திட்டமிட்டபடி சென்னையில் தொழிற்சாலை-நிஸ்ஸான்

ஜப்பானை சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனம் நிஸ்ஸான் மோட்டார்ஸ், சென்னை படப்பைக்கு அருகே உள்ள ஓரகடம் பகுதியில் புதிய கார் தொழிற்சாலை ஒன்றை அமைத்து வருகிறது. 640 ஏக்கர் பரப்பில் கட்டப்படும் இந்த தொழிற்சாலையில் நிஸ்ஸான் ரூ. 4,500 கோடியை முதலிடு செய்கிறது. ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் கார்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்துக்காக நிஸ்ஸான் நிறுவனம், பிரான்ஸ் நாட்டின் ரினால்ட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. மேலும், இங்கு தயாரிக்கப்படும் கார்களை ஐரோப்பாவில் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பாவின் மொத்த விற்பனையில் 24 சதவீதத்தை பிடித்துள்ள நிஸ்ஸான், இப்போதைக்கு ஆசிய சந்தைகளில் தனது பிடியை இழந்து வருகிறது.
ஆசிய மார்க்கெட்டைத் தக்கவைத்துக் கொள்ளவும், ஐரோப்பிய விற்பனையை மேலும் அதிகரிக்கவும் இந்த சென்னை திட்டம் தங்களுக்கு முக்கியம் என அந்த நிறுவனம் கருதுகிறது.
ரினால்ட் விலகல்?
இந்நிலையில் நிஸ்ஸானுடன் இணைந்து செயலாற்றி வரும் ரினால்ட் நிறுவனம் இந்த திட்டத்தில் தனது வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இந்த திட்ட தாமதமாகும் என வெளிவந்த செய்திகளை நிஸ்ஸான் மறுத்துள்ளது.
இது குறித்து நிஸ்ஸான் நிறுவனத்தின் செயல் துணை தலைவர் கோலின் டாட்ஜ் கூறுகையில், சென்னை திட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இதுமட்டும் செயலற்றுப் போய்விட்டால், எங்களது ஐரோப்பிய திட்டமும் நின்றுவிடும்.
சென்னை தொழிற்சாலை அமைக்கும் பணிகள் தி்ட்டமிட்டபடி நடந்து வருகின்றன. ரினால்ட் நிறுவனம் எங்களது கூட்டாளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த திட்டத்திலிருந்து ரினால்ட்டை வெளியேற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ரினால்ட் நிறுவனம் விரைவில் தனது பணியை துவக்கும்.
எங்களுக்கு கடந்த ஆண்டு 5.4 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தனர். ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு 6.8 கோடி பேர் இருந்தனர். சுமார் 1.4 கோடி வாடிக்கையாளர்களை நாங்கள் இழந்திருக்கிறோம்.
இந்தியாவில் தற்போது ஆயிரம் பேரில் 50 பேர் மட்டுமே கார் வைத்துள்ளனர். இதனால் இந்தியாவில் நிஸ்ஸானுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்றார்.
நிஸ்ஸான் இந்தியா தலைவர் கிமினோபு டோகுயாமா கூறுகையில், நிஸ்ஸான் நிறுவனம் இந்தியாவில் அதிக முதலீடு செய்ய இருக்கிறது. தற்போது இந்தியாவில் நிஸ்ஸான் இரண்டு மாடல்களை மட்டுமே வெளியிட்டுள்ளது.
2012ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 9 புதிய மாடல் கார்களை வெளியிட முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications








