அம்பாசடர் விற்பனையை இரட்டிப்பாக்க திட்டம்

இந்தியர்களின் மனம் கவர்ந்த அம்பாசடர் கார்களின் விற்பனை அளவை அடுத்த ஆண்டு இரட்டிப்பாக்க ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இன்றளவும் இந்தியர்களின் மனம் கவர்ந்த காராக அம்பாசடர் தான் உள்ளது. இந்த காருக்கு நிகராக வருமா என்று கேட்காத இந்தியர்களே இல்லை. அந்த அளவுக்கு பாசப் பிணைப்பைக் கொண்டது அம்பாசடர்.
ஆனால் புத்தம் புது கார்களின் புற்றீசல் வரவால் அம்பாசடர் ஓரம் கட்டப்பட்டு விட்டது. இருப்பினும் அம்பாசடருக்கு என்று உள்ள மவுசு இன்னும் அப்படியேதான் உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் அம்பாசடர் கார்களின் விற்பனையை அதிகரிக்க ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு விற்பனையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளனர்.
அடுத்த 15 முதல் 18 மாதங்களில் புதிய அம்பாசடர் மாடல்கள் அறிமுகப்ப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தற்போதுள்ள வருடத்திற்கு 12,000 கார்கள் என்ற விற்பனை அளவை 24,000 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின்படி பயணிகள் மற்றும் வர்த்தகப் பிரிவில் 2 புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்படும். அம்பாசடரின் தற்போதைய வடிவத்தை மாற்றி புதிதாக 4 மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும். இவற்றின் விற்பனை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுவாக்கில் தொடங்கும்.
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் மிகப் பழமையான மாடல் அம்பாசடர்தான். மேற்கு வங்கத்திலிருந்து இது தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்படுகிறது. தற்போது தனது புதிய மாடல்களை தயாரிக்க சென்னையை இலக்காக எடுத்துள்ளது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ். இதற்காக ஜப்பானின் மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனத்துடன் அது கை கோர்த்துள்ளது.
இந்த புதிய கூட்டின் கீழ், ரூ. 49.95 லட்சத்திற்கு லேன்சர் எவலூஷன் எக்ஸ் செடன் மற்றும் ரூ. 38.95 லட்சத்திற்கு புதிய மான்டிரோ எஸ்யுவி தயாரிக்கப்படும்.
சென்னை மிட்சுபிஷி ஆலையில்தான் மிட்சுபிஷியின் அவுட்லேன்டர் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது ரூ. 70 கோடி கடனில் உள்ளது. வளர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது. புதிய மாடல்கள் வரும்போது இந்த நிலைமை மாறும் என ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








