பைக்கை நிறுத்தவே மனம் வரல!! டிரையம்ப் மொத்தமா அசத்திடுச்சு... இந்த பைக்கில் அப்படி என்னதான் இருக்கு?
பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள் நிறுவனமான டிரையம்ப், நம்ம ஊர் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய புதிய ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
இதில், ஸ்பீடு 400 பைக்கை உடனடியாக இந்தியாவில் டிரையம்ப் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்து விட்டது. ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக் சில வாரங்கள் கழித்து, சமீபத்தில்தான் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், புதிய டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கை டெஸ்ட் ரைடு செய்து பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் எங்களுக்கு கிடைத்தது. அதன் மூலம் இந்த பைக்கை பற்றி நாங்கள் அறிந்துக்கொண்ட விஷயங்களை ரிவியூவாக இங்கு வழங்கியுள்ளோம்.

தோற்றம் & வசதிகள்: புதிய விலை குறைவான டிரையம்ப் பைக்குகளான ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்குகள் இரண்டும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைகளாக உள்ளன. ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக் கரடு, முரடான அட்வென்ச்சர் பாதைகளுக்கும் கொண்டுச் செல்லக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஸ்பீடு 400 பைக்கை காட்டிலும் இது நன்கு உயரமானதாக உள்ளது.
எல்இடி விளக்குகள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்விட்ச் கியர், கருப்பு நிறத்தில் பவுடர்-கோட்டட் என்ஜின் கேஸ், கோல்டன் நிறத்தில் முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள், ரைடரின் கால்முட்டி உரசல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பேட் உடன் பெட்ரோல் டேங்க் மற்றும் மேல்நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவை ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கின் தோற்றத்தில் உள்ள முக்கிய சிறப்பம்சங்களாகும்.

ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த பாகங்களை டிரையம்ப்பின் ஸ்பீடு 400 பைக்கிலும் காண முடிகிறது. ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கில் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளவை என்று பார்த்தால், ஹெட்லைட் கிரில், சம்ப் & ரேடியேட்டர் பாதுகாப்பான்கள், ஹேண்டில்பாரில் பிரேஸ் பேட் & ஹேண்ட் கார்ட்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கின் இருக்கை இரண்டாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் கால் வைக்கும் கம்பிக்கு சவுகரியத்துக்காக ரப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. எக்ஸாஸ்ட் குழாய் இந்த பைக்கில் இரட்டை முனைகளை கொண்டதாக உள்ளது. ஆனால், ஸ்பீடு 400 பைக்கில் சிங்கிள் முனை ஆகும்.

டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கில் வழங்கப்பட்டுள்ள ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல், டார்க்-உதவி கொண்ட கிளட்ச், போஸ்ச் நிறுவனத்தின் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ், ஸ்டேரிங் லாக் மற்றும் பைக் திருடு போவதை தடுக்கும் இம்பொளிசர் உள்ளிட்டவற்றை புதிய ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கிலும் பெறலாம். கூடுதலாக, இந்த ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் பின் சக்கரத்தில் தேவைக்கேற்ப ஏபிஎஸ்-ஐ அணைத்து வைத்துக் கொள்ளவும் முடியும்.
ஃப்யூஸன் வெள்ளை உடன் மேட் காக்கி பச்சை, சில்வர் ஐஸ் உடன் பாண்டோம் பிளாக் மற்றும் பாண்டோம் பிளாக் உடன் கார்னிவல் சிவப்பு என்கிற 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கை வாங்கலாம். இதில், ஃப்யூஸன் வெள்ளை, சில்வர் ஐஸ், பாண்டோம் பிளாக் என்ற துணை நிறங்கள் பைக்கின் பெட்ரோல் டேங்க் வழியாக ஓர் லைன் போல் செல்கின்றன.

என்ஜின் & பரிணாம அளவுகள்: ஸ்பீடு 400 பைக்கிலும், ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கிலும் புத்தம் புதிய 398சிசி, லிக்யுடு-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜினை டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வழங்கியுள்ளது. சிங்கிள்-சிலிண்டர் DOHC என்ஜினான இது அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 39.5 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 37.5 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது.
என்ஜின் உமிழும் இயக்க ஆற்றல் ஆனது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் செயின் டிரைவ் செட்-அப் வாயிலாக பைக்கின் பின் சக்கரத்திற்கு செல்கிறது. ஸ்பீடு 400 பைக்கை போல், இரும்பு குழாயால் உருவாக்கப்பட்ட ஹைப்ரீட் ஸ்பின்/ பெரிமீட்டர் ஃப்ரேம் மற்றும் போல்ட்-ஆன் சப் ஃப்ரேமை கொண்ட அதே சேசிஸின் அடிப்படையில் தான் புதிய ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால், ஸ்பீடு 400 பைக்கில் வழங்கப்படும் அதே சஸ்பென்ஷன் செட்அப் தான் ஸ்க்ராம்ப்ளர் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கில் சஸ்பென்ஷன் டிராவல் நன்கு நீளமானதாக உள்ளது. ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கின் முன்பக்கத்தில் 43மிமீ யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் டபுள் காஸ்ட் அலுமினியம் ஸ்விங்கார்ம் உடன் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்கும் சஸ்பென்ஷன் பாகங்களாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த சஸ்பென்ஷன் பாகங்களுக்கான வீல் டிராவல் இந்த அட்வென்ச்சர் ரக பைக்கில் 150மிமீ ஆக முன் & பின் சக்கரங்களில் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஸ்பீடு 400 பைக்கை காட்டிலும், ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கில் முன் சக்கரம் 10மிமீ-க்கும், பின் சக்கரம் 20மிமீ-க்கும் கூடுதலாக மேலும், கீழுமாக செல்கின்றன. இந்த பைக்கில் 10-ஸ்போக் டிசைனில் அலுமினியம் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன் சக்கரத்தின் அளவு 19 இன்ச், பின் சக்கரத்தின் அளவு 17 இன்ச்களாகும். எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் 100/90-19 மற்றும் 140/80-17 என்ற அளவுக் கொண்ட டயர்கள் முறையே முன் & பின் சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் செட்அப் ஒரே மாதிரியானதாக இருந்தாலும், ஸ்பீடு 400 பைக்கில் இருந்து சற்று வித்தியாசமான பிரேக் செட்அப்பை ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக் கொண்டுள்ளது.
இந்த பைக்கின் முன் சக்கரத்தில் 4-பிஸ்டன் காலிபர்கள் உடன் 320மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் உடன் 230மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கில் தரையில் ரைடர் இருக்கை 835மிமீ உயரத்தில் உள்ளது. பைக்கின் எடை 185 கிலோ ஆகும். பெட்ரோல் டேங்கில் அதிகப்பட்சமாக 13 லிட்டர்களுக்கு பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம். 16,000 கிமீ-கள் மற்றும் 12 மாதங்கள், இதில் எது முதலில் வருகிறதோ அப்போது சர்வீஸை எடுத்துக்கொள்ள டிரையம்ப் பரிந்துரைக்கிறது.

பயண அனுபவம்: ஸ்பீடு 400 பைக்கில் வழங்கப்பட்டுள்ள அதே 398சிசி என்ஜின் தான் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது என்றாலும், ஆஃப்-ரோடு பயணங்களுக்காக என்ஜினில் மிகவும் நுணுக்கமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. என்ஜினை எந்தவொரு பிரச்சனையும் இன்றி அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம் வேகத்தில் இயங்க வைக்க முடிகிறது.
பைக்கில் பின் இருக்கையில் பயணி அமர்ந்திருந்தாலும், 398சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 3வது கியரில் 25kmph வேகத்திற்கு மேல் சென்ற பின், சீராக பைக்கின் வேகத்தை அதிகரிக்கிறது. கியர்களை மென்மையாக மாற்ற முடிவதால், நெரிசலான நகர்புறத்திற்குள் ஓட்டுவதற்கும் இந்த அடவென்ச்சர் பைக் ஏற்றதாக இருக்கும். அதேநேரம், ஹைவேயில் எளிதாக 100kmph வேகத்தை எட்ட முடிகிறது.

இந்த பைக்கின் சஸ்பென்ஷன் மிகவும் வலிமையானதாக உள்ளதை இங்கு பதிவு செய்தாக வேண்டும். மிகவும் கரடு, முரடான பாதைகளுக்கு கூட ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கை தைரியமாக எடுத்துச் செல்லலாம். இதற்கேற்ப, எம்.ஆர்.எஃப் ட்யூயல்-பர்பஸ் டயர்கள் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளதால், இலகுவான சகதிகளிலும் இந்த பைக்கை ஓட்டுவது எளிதாக உள்ளது.
இத்தகைய ஆஃப்-ரோடு பயணங்களின் போது உயரமான ரைடர் இருக்கை பயனுள்ளதாக இருக்கிறது என்றாலும், குறுகலான நகர்புற சாலைகளில் திரும்புபோது சற்று அசவுகரியமாக உணரலாம். இருக்கை குஷின் சிறப்பாக உள்ளது. பிரேக்குகள் சிறந்த பிடிமானத்தை வழங்குகின்றன என்றாலும், குறிப்பாக ஹார்ட்டாக அழுத்தும்போது சற்று பஞ்சை அழுத்துவது போன்ற உணர்வை தருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரிட்டிஷ் ஸ்டைல் மோட்டார்சைக்கிளை வாங்க வேண்டும் என்று நம்மில் பலருக்கு நீண்ட நாட்களாக ஆசை இருக்கும். அதற்கு, டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் ஏற்றதாக இருக்கும். ஸ்பீடு 400 பைக்கை விட வெறும் ரூ.30,000 மட்டுமே அதிகமாக, அட்வென்ச்சர் பண்புகளுடன் கிடைப்பது ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்கின் பிளஸ் பாயிண்ட். பைக்கில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய டிரையம்ப் விரும்பினால், பைக்கின் முன் பிரேக் செட்அப்-இல் சில வேலைகளை செய்யலாம்.


Click it and Unblock the Notifications









