நானோ தொழிற்சாலை அமைக்க டாடாவுக்கு பிரான்ஸ் அழைப்பு

உலகின் மிகவும் மலிவான கார் எனப்படும் நானோ வரும் 2011-ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகமாக உள்ள நிலையில் இந்த அழைப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் தயாரித்துவரும் நானோ, முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே தாயாரானதாகும். கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது நானோ.
இந்த காருக்கு வெளிநாடுகளிலும் ஏக வரவேற்பு உள்ளது. எனவே 2011-ல் ஐரோப்பாவிலும், 2012-ல் அமெரிக்காவில் நேரடியாக நானோ விற்கத் திட்டமிட்டுள்ளது டாடா.
இந்நிலையில், மோசெல்லே மாகாண வளர்ச்சி முகமையின் பொது இயக்குநர் எம் டவிட் மாலிங்ரே, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நானோ தொழிற்சாலையை பிரான்ஸில் தொடங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "டாடா நானோ தொழிற்சாலைக்கு ஏற்க இட அமைப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மோசெல்லே மாகாணத்தில் உள்ளன. எனவே அந்த நிறுவனம் இங்கு தொழில் துவங்க தாராளமாய் முன்வரலாம்.
ஏற்கெனவே ஜெர்மனியின் டெய்ல்மர் நிறுவனம் தங்களது ஸ்மார்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலையை இங்கு அமைத்துள்ளது. கனடாவின் முன்னணி கார் உதிரி பாகத் தொழிற்சாலையான மேக்னாவும் இங்கு உற்பத்திப் பிரிவை அமைத்துள்ளது..." என்றார்.
மாலிங்ரேயின் இந்த அழைப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, இதுபற்றி உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ தொழிற்சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு, பின் திரிணாமூல் காங்கிரஸ் எதிர்ப்பால் அந்த தொழிற்சாலை குஜராத்துக்கு மாற்றப்பட்டது. அடுத்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் நானோ தொழிற்சாலைகள் அமையவிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








