சென்னை பிரிவின் விரிவாக்கத்தை ஒத்திப் போட்ட நிஸ்ஸான்

சென்னையில் தனது தொழிற் பிரிவைத் தொடங்கியுள்ளது நிஸ்ஸான். இந்த தொழிற் பிரிவின் 2வது கட்ட பிரிவின் 2வது கட்ட விரிவாக்கப் பணிகளை தொடங்க ஆயத்தமாகி வந்தது நிஸ்ஸான். ஆனால் தற்போது உலகப் பொருளாதார சந்தையில், ஆட்டோமொபைல் பிரிவு இன்னும் எழுச்சி பெறாத நிலை காணப்படுவதால், தற்போதைக்கு தனது விரிவாக்கப் பணிகளை நிறுத்தி வைக்க அது தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து நிஸ்ஸான் நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்லோஸ் கோசன் இதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து சென்னைப் பிரிவின் 2வது கட்ட விரிவாக்கப் பணியை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது நிஸ்ஸான் என்பது குறிப்பிடத்தக்கது.
கோசன் இதுகுறித்துக் கூறுகையில், மார்க்கெட் நிலவரம் மோசமாக இருப்பதால் இந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக, உலகப் பொருளாதார நிலை இன்னும் சற்று மேம்படட்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதுவரை காத்திருக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
கடந்த ஜூன் மாதம் சென்னையில் தனது தொழிற்சாலையை அமைத்து, இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான கார்களைத் தயாரிக்க தீர்மானித்தது நிஸ்ஸான்.
ஐரோப்பாவில் கார் தயாரிக்க ஆகும் செலவை விட 5 சதவீதம் இங்கு குறைவு என்பதால் இந்த முடிவை எடுத்தது நிஸ்ஸான்.
நிஸ்ஸான் சென்னைப் பிரிவின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொழிற்சாலை செயல்படத் தொடங்கும் எனவும் கோசன் தெரிவித்துள்ளார்.
தனது சென்னைப் பிரிவில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்திய சந்தைக்குத் தேவையான கார்களை தயாரிக்கவுள்ளது நிஸ்ஸான். 2011ம் நிதியாண்டில் இங்கிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் கார்களை ஏற்றுமதி செய்யவும் அது இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் தனது மாடல்களை 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளது நிஸ்ஸான்.


Click it and Unblock the Notifications








