வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா

இதுகுறித்து ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் தகாஷி நகாய் கூறுகையில், வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டணிசற்று கவலைக்குரிய அம்சமாகும். இதை சமாளிக்க பிராண்ட் பெயர் கெடாத வகையில் வாகனப் பராமரிப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.
உலக அளவில் பெரிய பெரிய நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து மார்க்கெட்டை விரிவுபடுத்தி கல்லா கட்டுவது புதிதல்ல. உதாரணத்திற்கு டொயோட்டா, பியூஜியட், சிட்ரோன் ஆகியவை இணைந்து கார்த் தயாரிப்பில் ஈடுபட்டன. அதேபோல நிஸ்ஸான், ரெனால்ட், டாசியா ஆகியவை இணைந்து செயல்பட்டன.
இந்த வரிசையில்தான் ஜப்பானின் சுசுகியுடன் வோக்ஸ்வேகன் கை கோர்த்து இந்தியாவில் களம் இறங்கவுள்ளது. தனது குட்டிக் கார் தயாரிப்புக்கு உதவுமாறு மாருதி சுசுகியை அது கேட்டுள்ளது.
மாருதி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் சுசுகி வசம் உள்ளது. அதேபோல சுசுகியின் கணிசமான பங்குகளை வோக்ஸ்வேகன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதான் ஹோண்டாவை டென்ஷனாக்கியுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சுசுகி தனிக்காட்டு ராஜாவாக உள்ளது. மேலும் குறைந்த பராமரிப்புச் செலவுடைய கார்களைத் தயாரிப்பதில் இது நிபுணராகவும் விளங்குகிறது. இந்த நிலையில் வோக்ஸ்வேகனின் கூட்டணியால் தரமும், குறைந்த செலவும், பாதுகாப்பும் இணையும்போது அந்தக் கார் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என்பதே ஹோண்டாவின் கவலை.
ஹோண்டா மட்டுமல்லாமல் வோக்ஸ்வேகன்-சுசுகி கூட்டணியை நினைத்து ஹூண்டாயும் கூட பீதியாகியுள்ளதாம்.
இதையடுத்து தனது பிராண்டுகளை குறைந்த பராமரிப்புச் செலவுடைய கார்களாக மாற்றுவது குறித்து ஹோண்டா தீவிரமாக யோசிக்கத் தொடங்கியுள்ளதாம். இந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது குட்டிக்காரை அறிமுகப்படுத்தியது ஹோண்டா. மேலும் டீசல் என்ஜின் கார்களை 2012ல் அறிமுகப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.
தற்போது வோக்ஸ்வேகன்-சுசுகி கூட்டணியால் ஏற்படும் பாதிப்புகளை சரிக்கட்டும் வகையில் அது பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








