போர்டு இந்தியா: 1000 பேருக்கு வேலை!
சென்னை: இந்தியா உள்பட உலகம் முழுக்க லட்சக் கணக்கில்... ஏன் கோடிக்கணக்கில் வேலையிழப்புகள் குறித்த செய்திகளே மீடியாவை ஆக்கிரமித்துள்ள நிலையில், எப்போதாவது அரிதாகத்தான் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த செய்திகள் காணக் கிடைக்கின்றன.
அப்படி வந்துள்ள ஒரு அரிய செய்தி, போர்டு இந்தியா நிறுவனம் அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்புகளுக்கு ஆட்கள் தேர்வு.
இந் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தொழிற்சாலைகளில் பல்வேறு பணிகளுக்கு 1000 புதிய பணியாளர்களை இன்னும் சில தினங்களில் தேர்வு செய்யப் போகிறார்களாம்.
சென்னையில் நடந்த மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அஸோஸியேஷன் ஆண்டுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் போர்டு இந்தியா நிறுவனத் தலைவர் மைக்கேல் போனெம்.
"உலகெங்கும் பெரும் தொழில் நெருக்கடி நிலவுகிறது. இந்த சூழலில் வேலை நீக்க அறிவிப்புகள் யாரும் செய்யக் கூடியதே. ஆனால் இந்த சூழலைப் பயன்படுத்தி நல்ல திறமையாளர்களை பணியில் அர்த்திக் கொள்வதே புத்திசாலித்தனம். நிச்சயமற்ற தன்மை நிலவும் காலங்களில் அவர்கள் பேருதவியாக இருப்பார்கள்.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள திறமைசாலிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவே இந்த புதிய ஆள்சேர்ப்புப் பணியில் போர்டு இந்தியா மும்முரம் காட்டுகிறது", என மைக்கேல் போனெம் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே போர்டு இந்தியா நிறுவனத்தில் 6000 பணியாளர்கள் பணியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications








