புனே-ரூ. 3,800 கோடியில் வோக்ஸ்வேகன் உற்பத்தி பிரிவு!

இந்திய சந்தையின் அதிகரிக்கும் தேவையைக் கருத்தில் கொண்டு ரூ.3800 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த யூனிட் மூலம் முதல்கட்டமாக ஆண்டுக்கு 1.1 லட்சம் சிறிய கார்கள் உற்பத்தி செய்யப்படும்.
பின்னர் படிப்படியாக உற்பத்தியின் அளவு 5 லட்சம் கார்களாக அதிகரிக்கப்படும் என வோக்ஸ்வேகன் இந்தியப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உற்பத்திப் பிரிவைத் துவக்கி வைத்த வோக்ஸ்வேகன் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோகெம் ஹெய்ஸ்மேன் கூறுகையில், "வோக்ஸ்வேகன் கார்களுக்கு இந்தியா மிகப் பொருத்தமான சந்தை. இங்கே எப்போதும் தேவை இருந்து கொண்டே உள்ளதால், வோக்ஸ்வேகன் மிக முக்கிய இடத்தைப் பெறும் என்று நம்புகிறோம்", என்றார்.
ஐரோப்பிய நிறுவனமான வோக்ஸ்வேகன் குழுமத்தைச் சேர்ந்த இரு கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கெனவே குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ளன. ஆடம்பரக் கார் உற்பத்தி நிறுவனங்களான 'ஸ்கோடா' மற்றும் 'ஆடி' நிறுவனங்கள் ஏற்கெனவே இங்கு உற்பத்தி தொழிற்சாலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இப்போதைக்கு ஸ்கோடா தொழிற்சாலையில்தான் செடான் ஜெட்டா மற்றும் பாஸ்ஸட் வகைக் கார்களை அஸம்பிள் செய்கிறது வோக்ஸ்வேகன். விரைவில் ஸ்கோடா ஃபேபியா மற்றும் போலோ ரக கார்களை அறிமுகம் செய்யும் திட்டமுள்ளது வோக்ஸ்வேகனுக்கு.
தங்கள் திட்டப்படி எல்லாம் வெற்றிகரமாக நடந்தால் 8 முதல் 10 சதவிகிதம் வரை மார்க்கெட்டைப் பிடித்துவிட முடியும் என நம்புவதாக ஹெய்ஸ்மேன் தெரிவித்திருந்தார்.
சர்வதேச சந்தையில் கார் விற்பனை சரிந்து வருவதால், மற்ற நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவில் தங்கள் முதலீட்டை நிறுத்திக் கொண்டுள்ள வோக்ஸ்வேகன் அதற்குப் பதில் இந்தியாவில் முதலீட்டை அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








