கார் உற்பத்தியில் முதல் 10 இடங்களுக்குள் சென்னை!- கருணாநிதியின் கனவு

By
Renault - Nissan
சென்னை: சென்னை அருகே ஒரகடத்தில் ரூ.2,900 கோடி முதலீட்டில் அமைந்துள்ள ரெனால்ட்- நிஸ்ஸான் கார் தொழிற்சாலையை இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் கருணாநிதி.

ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் விதத்தில் பிரமாண்டமான ரெனால்ட்- நிஸ்ஸான் கார் தொழிற்சாலை ஒரகடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ரூ.2,900 கோடி முதலீட்டுடன் ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி அளவுடன் இந்த தொழிற்சாலை துவங்குகிறது. பின்னர் முதலீட்டின் அளவு ரூ.4,500 கோடியாக உயர்த்தப்படும். 2015க்குள் ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் என்ற உற்பத்தி நிலை எட்டப்படும்.

இந்தத் தொழிற்சாலையை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். ரெனால்ட்-நிஸ்ஸான் கூட்டு நிறுவன தலைவர் கார்லோஸ் கோஸ்ன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

அனைத்து துறைகளிலும் நமது மாநிலம் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது இந்த அரசு.

தொழில் வளர்ச்சிக்கும் நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

ஒரு ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதை விட அந்த ஆலையில் உற்பத்தி துவக்க விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். காரணம், உற்பத்தி துவங்கியதும் மக்களுக்கு பலன் கிடைக்க துவங்கி விடுகிறது.

ரெனால்ட்-நிஸ்ஸான் கூட்டு நிறுவனம் உலகில் வாகன தொழிலில் 5வது இடத்தை வகிக்கிறது. இந்த நிறுவனம் சென்னையில் உற்பத்தியை தொடங்கியுள்ளதன் மூலம் உலகில் உள்ள தலைசிறந்த 20 கார் உற்பத்தியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 7 பெரும் நிறுவனங்கள் சென்னையில் இடம் பெற்றிருக்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.

டெய்ல்மர், போர்ட், பிஎம்டபிள்யு, ஹூண்டாய், மிட்சுபிஷி போன்ற மிகப்பெரும் கார் நிறுவனங்கள் சென்னையில் ஆலைகள் அமைத்துள்ளன. ஆசியாவின் கார் உற்பத்தி தலைநகரமாக இன்று சென்னை உருவெடுத்து வருகிறது.

இத்தகைய வாகன தொழிற்சாலைகள் சென்னையில் அமைவது தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கு சாதகமான நிலைமை இருப்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

முதலீட்டாளர்களுக்கு பலன் அளிக்கக்கூடிய தமிழக அரசின் தொழில் கொள்கை காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முன்னிலை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

தமிழகம் முதலிடம்:

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகு 'ஆக்ஸ்போர்ட் அன்னாலெட்டிக்கா' என்ற சர்வதேச நிறுவனம், தமிழகம் முதலீட்டை ஈர்ப்பதில் மிகச்சிறந்த மாநிலமாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையிலும் கூட பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு முன் வந்தன. 2006 மே மாதம் முதல் 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

மேலும் 12 ஆலைகளுக்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த 37 தொழில் நிறுவனங்கள் 46,090 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய இருக்கின்றன. இதன் காரணமாக 2 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாவில் மாபெரும் வாகன மையமாக சென்னை உருவாகி வந்தபோதிலும், வாகனங்களை ஆய்வு செய்வதற்கான வசதிகள் இல்லை. இதன் காரணமாக வாகனங்களை பரிசோதனைக்கு புனேவுக்கு அனுப்ப வேண்டிய நிலைமை உள்ளது.

நாம் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக மத்திய அரசு தற்போது சென்னையை அடுத்த ஒரகடத்தில் 450 கோடி ரூபாய் செலவில் தேசிய வாகன பரிசோதனை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அடிப்படை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு மாநில அரசு 304 ஏக்கர் நிலத்தை வழங்கியிருக்கிறது.

உலகத் தரத்திற்கு ஈடாக பாதுகாப்பு, வாகன மாசு கட்டுப்பாடு, செயல்திறன் ஆகியவற்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

பல்வேறு வாகன திட்டங்கள், தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், மேலும் வாகன தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டு வர மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உலக அளவில் வாகன உற்பத்தியில் முதல் 10 இடங்களில் சென்னை இடம்பெற வேண்டும் என்பது எனது கனவாகும். இந்த கனவு விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

பல ஆலைகளை அமைத்து விடுவதோடு, நமது பணிகள் நின்றுவிடவில்லை. இந்த ஆலைகளின் பலன்கள், வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், சிறந்த வாழ்க்கைத் தரம் ஆகியவை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.

நிஸ்ஸான் நிறுவனம் ஒரகடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களை வேலைக்கு அமர்த்தியிருப்பது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும் அந்த நிறுவனம் தனது சமூக கடமையாக அப்பகுதியில் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் இந்த ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வீடுகள் கட்டித்தருவது போன்ற பணிகளை செய்வது வருவது பாராட்டுக்குரியது.

இந்நிறுவனத்திற்கு தமிழக அரசின் ஆதரவும், ஒத்துழைப்பும் தொடரும் என்னும் உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு இதன் திறன் அதிகரிக்கும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.

ஜப்பானுக்கு முதல்வர் அழைப்பு:

முன்னதாக ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் யோஷிரோ மோரி இன்று காலை முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் யோஷிரோ மோரி கூறுகையில், தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினேன்.

தமிழகத்தில் ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார் என்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 17, 2010, 15:03 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+