பயமுறுத்தும் வேலை நிறுத்தம்.. சீனாவில் டொயோடோ உற்பத்தி ஸ்தம்பிப்பு!
ஸாங்க்ஷான்: தொழிலாளர் ஸ்ட்ரைக் காரணமாக சீனாவில் தனது கார் உற்பத்தியை நிறுத்தியுள்ளது டொயோடோ மோட்டார் கார்ப்பொரேஷன் நிறுவனம்.
சீனாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தொழிலாளர் பிரச்சனை வெடித்துள்ளது. ஆரம்பத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வேலை நிறுத்தங்கள், இப்போது பெருமளவில் நடக்க ஆரம்பித்துள்ளன.
சீனாவின் தொழில்நகரங்களில் மட்டும் மொத்தம் 13 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள்தான் குறைந்த சம்பளத்தில் சீனாவின் தொழில்துறை உற்பத்தியை பிரமிக்க வைக்கும் உயரத்துக்குக் கொண்டு போனவர்கள். சீனப் பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கக் காரணம் இவர்களே.
ஆனால் இப்போது பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டங்களில் குதித்துள்ளதால், சீனாவின் உற்பத்தி- ஏற்றுமதி பாதிக்க ஆரம்பித்துள்ளது.
இதில் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது டொயோடோ நிறுவனம்.
பெய்ஜிங் அருகே டியான்ஜினில் உள்ளது டொயோடோ கார் தொழிற்சாலை. நேற்று பணிக்கு வந்த ஊழியர்கள் திடீரென உற்பத்தியை பாதியில் நிறுத்திவிட்ட வெளியேறி ஸ்ட்ரைக் அறிவித்தனர்.
ஆண்டுக்கு 4,20,000 கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இந்த தொழிற்சாலை.
டொயோடோவுக்கு பிளாஸ்டிக் பாகங்களை சப்ளை செய்யும் தொழிற்சாலையிலும் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்களன்று இவர்கள் வேலைக்கு வருவார்களா என்று தெரியாததால், உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது டொயோடோ.
அதே போல, சாங்கிங் நகரிலுள்ள டேனிஷ் குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமான கார்ல்ஸ்பர்க்கிலும் தொழிலாளர் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால், தொழிற்சாலை மூடப்பட்டது.
இந்த ஸ்ட்ரைக்கைப் பார்த்த ஹோண்டா நிறுவனம், தங்கள் தொழிலாளர்களின் நீண்ட கால சம்பள கோரிக்கைகளை உடனடியாக செட்டில் செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது!


Click it and Unblock the Notifications








