எஸ்பிஐ கார் கடன் வட்டி குறைப்பு!
டெல்லி: வீட்டுக் கடன்களுக்கான வட்டிகளைக் குறைத்த கையோடு, இப்போது வாகனக் கடன்களையும் குறைக்க ஆரம்பித்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ).
இதுவரை 11.5 சதவீதமாக இருந்த கார் லோன் வட்டியை இப்போது 10 சதவீதமாகக் குறைத்து அறிவித்துள்ளது ஸ்டேட் வங்கி.
பல்வேறு விவசாயக் கடன்களுக்கு 6.5 சதவீதம் வரை வட்டிகளைக் குறைத்துள்ளது எஸ்பீஐ.
கார் உற்பத்தித் துறையில் ஜாம்பவான் நிறுவனங்களான டாடா உள்ளிட்ட பல நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. காரணம் சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக விற்பனைக் குறைவு.
அதே நேரம் உள்நாட்டிலும் விற்பனை கணிசமாகக் குறைந்துவிட்டது. காரணம், வாகனக் கடன்கள் மீதான் அதிகபட்ச வட்டியாகும். இதனை பெருமளவு குறைக்க வேண்டும் என டாடா உள்பட பல நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.
மத்திய ரிசர்வ் வங்கியும் இதுகுறித்து உடனடியாக பரிசீலித்து முடிந்த வரை வட்டிகளைக் குறைக்குமாறு வங்கிகளுக்கு அறிவுரை கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து, சிறிய தாமதத்துக்குப் பிறகு இப்போதுதான் முதல்முறையாக வாகனக் கடன்களைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது எஸ்பிஐ.
ஆனால் இந்த புதிய வட்டி விகிதம் மே 31, 2009 வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும், அதன்பிறகு நிலவும் சூழலைப் பொருத்து வட்டி விகிதம் மாற்றப்படும் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது. 7 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தக்கூடிய தவணை முறை கார் கடன்களுக்கு எந்த முன் பணமும் கட்டத் தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது எஸ்பிஐ.
இதைத் தொடர்ந்து மற்ற வங்கிகளும் வாகனக் கடன் வட்டிக் குறைப்பை அறிவிக்க உள்ளன.


Click it and Unblock the Notifications








