நானோவுக்கு போட்டியாக வரும் பியாஜியோ: தென் கிழக்கு ஆசியா, இந்தியா, வியட்நாமுக்கு குறி

டாடா நானோவின் வெற்றியை அடுத்து தற்போது இத்தாலிய கார் தயாரிப்பாளரான பியாஜியோவும் சிறிய வகை கார் தயாரிப்பில் இறங்கவுள்ளது. இது 3 இருக்கைகள் கொண்டதாக தயாரிக்கப்படும். இதற்காக இந்தியாவின் இரு சக்கர வாகன ஜாம்பவானான பஜாஜை அந்த நிறுவனம் அனுகியுள்ளது.
தலைமுறை தலைமுறையாக இந்த துறையில் இருக்கும் பியாஜியோ பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. முதலில் ஸ்கூட்டர்கள், தற்போது என்டி 3 என்னும் சிறிய கார் தயாரித்து நற்பெயர் எடுத்துள்ளது. இந்த என்டி3 ஒரு கான்செப்ட் கார். இது மிலனில் நடந்த பைக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், இது தென் கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் வியட்நாம் சந்தைகளை குறிவைத்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் கூறியதாவது,
என்டி3 அடுத்த ஆபே போன்றதாகும். இது சந்தையில் நல்ல இடத்தைப் பிடித்ததும் மேலும் மெருகூட்டவுள்ளோம். இதன் விலை ரூ. 1. 5 லட்சம். இதை இன்னும் 3 ஆண்டுகளில் வர்த்தக பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும்.
2.4 மீ நீளம் கொண்ட இது 200சிசி / 300 சிசி என்ஜின் கொண்டது. மேலும், இது மணிக்கு 60 கிமீ அல்லது 80 கிமீ வேகத்தில் செல்லும். வரும் காலத்தில் எலக்ட்ரிக் என்டி3-ம் அறிமுகப்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் இது லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் தரும் என்றார்.


Click it and Unblock the Notifications








