வோக்ஸ்வேகன் வென்டோ, போலோவுக்கு செம கிராக்கி

ஜெர்மனியின் வோக்ஸ்வேகன் நிறுவன அதிகாரிகள் இதுகுறித்துக் கூறுகையில், சிறிய காரான போலோ மற்றும் வென்டோவுக்கு கிராக்கி அதிகரித்துக் கொண்டே போகிறது. இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தக் கார்களுக்கான காத்திருப்பு காலம் தற்போது 2 முதல் 3 மாதமாக உள்ளது. இதனால் உற்பத்தியை அதிகரித்து காத்திருப்புக் காலத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தற்போது இந்தியாவின் சகன் தொழிற்சாலையில் இந்தக் கார்களை தயாரித்து வருகிறது வோக்ஸ்வேகன்.
இந்த தொழிற்சாலையில் ஆண்டு உற்பத்தி அளவை 1.1 லட்சமாக அதிகரிக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்காக ரூ. 3800 கோடி நிதியையும் வோக்ஸ்வேகன் ஒதுக்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இங்கு 2வது ஷிப்ட் பணி முறை அமலுக்கு வந்துள்ளது. ஷிப்ட் போட்டு வேலை செய்தாலும், வேகமாக வேலை செய்தாலும் தரமும், தகுதியும் குறையாமல் படு கவனமாக இருக்கிறார்கள்.
கடந்த மாதம் 4613 வென்டோ, போலோ கார்கள் விற்றுள்ளன. ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாடல்களிலும் மொத்தமாக 26,000 கார்களை விற்றுள்ளது வோக்ஸ்வேகன்.
மேலும் வோக்ஸ்வேகனின் டீலர்களும் அதிகரித்துள்ளனர். தற்போது அந்த எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதில், 5 பெருநகரங்களில் உள்ளன. விரைவில் நாடு முழுவதும் டீலர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாம்.
தற்போது இந்தியாவில் பீட், போலோ, பஸ்ஸாத், பியட்டான், ஜெட்டா, டோரக், வென்டோ ஆகிய கார்களை தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது வோக்ஸ்வேகன்.


Click it and Unblock the Notifications








