தீப்பிடித்த நானோ கார்: ரூ.15 லட்சம் நிவாரணம் கேட்கும் மும்பைவாசி!

மும்பையில் சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் சதீஷ் சாவந்த் (37), கடந்த மாதம் புத்தம் புதிய நானோ கார் ஒன்றை வாங்கினார்.
மும்பையில் உள்ள டாடா மோட்டார்ஸின் கன்கார்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இந்த நானோ காரை வாங்கினார். வாங்கிய முதல் நாளிலேயே கார் தீப்பிடித்து எரிந்துவிட்டது.
உலகின் விலை மலிவான கார் என்ற பெருமையுடன் சந்தைக்கு வந்த நானோ காரின், ஸ்விட்ச் போர்ட் மின் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டு மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக பல புகார்கள் இருந்து வந்த நேரத்தில் சதீஷ் சாவந்த்தின் காரும் தீயில் கருகியது.
ஒரு லட்சம் ரூபாய் நானோ காருடன், கூடுதல் உபகரணங்கள் பலவற்றை இணைத்து மொத்தம் 2.2 லட்சத்தை டீலரிடம் கொடுத்திருந்தார் சதீஷ்.
ஷோரூமில் இருந்து வண்டியை வீட்டுக்கு எடுத்துச்செல்வதற்குள் கார் தீப்பிடித்து எரிந்துவிட்டதால், வேறு வழியின்றி 2.25 லட்சம் பணத்தை காசோலையாக திருப்பிக் கொடுத்துவிட்டது கன்கார்ட் மோட்டார்ஸ் நிறுவனம்.
இந்த பணத்தை தான் கடன் வாங்கிய வங்கியில் 'செட்டில்' செய்து விட்டதாகவும், தனக்கு நஷ்டஈடாக ரூ.15 லட்சம் வேண்டும் என்றும் சதீஷ் கேட்டு வருகிறார்.
இதுபற்றி சதீஷ் கூறுகையில், 'கடந்த வாரம் கன்கார்ட் மோட்டாஸ் நிறுவனம் என்னிடம் ரூ.2.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கியது.
வங்கிக் கடனை பைசல் செய்யவேண்டும் என்பதற்காக இந்த பணத்தை நான் பெற்றுக்கொண்டேன். இப்போது கடனை அடைத்துவிட்டேன்.
ஆனால் இந்த பிரச்னையை இதோடு விடமாட்டேன். இதை நிவாரணத் தொகையாக கருத முடியாது.
ரூ.15 லட்சம் டாடா மோட்டார்ஸ் எனக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும். அதற்காக நான் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிடப் போகிறேன்' என்றார்.


Click it and Unblock the Notifications








