம்.

இயந்திர பாகங்கள்: இ-ஆக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.07kWh திறன் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி பேக்கை சுஸுகி வழங்கியுள்ளது. லித்தியம் ஃபெர்ரோ பாஸ்பேட் வேதியியல் கூற்றில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 95கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என சான்றளிக்கப்பட்டு உள்ளது.

suzuki e-access electric scooter review

வழக்கமான வீட்டில் உபயோகிக்கக்கூடிய ஏசி சார்ஜரின் மூலம் இந்த பேட்டரியை 80% சார்ஜ் நிரப்ப 4 மணிநேரங்கள் மற்றும் 30 நிமிடங்கள் தேவைப்படும். அதுவே, பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 6 மணிநேரங்கள் மற்றும் 20 நிமிடங்கள் தேவைப்படும். இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டர் ஆனது டிசி ஃபாஸ்ட் சார்ஜரையும் ஏற்கக்கூடியதாக உள்ளது. இதன் மூலம், 0-இல் இருந்து 80% சார்ஜை வெறும் 72 நிமிடங்களிலும், 100% சார்ஜை 2 மணிநேரம் 12 நிமிடங்களிலும் நிரப்பிவிடலாம்.

ஸ்கூட்டரின் 3.07kWh பேட்டரி ஆனது ஸ்கூட்டரின் பின்பக்க ஸ்விங்கார்மில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டாரை இயங்க வைக்கிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் மூலமாக அதிகப்பட்சமாக 5.49 பிஎச்பி மற்றும் 15 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. பெல்ட்-டிரைவ் சிஸ்டத்தின் மூலமாக மோட்டாரின் இயக்க ஆற்றல் ஆனது ஸ்கூட்டரின் பின் சக்கரத்திற்கு அனுப்பப்படுகிறது.

suzuki e-access electric scooter review

சுஸுகி இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டரில் ஈக்கோ, ரைடு மோட் ஏ மற்றும் ரைடு மோட் பி என மூன்று விதமான ரைடு மோட்களை பெறலாம். இதில், ஈக்கோ மோடில் அதிகப்பட்சமாக மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்ல முடிகிறது. இந்த ரைடு மோடில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தினால் மோட்டாரின் ஆற்றல் வீணடிக்கப்படுவது இல்லை.

ரைடு ஏ மோடில் உங்களால் அதிகப்பட்சமாக மணிக்கு 71கிமீ வேகத்தில் செல்ல முடியும். இந்த ரைடு மோடில் இன்னும் வலிமையான 2 கிலோவாட்ஸ் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் செட்டிங் பயன்பாட்டிற்கு வருகிறது. இதன் மூலமாக, இந்த ரைடு மோடி உங்களால் உடனடியாக ஸ்கூட்டரை நிறுத்த முடியும். ரைடு மோட் பி ரைடிங் மோடில் 1 கிலோவாட்ஸ் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் பயன்பாட்டிற்கு வருகிறது.

suzuki e-access electric scooter review

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டரில் தரையில் இருந்து ரைடர் இருக்கை ஆனது 765மிமீ உயரத்தில் உள்ளது. இருக்கையின் மொத்த நீளம் 842மிமீ ஆகும். 122 கிலோ எடை கொண்டதாக இருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தரையில் இருந்து ஸ்கூட்டரின் அடிப்பகுதி ஆனது 160மிமீ உயரத்தில் உள்ளது.

பயண அனுபவம்: புதிய சுஸுகி இ-ஆக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்ப்பதற்கு மட்டுமில்லாமல், பயன்படுத்துவதற்கும் செயல்திறன்மிக்க ஸ்கூட்டர் போன்று உள்ளது. இதனால்தான் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கோ-கார்டிங் (Go-Karting) விளையாட்டு நடத்தப்படும் டிராக்கில் டெஸ்ட் ரைடு செய்து பார்த்தோம். இருப்பினும், வெவ்வேறு விதமான மூன்று ரைடு மோட்கள் கொடுக்கப்பட்டு உள்ளதால், இதனை நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் பயன்படுத்தலாம்.

suzuki e-access electric scooter review

நகரத்திற்குள் ஓட்டுவதற்கு ஈக்கோ மோட் சரியானதாக இருக்கும். ஏனெனில், இதில் எலக்ட்ரிக் மோட்டாரின் பவர் தேவையான அளவிற்கு மட்டுமே கிடைப்பதால், நீண்ட நேரத்திற்கு சார்ஜ் இருக்கும். இந்த மோடில் அதிகப்பட்சமாகவே மணிக்கு 55கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல முடிகிறது என்றாலும், நகர சாலைகளில் ஓட்டுவதற்கு இந்த வேகமே போதுமானது.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது வேகமாக செல்ல வேண்டுமெனில், ரைடு மோட் ஏ என்கிற ரைடு மோடை பயன்படுத்தலாம். இதில் ஸ்கூட்டரின் முழு செயல்படுதிறன் வெளிப்படுகிறது. ரைடு மோட் பி என்கிற ரைடு மோடில் ரைடு மோட் ஏ-ஐ காட்டிலும் பாதி செயல்படுதிறன் கிடைக்கிறது. ஆனால், இந்த ரைடு மோடு பி ஆனது ரெண்டும் கெட்டானாக உள்ளது.

suzuki e-access electric scooter review

இந்த ரைடு மோடில் அடிக்கடி பிரேக்கை பயன்படுத்த வேண்டியதாக உள்ளது. ஸ்கூட்டரின் முன்பக்க டிஸ்க் பிரேக்கும் பெரியதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. சஸ்பென்ஷன் செட்-அப் ஆனது சற்று விரைப்பானதாக உள்ளது. அதாவது, போதுமான அளவிற்கு அழுத்தத்திற்கு உள்ளாகுவதில்லை. இதனால், மேடு பள்ளங்களில் அதிவேகமாக செல்லும்போது குலுக்கல்களை உணர முடிகிறது.

இருப்பினும், இவ்வாறான விரைப்பான சஸ்பென்ஷனினால் வளைவுகளில் திரும்பும்போது ஜாலியான உணர்வு கிடைப்பதை மறுக்க முடியாது. அதேபோல், ஸ்கூட்டரின் இருக்கை அமைப்பு சூப்பராக உள்ளதையும் கூறியே ஆக வேண்டும். உயரம் குறைவான ரைடர்களால் கூட சவுகரியமாக இருக்கையில் அமர்வதும், வெளியேறுவதும் முடிகிறது. இதற்கு, ரைடர் கால்களை வைத்துக் கொள்ளும் ஃப்ளோர்போர்டின் டிசைன் முக்கியமான காரணமாகும்.

suzuki e-access electric scooter review

உயரம் அதிகம் கொண்டவர்களால் கூட சவுகரியமாக கால்களை நீட்டி அமர்ந்து ஸ்கூட்டரை ஓட்ட முடிகிறது. மற்றப்படி, ஸ்கூட்டரின் பேட்டரியின் ரேஞ்சை சரிப்பார்க்கும் அளவிற்கு எங்களுடன் இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டர் நீண்ட நேரத்திற்கு இல்லை. ஆதலால், இதனை பற்றி இன்னொரு நாள் விரிவாக பார்ப்போம். ஸ்கூட்டருடன் 240 வாட்ஸ் சார்ஜர் கொடுக்கப்படுகிறது. இதன் உதவியுடன் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு சுமார் 6 மணிநேரத்திற்கும் அதிகமான நேரமாகும் என்பது சற்று முகம் சுளிக்க வைக்கிறது. நல்லவேளையாக, டிசி ஃபாஸ்ட் சார்ஜரை ஏற்கும் திறனை இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டருக்கு சுஸுகி வழங்கியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எல்லாவற்றையும் விட முக்கியமாக, இ-ஆக்ஸஸ் ஆனது இந்தியாவில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். வெளிநாடுகளில் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்தாலும், இந்தியாவில் இப்போதுதான் எலக்ட்ரிக் 2-வீலர்களை உருவாக்குவதில் ஆரம்ப கட்ட நிலையில் இருந்து சுஸுகி நிறுவனம் ஆரம்பிக்கிறது. இந்த சுஸுகி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஹோண்டா ஆக்டிவா இ (Honda Activa e) ஆனது பெரிய சவாலான போட்டியாக இருக்கும்.

suzuki e-access electric scooter review

ஆனால், ஆக்டிவா இ ஸ்கூட்டரில் பேட்டரி-ஸ்வாப்பிங் (Swapping) சிஸ்டம் வழங்கப்படுவது இந்த ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெரிய அனுகூலமாக இருக்கும். இதேபோன்றதான பேட்டரி-ஸ்வாப்பிங் சிஸ்டத்தை இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டரிலும் சுஸுகி வழங்கியிருக்கலாம். அதேபோல், இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டரில் பெரிய அளவிலான பேட்டரி வழங்கப்படும் என நினைத்தோம். ஆனால், 3.07kWh திறன் கொண்ட சிறிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்கூட்டரின் விலையை மட்டும் சரியாக நிர்ணயித்தால், இ-ஆக்ஸஸின் இந்த குறைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 30, 2025, 10:32 [IST]
English summary
Suzuki e access electric scooter first test ride review design features all details here
மேலும்... #suzuki motorcycle #bike review #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X