ஷோரூமிலிருந்து கொண்டு செல்லும்போதே வெடித்துச் சிதறிய நானோ!!

கடந்த ஆண்டு டாடா நிறுவனம் இந்தக் காரை, ஒரு லட்ச ரூபாய் கார் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.
2.5 லட்சம் ஆர்டர்கள் குவிந்தன இந்தக் காருக்கு. ஆனால் இவர்களில் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே குலுக்கல் முறையில் கார்களை வழங்கியது டாடா.
இப்போதும் பகுதி பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு கார்களை வழங்கி வருகிறது டாடா மோட்டார்ஸ். ஒரு லட்ச ரூபாய் என்று சொல்லப்பட்டாலும், வேண்டிய வசதிகளைப் பொருத்தி வெளியில் எடுக்கும்போது ரூ 2 லட்சத்தைத் தாண்டுகிறது இந்தக் கார்.
மும்பையில் உள்ள முலுண்ட் பகுதியை சேர்ந்த சாவந்த் என்பவர் டாடா நானோ கார் ஒன்றை புக் செய்திருந்தார். அந்தக் காரில் ஏசி மற்றும் பவர் ஸ்டீரிங் ஆகியவற்றை அவர் கூடுதல் பணம் கொடுத்து பொருத்தியிருந்தார்.
பிரபாதேவி என்ற இடத்தில் உள்ள டாடா ஷோரூமிலிருந்து நேற்று மாலை 3 மணிக்கு அவர் நானோ காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் அவர் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று அந்த கார் வெடித்து தீப்பற்றி எரிந்தது.
சாவந்த்துக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதால் டாடா மோட்டார்ஸ் ஷோரூம் நிர்வாகம் டிரைவர் ஒருவரை அனுப்பியிருந்தது. உடனடியாக சாவந்த் அந்தக் காரில் இருந்து கதவை திறந்து கொண்டு வெளியே குதித்தார். அதுவும் முன்னால் போய்க்கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள்காரர் உரக்க எச்சரித்ததால் தப்பித்துள்ளார். டிரைவரும் உடனே குதித்துள்ளார். பின்னர் கார் வெடித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக யாருடைய உயிருக்கும் சேதம் ஏற்படவில்லை. விஷயம் தெரிந்ததும் அந்தப் பகுதி மக்கள் குவிந்துவிட்டனர், எரிந்த நானோவைப் பார்க்க.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் டாடா மோட்டார்ஸ் நிர்வாகத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து மற்றும் காரில் ஏற்பட்டுள்ள கோளாறு குறித்து தனி விசாரணையை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








