புதிய அம்பாசடரை களம் இறக்கும் இந்துஸ்தான் மோட்டார்ஸ்

'மேட் இன் இந்தியா' என்ற பெயருடன் முதல் காரை வெளியிட்டது இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம்தான். சுதந்திரத்திற்கு முன்பே அந்தக் கார் வெளியானது. 60 ஆண்டு காலத்திற்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்துஸ்தான் மோட்டார்ஸின் லேன்ட்மார்க் கார்தான் அம்பாசடர்.
அன்றிலிருந்து இன்று வரை அதே பொலிவுடன் திகழும் அம்பாசடருக்கு புது மெருகேற்றி, புதிய தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தி அடுத்த ஆண்டு புது அம்பாசடரை அறிமுகப்படுத்துகிறது இந்துஸ்தான் மோட்டார்ஸ்.
அம்பாசடர் காரின் தொழில்நுட்பம் இன்றுள்ள கால கட்டத்திற்கு ஒத்துவராதது, உபயோகப்படாதது என்பது ஆட்டோமொபைல் நிபுணர்களின் கருத்தாகும். மேலும் மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் கார்களுக்கு முன்பு அம்பாசடரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அந்தக் கார்களை விட அம்பாசடர் கார்கள் எடை அதிகம் கொண்டவை, எளிதில் கையாள முடியாதவை.
இதையடுத்தே அம்பாசடருக்குப் புது வாழ்வு கொடுக்க இந்துஸ்தான் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாம். இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் ஜா கூறுகையில், அடுத்த ஆண்டு அம்பாசடர் புது வடிவம் பெறவுள்ளது. ஐரோப்பிய டிசைன் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் செய்துள்ளோம். புதிய வடிவமைப்புடன், புதிய தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தி புதிய அம்பாசடரை வெளியிடவுள்ளோம்.
இந்தப் புதிய கார் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும். இதன் விலை ரூ. 5 முதல் 7 லட்சத்துக்குள் இருக்கும். தற்போதைய கார்களுக்கு இணையான வடிவம் மற்றும் தொழில்நுட்பத்தில் இது இருக்கும். புதிய காரை அறிமுகப்படுத்தும் அதே நேரத்தில் பழைய பாணி அம்பாசடர் காரும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்றார்.
இந்துஸ்தான் மோட்டார்ஸின் இந்த முயற்சி, அம்பாசடர் காரின் உயிரைத் தக்க வைக்க எடுக்கப்படும் கடைசி முயற்சியாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட வாழ்வா, சாவா நிலைதான். கடந்த நிதியாண்டில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 45 கோடி இழப்பு ஏற்பட்டதாம்.
புதிய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் உருவாகும் புதிய அம்பாசடர் கார்கள் களத்திற்கு வந்த பின்னர் அதன் வருடாந்திர விற்பனை 2000 வரை உயரக் கூடும் என கணிக்கப்படுகிறது. தற்போது வருடத்திற்கு 400 முதல் 500 கார்கள் வரையே விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய வகை அம்பாசடர் கார்களில் சில பழைய வசதிகள் அப்படியே நீடிக்குமாம். தற்போதைய அம்பாசடர் கார்களில் சோஃபா போன்ற பின் வரிசை இருக்கைகள் அப்படியே இருக்குமாம். அதேசமயம், புதிதாக இசுஸு என்ஜின்களை காரில் பொருத்தவுள்ளனர்.
இப்படி ஒரு சில மாற்றங்கள் மட்டுமே இருக்குமாம். பெரிய அளவில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றால் ஆர் அன்ட் டிக்கு நிறைய செலவிட வேண்டும். அதற்கான வசதியில் இப்போது இந்துஸ்தான் மோட்டார்ஸ் இல்லை என்பதால் சிறிய மாற்றங்களை மட்டும் செய்து புதிய 'அம்பி'யை களத்தில் இறக்கவுள்ளனராம்.
முன்பு இப்படித்தான் ராயல் என்பீல்ட் நிறுவனம் சிறு சிறு மாற்றங்களை தனது புல்லட்டுக்குக் கொடுத்து 'ஹிட்' அடித்தது. அதே பாணியில் இந்துஸ்தான் மோட்டார்ஸின் புதிய 'அம்பி'யும் கை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








