மும்பையில் புதிய மாடல் கார்களுக்கும் டாக்சி பெர்மிட்:அரசு ஒப்புதல்

அதிக எஞ்சின் திறன்கொண்ட புதிய கார் மாடல்களை மும்பையில் வாடகை கார்களாக பயன்படுத்த முடியாதவாறு மஹாராஷ்டிர அரசு விதிமுறைகளை பின்பற்றி வந்தது. பெரும்பாலும் 980சிசி எஞ்சின் கொண்ட பிரிமியர் பத்மினி கார்களே மும்பையில் வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்து வந்தது.
மேலும், மஹிந்திரா லோகனை மட்டும் வாடகை காராக பயன்படுத்த அனுமதி தரப்பட்டிருந்தது. ஆனால், புதிய கார் மாடல்களையும் வாடகை கார்களாக பயன்படுத்த அனுமதி வழங்குமாறு அம்மாநில அரசை மும்பையை சேர்ந்த பல்வேறு டாக்சி ஓட்டுனர்கள் சங்கங்கள் வலியுறுத்தின.
இந்த நிலையில், டாக்சி ஓட்டுனர்களின் கோரிக்கைக்கு அம்மாநில அரசு தற்போது செவிசாய்த்துள்ளது. புதிய கார் மாடல்களையும் வாடகை கார்களாக ஓட்ட பெர்மிட் வழங்குவதற்கு மாநில போக்குவரத்து துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மும்பையில் மாருதி எஸ்எக்ஸ்-4,ஸ்விப்ட் டிசையர்,ஹூண்டாய் ஐ10 மற்றும் ஐ20 ஆகிய கார்களை வாடகை கார்களாக பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய இறுதி வரையறைகளை தயாரிக்கும் பணிகளில் அம்மாநில போக்குவரத்து துறை ஈடுபட்டுள்ளது.
தற்போதே பல வாடகை கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் புதிய கார்களை வாங்கி டாக்சி பெர்மிட் பெற விண்ணப்பித்துவிட்டனர். அரசின் இந்த முடிவுக்கு மும்பையை சேர்ந்த டாக்சி ஓட்டுனர்கள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








