கார் மற்றும் பைக் விற்பனை செம ஜோர்!!
மும்பை: கடந்த ஆண்டைக் காட்டிலும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விற்பனை இந்தியாவில் பெருமளவு அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் கார் விற்பனை பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்துவிட்டன. பணியாளர்களை நிறுத்திவிட்டன. பல தொழிற்சாலைகளும் மூடப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலும் கூட பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் இதே கதையைச் சொல்லி வந்தன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விற்பனை இந்தியாவிலும்கூட குறைந்திருப்பதாகவும் இதனால் சம்பள உயர்வு, புதிய ஆளெடுப்பு போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தன. ஆனால் அவை சொன்னதற்கு நேர்மாறாக உள்ளன சமீபத்தில் வெளியான புள்ளி விபரங்கள் (டாடாவின் வணிக வாகனங்கள் பிரிவில் மட்டும் விற்பனைச் சரிவு உண்மையே).
இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 491,462 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் இதுவே அதற்கு முந்தைய ஆண்டு 425,089 கார்கள்தான் விற்பனையாகியிருந்தன. கிட்டத்தட்ட 15 சதவிகிதத்துக்கும் அதிகமான விற்பனை இந்த மந்த காலத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த பிப்ரவரி மாதம் மட்டுமே 115,386 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் கடந்த பிப்ரவரியில் விற்பனையானது 94,757 கார்கள் மட்டுமே.
குறிப்பாக மாருதி நிறுவனம் மட்டும்தான் அதிக அளவு கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா மற்றும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனங்களின் கார்களும் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன.
இந்த பிப்ரவரி மாதம் மட்டும் மோட்டார் சைக்கிள் பிரிவில் 630,849 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டில் பிப்ரவரி மாதம் மட்டும் 542,757 பைக்குகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.
இதில் மார்க்கெட் லீடர் இந்த ஆண்டும் ஹீரோ ஹோண்டாதான். போன வருடத்தைவிட 1 லட்சம் வாகனங்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது இந்த நிறுவனம். இதற்கு அடுத்த நிலையில் உள்ளது பஜாஜ்.
ஆனால் வணிக வாகனங்கள் பிரிவில் மட்டும் 31 சதவிகிதம் விற்பனை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








