பஜாஜ் தயாரிக்கும் குறைந்த விலை கார்

இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள நிறுவனம் பஜாஜ். ஆட்டோ ரிக்ஷா தயாரிப்பில் முன்னோடியான பஜாஜ், தான் தயாரிக்கவுள்ள குறைந்த விலை கார்களின் விற்பனை தொடர்பான விவகாரங்களை ரெனால்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்க போவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக ரெனால்ட்-நிஸ்ஸான் நிறுவனங்களுடன் இணைந்து டாடாவி்ன் நானோ காருக்குப் போட்டியாக குறைந்த விலை கார்களை தயாரித்து விற்க பஜாஜ் திட்டமிட்டது. இப்போது அந்தத் திட்டத்தை பஜாஜ் கைவிட்டுவிட்டது.
கார்களை பஜாஜ் தயாரிக்க, அதை ரெனால்ட் இந்தியாவில் விற்பனை செய்வது என்று இரு நிறுவனங்களும் புதிய உடன்பாடு செய்து கொண்டுள்ளன.
இது குறித்து பஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் தலைவர் ராஜீவ் பஜாஜ் கூறுகையில், தயாரிப்பிற்காகவோ, விளம்பர பிரசாரத்திற்காகவோ பிறருடன் கூட்டணி அமைக்கும் தேவை எங்களுக்கு இல்லை. குறைந்த விலை கார்கள் தயாரிக்கும் முடிவின் மூலம், இதுவரை இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே தயாரித்துக் கொண்டிருந்த நாங்கள் நான்கு சக்கர வாகன தயாரிப்பிலும் கால் வைத்துள்ளோம்.
முன்னதாக, ரெனால்ட்-நிஸ்ஸான் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து 50% பங்குகளை வாங்கி நானோ காருக்கு சவாலாக ஒரு காரை தயாரிக்க நினைத்தோம். ஆனால், அது நடக்கவில்லை என்றார்.
சிறிய கார் தயாரிப்புக்காக ரூ. 500 கோடி முதலீடு செய்யும் பஜாஜ், இதற்க்கா புனேவில் தொழிற்சாலையை தொடங்கவுள்ளது.
இந்த புதிய சிறிய வகை கார் 2012ம் ஆண்டு வெளிவரவுள்ளது.


Click it and Unblock the Notifications








