டாடா நானோ: குலுக்கலில் 1 லட்சம் பேர் தேர்வு!

இவர்கள் அனைவருக்கும் அடுத்த மாதம் நானோ கார்கள் டெலிவரி செய்யப்படும்.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
டாடா நிறுவனம் இந்திய மக்களுக்கு பெரிதும் நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளது. நானோ காருக்கு மக்களும், டீலர்களும், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆதரவளித்தனர்.
இப்போது முன்பதிவு செய்தவர்களுக்கு கார்கள் வழங்கும் பணி துவங்கிவிட்டது. மொத்தம் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் 1 லட்சம் பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜூலை முதல் வாரத்திலிருந்து கார்கள் டெலிவரி செய்யப்படும், என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை நடந்த முன்பதில் 2 லட்சம் பேர் நானோவுக்கு முன்பதிவு செய்தனர். ஸ்டேட் வங்கி கிளைகள் மூலம் இந்த முன்பதிவு நடந்தது.
குறைந்தது 7 லட்சம் விண்ணப்பங்களாவது வரும் என்று டாடா நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் நானோ கிடைக்காது என்பதாலும், ரூ.1 லட்சம் விலை என்று சொல்லப்பட்ட நானோ, பின்னர் ரூ.1.32 லட்சம், ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ. 1.82 லட்சம் என மாறுபட்ட விலைகளில் விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதாலும், முக்கியமாக முன்பண அளவு ரூ.1 லட்சம் வரை இருந்ததாலும் இந்தக் கார்களுக்கு புக்கிங் எதிர்பார்த்த மாதிரி இருக்கவில்லை.
முதல் குலுக்கலில் கார்கள் கிடைக்காதவர்களுக்கு ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டியாகத் தரப்படும் அல்லது அவர்களுக்கு விருப்பமென்றால் சிறப்பு விலையில் டாடா இன்டிகா வாங்கிக் கொள்ளலாம் என்றும் டாடா அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








