பாரிஸ் மோட்டார் ஷோவில் தரிசனம் தர புதிய ரேஞ்ச்ரோவர்

4ம் தலைமுறை கண்டுள்ள இந்த புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி முற்றிலும் மோனோகாக் அலுமினியம் சேஸிஸ் கொண்டிருப்பதால் முந்தைய மாடலைவிட 420 கிலோ எடை குறைந்துள்ளது. எரிபொருள் சிக்கனம், குறைந்த கார்பன் புகை, பெர்ஃபார்மென்ஸ் மற்றும் உறுதி என அனைத்து விதத்திதலும் புதிய ரேஞ்ச்ரோவர் சிறந்ததாக இருக்கும்.
புதிய ரேஞ்ச்ரோவரின் வீல் பேஸ் 100மிமீ அதிகரித்துள்ளது. இதனால், உள்பக்கம் கூடுதல் இடவசதியை கொண்டிருக்கும். கண்ணாடி கூரை, கருப்பு வண்ணம் கொண்ட பில்லர்கள், இரண்டு கதவுகள் கொண்ட பின்புறம் ஆகியவை குறிப்பிட்டு கூறும் அம்சங்கள்.
புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி 3 விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. 3.0 லிட்டர் வி6 எஞ்சின் மற்றும் 4.4 லிட்டர் வி8 எஞ்சின் ஆகிய இரண்டு டீசல் மாடல்களிலும், 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 பெட்ரோல் எஞ்சின் மாடலிலும் புதிய ரேஞ்ச்ரோவர் கிடைக்கும்.
பின்வரிசை இருக்கை இரண்டு விதமான மாடல்களில் கிடைக்கும். 3 பேர் அமர்ந்து செல்லும் வசதியுடனும், நடுவில் ஆர்ம் ரெஸ்ட் கொண்ட மாடல் இரண்டு பேர் அமர்ந்து செல்லும் வகையிலும் கிடைக்கும். இந்த புதிய ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியை வெப்பம் மற்றும் குளிர்ச்சி என பல விதமான சீதோஷ்ண நிலைகளில் 20 நாடுகளில் வைத்து கடந்த 18 மாதங்களாக சோதனை நடத்தியுள்ளனர் லேண்ட்ரோவர் எஞ்சினியர்கள்.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவியின் விலை நிர்ணயம் குறித்த விஷயத்தில் லேண்ட்ரோவர் வட்டாரங்கள் படு ரகசியம் காத்து வருகின்றன. பேஸ் மாடல் இங்கிலாந்தில் 70,000 பவுண்டு விலையிலும், டாப் வேரியண்ட் 1,20,000 பவுண்டு விலையிலும் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து மார்க்கெட்டில் முதலில் டெலிவிரி கொடுக்கப்பட இருக்கும் இந்த எஸ்யூவியை 120 மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வர லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








