வெளிநாட்டுச் சந்தைகளில் நுழையும் போர்ட் பிகோ

ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, நேபாளம் ஆகிய நாட்டு சாலைகளில் பிகோ ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது சேரும் 48 சந்தைகளை சேர்த்தால் பிகோ ஓடப் போகும் வெளிநாடுகளின் எண்ணிக்கை 50 ஆக உயரும்.
48 புதிய வெளிநாட்டு சந்தைகளில் முதல் கட்டமாக தென் அமெரிக்கா, மெக்சிகோ, எமிரேட்ஸ், வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவை அடங்கும்.
தென் ஆப்பிரிக்க சந்தையில் பிகோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் கிடைத்துள்ள ஊக்கத்தால்தான் புதிதாக மேலும் 48 வெளிநாடுகளுக்கு செல்கிறது பிகோ. தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு கூடுதலாக 2000 கார்களை அனுப்ப ஆர்டர் கிடைத்துள்ளதாம். இதையும் சேர்த்தால் ஆண்டுக்கு 7000 கார்களை தென் ஆப்பிரிக்காவுக்கு போர்ட் அனுப்பவுள்ளது. இந்த ஏற்றுமதி முழுவதும் சென்னையிலிருந்து நடைபெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க கார்ச் சந்தையில் டாப் 10 நிறுவனங்களில் போர்ட் இந்தியா நிறுவனமும் ஒன்று என்பது முக்கியமானது.
தனது உற்பத்தியைப் பெருக்கும் வகையில், சென்னை பிரிவை மேம்படுத்துகிறது போர்ட். மேலும் சில பிரிவுகளை இங்கு அது தொடங்கவுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளதை மனதில் கொண்டு உற்பத்தி அளவைப் பெருக்கும் முயற்சியில் போர்ட் இறங்கியுள்ளது.
சென்னை உற்பத்திக் கூடத்தில் போர்ட் பிகோ தவிர என்டவர், ஐகான் ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் போர்ட் இந்தியாவின் விற்பனை அளவு 9026 கார்களாக இருந்தது. இது கடந்த செப்டம்பர் மாத விற்பனையை விட 2 மடங்கு அதிகமாகும். மேலும் போர்ட் இந்தியா இதுவரை விற்றதிலேயே இதுதான் அதிக அளவும் கூட.
போர்ட் நிறுவனத்தின் முக்கியக் காரான ஐகானுக்கு மிகப் பெரிய அளவிலான வரவேற்பு உள்ளதாக கூறும் நிறுவனத்தின் செயல் இயக்குநர், இந்தியச் சந்தையில் 2ம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இங்கு கடந்த 20 வருடங்களாக ஐகான் கார்கள் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதன் உற்பத்தியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்றும் போர்ட் இந்தியா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








