டொயோட்டா கார்களை வாபஸ் பெற அமீரகம் வலியுறுத்தல்

ஆக்ஸிலேட்டரை அழுத்தாமலேயே டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி திடீரென வேகமாக பறப்பதாக பல்வேறு இடங்களில் டொயோட்டா கார் உரிமையாளர்கள் புகார் செய்து வந்தனர்.
குறிப்பாக குளிர் பிரதேசங்களில் இருந்து இதுபோன்ற புகார்கள் அதிகளவில் வந்தன. கடந்த பல ஆண்டுகளில் இப்புகார் தொடர்பாகவே குறைந்தபட்சமாக 19 பேர் இறந்திருக்கக் கூடும்.
இதனால், குறிப்பிட்ட சில மாடல்களை டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தது.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் இருந்து டொயோட்டா தனது கார்களை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமீரகத்தின் வாகன தரக்கட்டுப்பாடு தொடர்பான அரசாங்க அமைப்பான 'எஸ்மா'வின் இயக்குனர் முகமது பத்ரி இதுகுறித்து கூறுகையில்,
'டொயோட்டா கார்களின் ஆக்ஸிலேட்டர் பிரச்னை குளிர் பிரதேசங்களில் தான் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அமீரகத்தின் சில பகுதிகளில் பூஜ்யம் டிகிரி வெப்ப நிலை காணப்படும் சூழல் உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3,120 வாகனங்களை டொயோட்டா நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். படிப்படியாக இதைச் செய்யலாம்.
வரும் ஏப்ரல் மாதம் வரை டீலர்களுக்கு இதற்காக அவகாசம் வழங்கப்படுகிறது' என்றார்.
இதற்கிடையே, அமீரகத்தில் டொயோட்டாவின் அதிகாரப்பூர்வ டீலரான அல் ஃபாய்த்தம் மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சைமன் ஃபிரித் இதுபற்றி கூறுகையில்,
அமீரகத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள டொயோட்டாவின் ஆவலான் மற்றும் செக்வோயா மாடல்களில் ஆக்ஸிலேட்டர் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
மேலும் இது குளிர் பிரதேசம் அல்லாததால், பிரச்னைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
எனினும், டொயோட்டா வாடிக்கையாளர்களின் மன நிறைவுக்காக பழுது பார்க்கும் முகாம்களை தொடங்குவது என முடிவெடுத்துள்ளோம்.
வரும் 24ம் தேதி முதல் அமீரகத்தில் உள்ள டொயோட்டா வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே இந்த பழுதுபார்க்கும் பணிகளை செய்து கொடுக்க உள்ளோம்' என்றார்.
இதற்கிடையே, டொயோட்டா நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்களிலும் அதிவேகத்தைக் கட்டுப்படுத்தும், பிரேக் ஓவர்ரைட் சிஸ்டத்தை பொருத்த முடிவு செய்துள்ளதாக அந்நிறுவன தலைவர் அகியோ டொயோடா அறிவித்துள்ளார்.
இந்த அமைப்பின்படி, ஓட்டுனர் பிரேக் மற்றும் ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் முதலில் பிரேக் சாதனம் வேலை செய்வது போல வடிமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








