அமெரிக்கர்களுக்கு நல்ல எதிர்காலம் வரும் வரை போராடுவேன்! - ஒபாமா

அமெரிக்காவின் ஆட்டோமொபைல் துறை பெரிதும் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலையிலிருந்து விரட்டியுள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் ஜிஎம் நிறுவனம் மட்டுமே லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. வேலை வேலையும் கிடைக்காமல், மாதச் சம்பளமும் இல்லாமல், குடியிருக்கும் வீடுகளை விட்டு வெளியேறி பெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர் இந்த அமெரிக்க முன்னாள் ஊழியர்கள்.
இவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் நேற்று அவர்களுடன் நேரடியாகவே பேசினார் அதிபர் ஒபாமா.
அவர் கூறியதாவது:
"அமெரிக்க கார் தயாரிப்புத் துறை சரித்திரம் காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுவரை அமெரிக்க ஆட்டோமொபைல் துறையில் 400000 பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. கார் தொழிற்சாலைகள் மட்டுமல்ல, அவற்றுக்கான உதிரிபாகத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுவிட்டன. பழுதுபார்ப்புத் தொழிலகங்கள் கூட மூடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாள் உறக்கத்திலிருந்து விழிக்கும்போதும், இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற சிந்தனையே என்னை ஆக்கிரமித்துள்ளது. இந்த மக்களின் கனவுகளை நிறைவேற்றும் விதத்தில் நிச்சயம் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அந்த நம்பிக்கையில்தான் என்னை வெள்ளை மாளிகைக்கு அனுப்பியுள்ளீர்கள்.
அதே நேரம் என்னால் பொய்யான வாக்குறுதிகள் தரமுடியாது. நண்பர்களே... கஷ்டமான காலம் இன்னும் பாக்கியிருப்பது உண்மையே. ஆனால் உங்களுக்கு ஒரு வாக்குறுதியை நிச்சயம் என்னால் தரமுடியும். நான் போராடுவேன். உங்களுக்கு நல்ல எதிர்காலம் உறுதியாக அமையும் வரை போராடுவேன்..." என்றார் ஒபாமா.


Click it and Unblock the Notifications








