குட்டிக் கார் போட்டியில் ஸ்கோடாவும் குதிக்கிறது

ஆனால் இது ஒரு லட்சம் ரூபாய் கார் அல்ல, மாறாக ரூ.3 முதல் 5 லட்சத்திற்குள் விலை இருக்குமாம். இது இந்தியாவுக்கான கார். 2012ம் ஆண்டில் இந்த கார் அறிமுகம் செய்யப்படவுள்ளதாம்.
அதேபோல தனது எஸ்யுவி டைப் காரான எட்டியை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா. டொயோட்டா பார்ச்சூனர், ஹோன்டா சிஆர்வி, செவி கேப்டிவா, நிஸ்ஸான் எக்ஸ் டிரையல் ஆகிய வரிசையில் சேரக் கூடிய வகையிலான கார்தான் எட்டி.
ஸ்கோடாவின் லாரா கார்களுக்கு நல்ல வெற்றி கிடைத்துள்ளது. செடான் வகை காரான இது சமீப காலமாக நன்றாக விற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த செடான் காரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது ஸ்கோடா. இதன் விலை ரூ. 6 முதல் 10 லட்சமாக இருக்கும்.
இந்தக் கார், வோக்ஸ்வோகனின் செடான் வென்டா தொழில்நுட்பத்தை சார்ந்திருக்குமாம்.
ஸ்கோடாவின் திட்டங்கள் குறித்து அதன் இந்தியப் பிரிவின் போர்டு உறுப்பினர் மற்றும் இயக்குநர் தாமஸ் குயல் கூறுகையில், ஆண்டுதோறும் ஒரு மாடலை அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. எங்களது குட்டிக் கார் 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே இது தொடர்பான பணிகள் தொடங்கி விட்டது. இந்தியச் சந்தைக்கேற்ற வகையில் இது இருக்கும். பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வகையிலான காராக இது இருக்கும் என்றார்.
ஸ்கோடாவின் குட்டிக் கார் இந்திய சந்தைக்குள் நுழையும்போது மாருதி, ஹூண்டாய், டாடா ஆகியவற்றின் கார்களோடு கடும் போட்டியில் ஈடுபட நேரிடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுபோக சமீபத்தில் நுழைந்துள்ள போர்டு பிகோ மற்றும் ஜெனரல் மோட்டார்ஸின் பீட், வோக்ஸ்வேகனின் போலோ ஆகியவையும் கடும் போட்டியைக் கொடுக்க தயாராக உள்ளன. இவை அடுத்த 2 ஆண்டுகளில் களத்தில் குதிக்கவுள்ளன.
ஸ்கோடா தனது புதுப்பிக்கப்பட்ட பேபியா காரை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்குக் கொண்டு வருகிறதாம். இதன் விலை ரூ. 6 முதல் 7.84 லட்சமாக இருக்கும்.
ஸ்கோடாவின் திட்டங்கள் அதி தீவிரமாக உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் ஸ்கோடாவின் கார்கள் இந்திய சாலைகளில் தீப்பொறி பறக்க பறக்கத் தயாராகி வருகின்றன. இந்த ஆண்டு பேபியா, அடுத்த ஆண்டு செடான், 2012ல் குட்டிக் கார் என திட்டமிட்டு செயலாற்றும் ஸ்கோடா, மற்ற நிறுவனங்களுக்கு நிச்சயம் நல்ல போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








