நானோவை இனி அப்படியே வாங்கலாம்!

உலகிலேயே மிகவும் விலை மலிவான கார் என்ற பெருமையுடன் அறிமுகமான நானோவின் விற்பனையை மேலும் எளிதாக்கியுள்ளது டாடா மோட்டார்ஸ். முதலில் ஒரு லட்சம் கார்களுக்கு புக்கிங்கைப் பெற்றது நானோ. மேலும் அட்வான்ஸ் புக்கிங் மூலமாக மட்டுமே கார்களைப் பெற முடியும் எனவும் அறிவித்திருந்தது.
ஆனால் இப்போது அட்வான்ஸ் புக்கிங் முறையை நீக்கவுள்ளது டாடா மோட்டார்ஸ். குஜராத்தில் சமீபத்தில்தான் தனது புதிய உற்பத்திப் பிரிவை அது திறந்தது. இதன் காரணமாக அட்வான்ஸ் புக்கிங்கை நிறுத்தி விட்டது நானோ. முதலில் மகாராஷ்டிராவிலும், பின்னர் நாட்டின் இதர பகுதிகளிலும் அட்வான்ஸ் புக்கிங் முறையை கைவிடவுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தது. மேற்கு வங்க மாநிலத்தில் அதன் உற்பத்திதப் பிரிவை அமைக்க பெரும் சிக்கல் எழுந்ததைத் தொடர்ந்து குஜராத்துக்கு இடம் பெயர்ந்தது.
குஜராத்தின் சனந்த் பகுதியில், தற்போது தனது உற்பத்திப் பிரிவை தொடங்கியுள்ளது. இங்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை தயாரிக்க முடியும்.
தற்போது இந்திய சாலைகளில் கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட நானோ கார்கள் ஓடிக்கொண்டுள்ளன. இவை அனைத்தும் பந்த்நகர் உற்பத்திப் பிரிவில் தயாரிக்கப்பட்டவையாகும். 2010ம் ஆண்டு மட்டும் 23,779 கார்களை விற்றுள்ளது டாடா மோட்டார்ஸ்.
தற்போது சனந்த் பிரிவின் உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 3.5 லட்சமாக உயர்த்தவும், டிசம்பர் மாதம் முதல் மாதத்திற்கு 20,000 கார்கள் என்ற தயாரிப்பு இலக்கை அடையவும் திட்டமிட்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.


Click it and Unblock the Notifications








