சிறந்த 125சிசி பைக் மாடல்கள்... உங்கள் தேர்வை எளிதாக்கும் தொகுப்பு!
100சிசி மற்றும் 110சிசி பைக்குகளுக்கு அடுத்ததாக கொஞ்சம் பெர்ஃபார்மென்ஸ் வேண்டும், அதேநேரம் மைலேஜிலும் சமரசம் செய்து கொள்ள விரும்பாதவர்களுக்கு சிறப்பான சாய்ஸ் 125சிசி பைக் மாடல்கள். தற்போது இந்த செக்மென்ட்டில் பல முன்னணி பிராண்டுகள் தங்களது தயாரிப்புகளை நிலைநிறுத்தியுள்ளன.
அதில் சிறந்ததை தேர்வு செய்யும்போது சில சாதக, பாதகங்கள் கண் முன் வந்து நிற்பது இயல்பு. இந்த நிலையில், உங்களது தேர்வை எளிதாக்கும் வகையில், மார்க்கெட்டில் இருக்கும் முன்னணி 125சிசி பைக்குகளின் சில முக்கிய அம்சங்களை ஒப்பீட்டு வழங்குகிறோம்.

முக்கிய குறிப்பு
ஒவ்வொரு பைக் மாடல்களின் விபரங்களும் தலா 2 ஸ்லைடுகளில் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. நிறுவனங்களின் தரப்பில் தெரிவிக்கப்படும் சோதனை நிலை மைலேஜ் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி ஷைன்
125சிசி செக்மென்ட்டில் ஷைன் மற்றும் ஸ்டன்னர் ஆகிய இரு பைக் மாடல்களை ஹோண்டா விற்பனை செய்கிறது. அதில், சிபி ஷைன் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றது என்பதால் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. டிசைன், எஞ்சின், பெர்ஃபார்மென்ஸ், மைலேஜ் என அனைத்திலும் தன்னிகரற்று விளங்குவதே விற்பனையில் முன்னிலை வகிப்பதற்கு காரணம். இதுவரை 30 லட்சம் ஷைன் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. மேலும், சிறப்பான ரைடிங் பொஷிசன் கொண்ட பைக் மாடலும் கூட. இதே செக்மென்ட்டில் ஹோண்டா விற்பனை செய்யும் ஸ்டன்னரின் டிசைன் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கிறது.

முக்கிய அம்சங்கள்
எஞ்சின்: 124.7சிசி ஏர்கூல்டு
பவர்: 10.12 பிஎச்பி @7500ஆர்பிஎம்
டார்க்: 10.54 என்எம் @5500ஆர்பிஎம்
கியர்பாக்ஸ்: 4 ஸ்பீடு
மைலேஜ்: 65 கிமீ/லி
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 10.5 லிட்டர்
எடை: 120 கிலோ
விலை: ரூ.52,063 - ரூ.59,248 (ஆன்ரோடு டெல்லி)

பஜாஜ் டிஸ்கவர் 125எம்
டிஸ்கவர் வரிசையில் புதிதாக வந்திருக்கும் புதிய பஜாஜ் டிஸ்கவர் 125 (டிஸ்கவர் 125எம்) தோற்றத்தில் பெரிய அளவில் வித்தியாசங்கள் இல்லை. இந்த பைக்கில் சாதகங்களும், பாதகங்களும் சமமாகவே இருக்கின்றன. இது புதிய மாடல் என்றாலும் தோற்றத்தில் புதுமையாக இல்லாதது குறையே. அதேவேளை, குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த தொழில்நுட்பத்தை கொண்ட மாடல். இதில் கேஸ் சார்ஜ்டு பின்புற ஷாக் அப்சார்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கொடுக்கும் பணத்திற்கு நிறைவான பைக் மாடலாக கூறலாம்.

இதர அம்சங்கள்
எஞ்சின்: 124.6சிசி டிடிஎஸ்-ஐ
பவர்: 11.5 எச்பி @8000ஆர்பிஎம்
டார்க்: 10.8 என்எம் @6000ஆர்பிஎம்
கியர் பாக்ஸ்: 4 ஸ்பீடு
மைலேஜ்: 76 கிமீ/லி
எடை: 118 கிலோ
விலை: ரூ48,500 முதல் ரூ.50,499 (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

ஹீரோ கிளாமர் FI
125சிசி மார்க்கெட்டில் அதிக விலை கொண்ட மாடல். இதன் அதிக எரிபொருள் சிக்கனம் வழங்க வல்லது. டியூவல் டோன் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கொண்டதாக சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது. இருப்பினும், டிசைனில் அதிக மாற்றங்கள் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இதே டிசைனை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை விற்பனை மூலம் ஹீரோ விரைவில் புரிந்து கொள்ளும்.

இதர அம்சங்கள்
எஞ்சின்: 124.8சிசி ஏர்கூல்டு (ப்யூவல் இன்ஜெக்ஷன்)
பவர்: 9.1 எச்பி @7000ஆர்பிஎம்
டார்க்: 10.35 என்எம் @4000ஆர்பிஎம்
கியர்பாக்ஸ்: 4 ஸ்பீடு
மைலேஜ்: 81.1 கிமீ/லி
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 12 லிட்டர்கள்
எடை: 129 கிலோ
விலை: ரூ.58,700 முதல் ரூ.62,750 வரை (டெல்லி எக்ஸ்ஷோரூம்).

டிவிஎஸ் ஃபீனிக்ஸ் 125
125சிசி செக்மென்ட்டின் பிரிமியம் மாடல் இதுதான் என்று டிவிஎஸ் கூறுகிறது. அப்பாச்சியில் இருப்பது போன்ற எல்இடி கெயிட் லைட்டுகள், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்கள். பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களும் பைக்ககுக்கு கவர்ச்சியை தருகிறது. நல்ல மைலேஜுடன் கூடிய சிறப்பான எஞ்சின் கொண்டது. டிஸ்க் பிரேக்குடன் கிடைக்கிறது.

இதர அம்சங்கள்
எஞ்சின்: 124.5சிசி ஈக்கோ த்ரஸ்ட்
பவர்: 11 எச்பி @8000ஆர்பிஎம்
டார்க்: 10.8 என்எம் @6000ஆர்பிஎம்
கியர் பாக்ஸ்: 4 ஸ்பீடு
மைலேஜ்: 67 கிமீ/லி
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 12 லிட்டர்கள்
எடை: 116 கிலோ
விலை: ரூ.49,850 முதல் ரூ.52,190, (டெல்லி எக்ஸ்ஷோரூம்).

யமஹா எஸ்எஸ்125
சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் விரும்புபவர்களின் முதல் தேர்வாக யமஹா பைக்குகள் இருக்கின்றன. அந்த வகையில், இப்போது யமஹாவின் எஸ்எஸ்125 பைக் வைத்திருப்பவர்களின் பின்னணியை ஆராய்ந்தால் பலர் அந்த நிறுவனத்தின் ஆர்எக்ஸ் பைக் மாடலை வைத்திருந்தவர்களாகவே இருக்கின்றனர். இதன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மிக விரைவான பிக்கப்பை வழங்குவதால் நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு சிறப்பாக இருக்கும். அதேசமயம் நல்ல மைலேஜையும் வழங்கும். பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரும், பெல்லி கவுலும் பைக்குக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொடுக்கிறது.

இதர அம்சங்கள்
எஞ்சின்: 123சிசி, ஏல்கூல்டு
பவர்: 11 எச்பி @7500 ஆர்பிஎம்
டார்க்: 10.4 என்எம் @6500
கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு
மைலேஜ்: 750 கிமீ/லி
பெட்ரோல் டேங்க் கொள்ளளவு: 13.6 லிட்டர்கள்
எடை: 125 கிலோ
விலை ரூ.54,642 டெல்லி எக்ஸ்ஷோரூம்

சுஸுகி ஸ்லிங்ஷாட்
சிறந்த தயாரிப்பை வைத்திருந்தும் 125சிசி செக்மென்ட்டில் சுஸுகி தடுமாறி வருகிறது. மென்மையான கியர் ஷிப்ட், சிறந்த எஞ்சின் கொண்டது. எந்த கியரில் செல்கிறோம் தெரிவிக்கும் கியர் ஷிப்ட் இன்டிகேட்டர் ஒரு பயனுள்ள வசதி. டிசைனும் குறை சொல்ல முடியாது. ஆனால், போட்டியாளர்களைவிட குறைவான சக்தி கொண்ட எஞ்சினுடன் வருவது குறையாக இருக்கிறது.

இதர அம்சங்கள்
எஞ்சின்: 124சிசி ஏர்கூல்டு
பவர்: 8.8 எச்பி @7000 ஆர்பிஎம்
டார்க்: 10 என்எம்
கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு
மைலேஜ்: 75 கிமீ/லி
பெட்ரோல் டேங்க் கொள்ளளவுச 12 லிட்டர்கள்
எடைச 129 கிலோ
விலை: ரூ.56,352 முதல் ரூ.58,077 வரை (டெல்லி எக்ஸ்ஷோரூம்).

எது பெஸ்ட்?
இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு மாடலும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை பெற்றுள்ளது. டிசைன், பெர்ஃபார்மென்ஸ், மைலேஜ், விலை என வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் அந்த தேர்வு அமையும். ஆனால், ஒட்டுமொத்தத்தில் ஓர் மாடலை கூறுங்கள் என்றால் பஜாஜ் டிஸ்கவர் 125எம் பைக் சிறந்ததாக கூறலாம். டிசைன், மைலேஜ், பெர்ஃபார்மென்ஸ், விலை என அனைத்து விதத்திலும் கொடுக்கும் பணத்திற்கு சிறப்பான மாடல் டிஸ்கவர் 125 எம்.


Click it and Unblock the Notifications








