பிஎம்டபிள்யூ கார்களுக்கு புதிய நேவிகேஷன் வசதியை வழங்கும் இந்தியர்கள்

கார்களில் செல்லும்போது அருகில் உள்ள ஓட்டல்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் பார்க்கிங் பகுதிகள் குறித்த விபரங்களை மொபைல்போன் மூலம் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய நேவிகேஷன் சாப்ட்வேரை தமிழகத்தை சேர்ந்த அர்ச்சனா பட்சிராஜன், சண்டிகரை சேர்ந்த புனித் மேத்தா மற்றும் டெல்லியை சேர்ந்த சோன்ப்ரீத் பாட்டியா ஆகியோர் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினர்.
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரின் அனைத்து விபரங்களையும் மொபைல்போன் மூலம் தெரிந்துகொள்ளும் வகையில் நியூயார்க்வே என்ற பெயரில் இந்த சாப்ட்வேரை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய தகவல் வழங்கும் வசதிக்கு நியூயார்க நகரவாசிகளிடையே அமோக ஆதரவு கிடைத்தது.
இந்தநிலையில், இந்த புதிய தொழில்நுட்பத்தை தனது புதிய கார்களில் பொருத்துவதற்கு பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. இதற்காக அதிக விபரங்கள் தரும் புதிய நேவிகேஷன் சாப்ட்வேரை தயாரித்து வழங்குமாறு மூன்று இந்தியர்களுடன் அந்நிறுவனம் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த புதிய தொழிலநுட்பத்தை மேம்படுத்தி தரும் வகையில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் பிஎம்டபிள்யூ வழங்கியுள்ளது.
இதுகுறித்து பிஎம்டபிள்யூ விற்பனைப் பிரிவு தலைவர் இயன் ராபர்ட்ஸன் கூறியதாவது:
"புதிய சாப்ட்வேரை தயாரித்து வழங்க மைசிட்டிவே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சாப்ட்வேரை பிஎம்டபிள்யூவின் புதிய துணை பெயரில் வரவுள்ள பிஎம்டபிள்யூ ஐ பிராண்டு காரில் பொருத்த திட்டமிட்டுள்ளோம்.
மைசிட்டிவே சாப்ட்வேர் மூலம் அமெரிக்காவிலுள்ள 40 நகரங்களின் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். காரில் செல்லும்போதே நகரத்தின் போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் லாட்டுகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காரில் பொருத்தப்பட உள்ள சாதனத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அமெரிக்கா தவிர, உலகின் 40 முக்கிய நகரங்களின் தகவல்களையும் பெறுவதற்கான வசதியும் புதிய கார்களில் தரப்பட உள்ளது. இது பிஎம்டபிள்யூ வாடிக்கையாளர்களுக்கு அதிக பயன் தரக்கூடியதாக இருக்கும்," என்று கூறினார்.
இதுகுறித்து மைசிட்டிவே தொழில்நுட்பத்தை உருவாக்கிய புனித் மேத்தா கூறுகையில்," இந்த புதிய சாப்ட்வேரை உருவாக்கி தரும்படி உலகின் ஜாம்பவான் நிறுவனத்திடமிருந்து இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்த புதிய மொபைல்போன் சாப்ட்வேர் விரைவில் டில்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்,"என்றார்.


Click it and Unblock the Notifications








