பிப்ரவரியில் ஃபியட் கார்களின் விற்பனை 78% உயர்ந்தது!
மும்பை: கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் ஃபியட் கார்களின் விற்பனை 78 விழுக்காடு அதிகரித்துள்ளது.
உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியை சேர்த்து கடந்த மாதத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 335 ஃபியட் கார்கள் விற்பனையாகி உள்ளன. (இதில் 79 யூனிட்டுகள் ஏற்றுமதியானவை)
2009ம் ஆண்டு பிப்ரவரியில் 1,309 ஃபியட் கார்கள் மட்டுமே விற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில் இதுவரை ஃபியட் கார்களின் விற்பனை ஒட்டுமொத்தமாக 23 ஆயிரத்து 551 யூனிட்டுகளை தொட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு விற்பனை 6 ஆயிரத்து 897 யூனிட்டுகள் என்ற அளவிலேயே இருந்துள்ளன.
2010-11 பொது பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் அறிவிக்கப்படும் என முன்கூட்டியே உணரப்பட்டதால் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை வெகுவாக சூடு பிடித்தது.
வரி உயர்வுக்கு முன்னதாக கார்களை வாங்கிவிட ஏராளமான வாடிக்கையாளர்கள் முண்டியடித்தனர்.
குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் வர்த்தக வாகனங்களின் விற்பனை 119 விழுக்காடும், கார்களின் விற்பனை 33 விழுக்காடும் திடீரென அதிகரித்தது.
இதில் இந்தியாவின் அனைத்து பிராண்ட் கார்களும் கணிசமான அளவுக்கு கூடுதலாக விற்கப்பட்டிருந்தாலும் ஃபியட்டின் விற்பனை மற்ற நிறுவனங்களை விட வெகுவாக உயர்ந்து காணப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தில் ஹூண்டாய் கார்கள் 43 விழுக்காடு கூடுதலாக விற்பனையாகி உள்ளன. டாடா மோட்டார்ஸ் விற்பனை 58 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதேபோல மஹிந்தரா அண்ட் மஹிந்தரா 35 விழுக்காடும் அதிகரித்துள்ளது.
ஆனால் ஃபியட் கார்கள் அதிகப்பட்சமாக 78.38 விழுக்காடு கூடுதல் விற்பனையை கண்டுள்ளது.
ஒட்டுமொத்த அளவில் நடப்பு நிதியாண்டில் ஃபியட் கார்களின் விற்பனை கடந்தாண்டை விட 241 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








