புதுப் புதுக் கார்களின் அணிவகுப்பால் பதட்டத்தில் மாருதி சுசுகி

இந்தியக் கார்ச் சந்தை என்றும் இல்லாத அளவுக்கு அபரிதமான வளர்ச்சிப் பாதையில் நடை போட்டுக் கொண்டிருக்கிறது. விதம் விதமான கார்கள் குவிந்து வருவதால், எதை வாங்குவது என்று தெரியாமல் வாடிக்கையாளர்கள் குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு காரும் ஒரு புது அம்சத்தைக் கொண்டிருப்பதால் அறிமுகமாகும் அத்தனை கார்களும் அபாரமான வளர்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் கார்ச் சந்தையில் காணப்படும் இந்த கார்களின் நெரிசலில் சிக்கித் தவிக்க ஆரம்பித்துள்ளது மாருதி சுசுகி நிறுவனம். பல புதிய மாடல்களின் வருகை தங்களுக்குப் பாதிப்பையே தரும் என்பது மாருதியின் கணிப்பு. மேலும் இந்தியக் கார்ச் சந்தையில் தக்க வைத்துள்ள முதலிடத்தை இழக்க நேரிடுமோ என்ற அச்சமும் மாருதிக்கு வந்துள்ளதாம்.
மாருதியைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சில மாடல்கள் மட்டுமே உள்ளன. அதேசமயம், காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளது. கடும் போட்டியையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இந்த முட்டுக்கட்டைகளைத் தாண்டித்தான் அது தனது முதலிடத்தை இதுவரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இது இனியும் தொடருமா என்பதில் சந்தேகம் வந்துள்ளது.
வோக்ஸ்வேகனின் போலோ, ஜெனரல் மோட்டார்ஸின் பீட், போர்ட் பிகோ ஆகியவை மாருதியின் முதலிடத்தை கடுமையாக அசைத்துப் பார்க்கக் கூடிய வல்லமை படைத்தவையாக கருதப்படுகிறது. இதை மாருதியும் ஒப்புக் கொள்கிறது.
இந்தக் கார்களின் வருகையால் மாருதியின் விற்பனையில் சரிவும் ஏற்படத் தொடங்கி விட்டது. ஏப்ரல்-நவம்பர் மாத காலகட்டத்தில் மாருதியின் விற்பனை 49 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே கட்டத்தில் 51.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விற்பனைச் சரிவு வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். காரணம், டொயோட்டா மற்றும் ஹோண்டா புதிய மாடல்களுடன் களம் இறங்கவுள்ளதால்.
இந்த விற்பனைச் சரிவையும், போட்டிகளையும் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளில் மாருதி இறங்கினால் மட்டுமே முதலிடத்தை இழக்காமல் லீடராக தொடர முடியும்.


Click it and Unblock the Notifications








