தினந்தோறும் மாடு மாதிரி உழைக்கும்... டிவிஎஸ் உருவாக்கியுள்ள புதிய ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2024 ஜூபிட்டர் 110 (Jupiter 110) ஸ்கூட்டரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய டிசைன், மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் சிறந்த செயல்படுதிறன் உள்ளிட்டவற்றின் மூலமாக தினந்தோறும் 2-வீலர் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ற ஸ்கூட்டராக 2024 டிவிஎஸ் ஜூபிட்டர் 110 விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய ஜூபிட்டர் ஸ்கூட்டரை நாங்கள் ஓட்டி பார்த்தோம். ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி உள்ளது? அதன் தோற்றம் எவ்வாறு உள்ளது? என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தோற்றம்: புதிய ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரின் தோற்றத்தில் பயணிகளின் சவுகரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. படங்களில் இந்த ஸ்கூட்டரின் டிசைனை பார்க்கும்போதே உங்களுக்கு இது தெரிந்திருக்கும். ரைடர் சவுகரியமாக அமர்வதற்கு ஏதுவாக ஹேண்டில்பாரின் பொசிஷன் உள்ளது. அதேபோல், ரைடர் கால்களை வைத்துக் கொள்வதற்கான ஃப்ளோர் போர்டு நன்கு அகலமானதாக வழங்கப்பட்டுள்ளது.

எந்த அளவிற்கு உயரம் கொண்டவராக இருந்தாலும் சவுகரியமாக அமரும் வகையில், குறிப்பிட்ட உயரத்தில் ரைடர் இருக்கை உள்ளது. ஹேண்டில்பாரில் வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் வண்ண எல்சிடி ஸ்பீடோமீட்டர் திரை மூலமாக ஸ்மார்ட் அலார்ட்ஸ், ரியல்-டைம் மைலேஜ் இண்டிகேட்டர்ஸ் உள்ளிட்ட தேவையான விபரங்களை ரைடர் பெறலாம்.
இதர சிறப்பம்சங்களாக, பெட்ரோல் நிரப்பும் பகுதி ஸ்கூட்டருக்கு முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஹேண்டில்பாருக்கு கீழே நன்கு பெரியதான க்ளோவ் பாக்ஸ் பகுதி உள்ளது. யுஎஸ்பி மொபைல் போன் சார்ஜர், இ-இசட் சென்டர் ஸ்டாண்ட், எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்டவை புதிய ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன.

என்ஜின்: 2024 ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரில் 113.3சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 6500 ஆர்பிஎம் வேகத்தில் 5.9 கிலோவாட்ஸ் மற்றும் 5000 ஆர்பிஎம் வேகத்தில் 9.8 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. முன்பு விற்பனையில் இருந்த ஜூபிட்டர் ஸ்கூட்டர் உடன் ஒப்பிடுகையில் 2024 ஜூபிட்டர் ஆனது 10% கூடுதல் மைலேஜை வழங்கக்கூடியதாக உள்ளது.
இந்த 10% கூடுதல் மைலேஜுக்கு காரணம், புதிய ஜூபிட்டரில் வழங்கப்பட்டுள்ள ஐகோ அசிஸ்ட் (iGo Assist) தொழிற்நுட்பம் ஆகும். மேலும், ஐகோ டெக்னாலஜி மட்டும் இல்லையென்றால், என்ஜினின் அதிகப்பட்ச டார்க் திறன் 9.2 என்.எம் ஆக சற்று குறைந்திருக்கும். ஐஎஸ்ஜி எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர் உடன் இணைந்து செயல்படும் இந்த ஐகோ டெக்னாலஜி ஆனது ஸ்கூட்டரை தேவையில்லாத சமயங்களில் அணைத்து வைத்து மைலேஜை கூட்டுகிறது. மேலும், இதன் மூலமாக ஸ்கூட்டரின் பேட்டரி ஆயுட்காலமும் அதிகமாக கிடைக்கும் என்கிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்.

பயண அனுபவம்: 2024 ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரில் பயணம் சவுகரியமாகவும், அதேநேரம் ஜாலியாகவும் இருந்தது. ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் பள்ளம், மேடான சாலைகளை சிறப்பாக கையாண்டது. ஏற்கனவே கூறியதுபோல், ஸ்கூட்டரின் டிசைன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதிக உயரம் கொண்ட ரைடர்களாலும் சவுகரியமாக இருக்கையில் அமர்ந்து ஸ்கூட்டரை ஓட்ட முடிகிறது.
இதற்கேற்ப மென்மையாக இயங்கும் என்ஜின் நகரப்புற சாலையில் இயங்கும்போது தேவையான பவரை மட்டுமே வழங்குகிறது. இது அதிக மைலேஜுக்கு வழிவகுக்கும். சவுகரியமான ரைடிங் பொசிஷன், போதுமான என்ஜின் ஆற்றல் கிடைப்பதால், நெரிசல் மிகுந்த சாலைகளிலும் புதிய ஜூபிட்டர் ஸ்கூட்டரை எளிதாக இயக்கி செல்ல முடிகிறது. மேலும், இந்த ஸ்கூட்டரில் பாடி பேலன்ஸ் டெக்னாலஜி 2.0 என்கிற தொழிற்நுட்பம் உள்ளதால், குறைவான வேகத்தில் செல்லும்போதும் சிறந்த ஸ்டெபிளிட்டி கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நேர்த்தியான லைன்கள் மற்றும் கூர்மையான எட்ஜ்கள் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள 2024 ஜூபிட்டர் 110 ஸ்கூட்டர் பார்ப்பதற்கு மாடர்ன் தோற்றத்தில் உள்ளது. பல்வேறு விதமான கலர் ஆப்ஷன்கள் இந்த ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டுள்ளதால், கஸ்டமர்கள் விருப்பப்படும் நிறத்தில் புதிய ஜூபிட்டர் ஸ்கூட்டரை வாங்கலாம். இந்த ஸ்கூட்டரில் எங்களை மிகவும் கவர்ந்த விஷயம், ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள பெட்ரோல் நிரப்பும் பகுதியாகும்.
இதனால், ஸ்கூட்டரில் எரிபொருளை நிரப்புவது எளியதாக உள்ளது. பெட்ரோல் பங்குகளில், ஸ்கூட்டரில் இருந்து இறங்காமலே பெட்ரோல் நிரப்பப்படுவதை பார்க்க முடிகிறது. இது ஸ்கூட்டர் மார்க்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தி, இனி வரும் ஸ்கூட்டர்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, தோற்றத்தில், சவுகரியத்தில், அன்றாட பயன்பாட்டில் மற்றும் செயல்படுதிறனில் என அத்தனை விஷயங்களிலும் 2024 ஜூபிட்டர் 110 ஸ்கூட்டர் சிறப்பானதாக உள்ளது.

ஆகவே, தினந்தோறும் பயன்படுத்துவதற்கு சவுகரியமான ஸ்கூட்டரை எதிர்பார்ப்பவர்களுக்கு 2024 டிவிஎஸ் ஜூபிட்டர் ஏற்ற ஒன்றாகும். மேலும், கொடுக்கும் பணத்திற்கும் ஏற்ற ஸ்கூட்டராக 2024 ஜூபிட்டரை சொல்லலாம். 2024 ஜூபிட்டர் 110 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.73,700இல் இருந்து ரூ.87,250 வரையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.


Click it and Unblock the Notifications









