ஆட்டோமொபைல் துறையில் புதிய கொள்கை: தமிழக அரசு திட்டம்

சென்னை மறைமலை நகரில் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய சிறிய ரக மாடல் ஃபிகோ தயாரிப்புக்கான தனிப் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'உலகளவில் ஆட்டோமொபைல் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் பத்து மையங்களில் ஒன்றாக சென்னை திகழ்கிறது.
ஃபோர்டு, ஹூண்டாய், பிஎம்டபுள்யூ, ரினால்ட், நிஸான், மிட்சுபிஷி ஆகிய ஆறு முன்னணி நிறுவனங்கள் சென்னையில் தங்களின் செயல்பாடுகளை கொண்டுள்ளன.
சமீபத்தில் மஹிந்தரா அண்ட் மஹிந்தராவும் தனது தொழிற்சாலையை சென்னையில் அமைக்க முன்வந்துள்ளது.
இதன்மூலம் ஆண்டுக்கு 12 லட்சம் கார்கள் மற்றும் 35 ஆயிரம் வர்த்தக வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக சென்னை திகழ்கிறது.
அதாவது, ஒரு நிமிடத்தில் மூன்று கார்களையும், 75 வினாடிகளில் ஒரு வர்த்தக வாகனத்தையும் தயாரிக்கும் திறன் சென்னையில் உள்ளது எனக் கூறலாம்.
எர்த் மூவர் வாகனங்களை தயாரிப்பதிலும் சென்னை முக்கிய மையமாக மாறியுள்ளது. கொமட்சு, கேட்டர்பில்லர், கொபெல்கோ, தூசன் ஆகிய நிறுவனங்களும் சென்னையில் கால் பதிக்கின்றன.
அத்துடன் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் துறையிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இத்துறையில் இந்தியா முழுவதும் உள்ள உற்பத்தி திறனில் தமிழ்நாடு 32 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
இவற்றின் மூலம் வேலைவாய்ப்புகளும் பல்மடங்கு பெருகுகின்றன. பிரதான நிறுவனம் ஒருவரை வேலைக்கு அமர்த்தினால், அதைச் சார்ந்த பல வர்த்தகத்தின் மூலம் 8க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சியை முறைப்படுத்தவும், மேம்படுத்தவும் புதிய தொழில்கொள்கையை மாநில அரசு கொண்டுவரும்' என்றார்.


Click it and Unblock the Notifications








