200சிசி - 250சிசி மார்க்கெட்டில் சிறந்த பைக்குகளின் ஒப்பீட்டு விபரங்கள்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய மார்க்கெட்டில் 150சிசிக்கு மேலே செல்லும் வாடிக்கையாளர்களுக்கு போதுமான பைக் மாடல்கள் கிடையாது. பல்சர் மற்றும் கரிஷ்மா மட்டுமே சாய்ஸ். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக 150சிசிக்கும் மேற்பட்ட செக்மென்ட்டில் பல்வேறு விதமான மாடல்கள் வரிசை கட்டத் துவங்கியுள்ளன.
வாடிக்கையாளர்களின் தேர்வுக்கும் போதுமான மாடல்கள் வந்து விட்ட, வந்து கொண்டிருக்கும் 200சிசி மற்றும் 250சிசி மார்க்கெட்டில் ரூ.2 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் முக்கிய பைக் மாடல்களின் ஒப்பீட்டு விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பஜாஜ் பல்சர் 220எஃப்
விலை: ரூ.94,028
சராசரி மைலேஜ்: 45 கிமீ/லி
பெட்ரோல் டேங்க்: 15 லிட்டர்
எஞ்சின்: 220சிசி
பவர்: 21.05 எச்பி, 19.12 என்எம் டார்க்
டாப் ஸ்பீடு: மணிக்கு 135 கிமீ

அதிவேக இந்திய பைக்
இந்திய தயாரிப்பு வகையில், அதிவேக மோட்டார்சைக்கிளாக பல்சர் 220 எஃப் பைக் விளங்குகிறது. ஆனால், நவீன தொழில்நுட்பங்களுடன் பைக்குகள் வரிசை கட்டும் நிலையில், தொழில்நுட்பத்தில் மேம்படாத எஞ்சின் கொண்டிருப்பதால் பின்தங்கிவிட்டது. ஆனால், இந்த செக்மென்ட்டில் குறைந்த விலை கொண்டதாக இருக்கிறது.

ஹீரோ கரிஷ்மா இசட்எம்ஆர்
விலை: ரூ.1.14 லட்சம்
மைலேஜ்: 40 கிமீ/லி
பெட்ரோல் டேங்க்: 16 லிட்டர்
எஞ்சின்: 223சிசி
பவர்: 17.6 எச்பி, 18.35 என்எம் டார்க்
டாப் ஸ்பீடு: மணிக்கு 130 கிமீ

செமி டூரர்
கரிஷ்மா ஆர் பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலாக 2009ல் அறிமுகமானது. முழுவதும் ஃபேரிங் பேனல்களுடன் ஸ்போர்ட்ஸ் பைக் ஸ்டைலில் டிசைன் கொண்டது. பல்சர் 220 எஃப் பைக்கைவிட பெர்ஃபார்மென்சில் சிறிது பின்தங்கினாலும், ஸ்போர்ட்ஸ் பைக் ஸ்டைல் கொண்ட குறைந்த விலை மாடல் என்பது இதற்கு வலு சேர்க்கிறது. அகலமான இருக்கைகள், சிறந்த கையாளுமை கொண்டது. இதனை பட்ஜெட் டூரர் பைக்காகவும் கூறலாம்.

பஜாஜ் பல்சர் 200 என்எஸ்
விலை: ரூ.98,185
மைலேஜ்: 35 கிமீ/லி
பெட்ரோல் டேங்க்: 12 லிட்டர்
எஞ்சின்: 199சிசி
பவர்: 23.52 எச்பி, 18.3 என்எம் டார்க்
டாப் ஸ்பீடு: மணிக்கு 135 கிமீ

பட்ஜெட் மாடல்
பஜாஜ் வழங்கும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட பைக் மாடல் இது. கேடிஎம் டியூக் 200 என்எஸ் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் ட்யூனிங் செய்து பொருத்தப்பட்டிருக்கிறது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் டிசைன் பிரிவு தலைவராக பணியாற்றி பஜாஜ் டிசைன் பிரிவு தலைவராக வந்த எட்கர் ஹென்ரிச் தலைமையில் வடிவமைக்கப்பட்ட பைக் மாடல் பல்சர் 200 என்எஸ். கேடிஎம் டியூக் 200 என்எஸ் பைக்கைவிட குறைந்த விலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளுக்கு பட்ஜெட் விலையிலான சிறந்த பைக்.

கேடிஎம் டியூக் 200 என்எஸ்
விலை: ரூ.1.46 லட்சம்
மைலேஜ்: 30 கிமீ/லி
பெட்ரோல் டேங்க்: 10.5 லிட்டர்
எஞ்சின்: 199.5சிசி
பவர்: 25 எச்பி, 19.2 என்எம் டார்க்
டாப் ஸ்பீடு: மணிக்கு 135 கிமீ

வெற்றி நாயகன்
இந்த செக்மென்ட்டில் சிறந்த பைக் மாடல். தினசரி பயணங்களுக்கு ஏற்ற சிறந்த பட்ஜெட் பெர்ஃபார்மென்ஸ் பைக். சிறந்த ரைடிங் பொஷிசன் கொண்டதுடன் கையாளுமையில் ஜோராக இருப்பதால் விற்பனையிலும் வெளுத்துக் கட்டி வருகிறது. ஆனால், குறைந்த கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் இதன் மைனஸ்.

ஹோண்டா சிபிஆர் 250ஆர்
விலை: ரூ.1.81 லட்சம், ஏபிஎஸ் ரூ.2.12 லட்சம்,
மைலேஜ்: 25 கிமீ/லி முதல் 30 கிமீ/லி
பெட்ரோல் டேங்க்: 13லி
எஞ்சின்: 249சிசி
பவர்: 25 எச்பி, 22.9 என்எம் டார்க்
டாப் ஸ்பீடு: மணிக்கு 140 கிமீ

நம்பகமான மாடல்
நின்ஜா 250 ஆர் மார்க்கெட்டிலிருந்து விலகியுடன் இந்த செக்மென்ட்டில் கிடைக்கும் சிறந்த கால் லிட்டர் எஞ்சின் கொண்ட மாடல். இதில், ஏபிஎஸ் வேரியண்ட்டும் கிடைக்கிறது. பேர்டு வெர்ஷனான சிபிஆர் 250ஆர் மைலேஜ், தோற்றம், பெர்ஃபார்மென்ஸ் என அனைத்திலும் சிறந்தது.

எது சிறந்தது?
விலை, மைலேஜ் பற்றி கவலை இல்லையென்றால் கேடிஎம் ட்யூக் 200 மற்றும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் சிறந்த மாடல்கள். இதில், கேடிஎம் டியூக் 200 பைக் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற மாடலாக கூறலாம். சிறந்த ரைடிங் பொஷிசன் கொண்டிருப்பதும் டியூக்கை தேர்வு செய்ய கூடுதல் காரணம். ஃபேர்டு மாடலை விரும்புபவர்களுக்கு மிகச்சிறந்த எஞ்சின் கொண்ட சிபிஆர் 250 ஆர் பெஸ்ட். பல்சர் 220எஃப் மற்றும் கரிஷ்மா இசட்எம்ஆர் பைக்குகளின் புதிய மாடல்கள் வர இருப்பதால் அவற்றை ஒதுக்கிவிடலாம். பட்ஜெட், மைலேஜையும் கவனத்தில் கொள்பவர்களுக்கு பல்சர் 200 என்எஸ்தான் சாய்ஸ். இந்த லிஸ்ட்டில் யமஹா இன்னமும் நுழையாதது துரதிருஷ்டவசமே.


Click it and Unblock the Notifications








