தலேகான் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு ரூ.600 கோடி: ஜிஎம்

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் செவர்லே பிராண்டில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
குஜராத் மாநிலம் ஹலோல் மற்றும் மஹாராஷ்டிர மாநிலம் தலேகான் ஆகிய இடங்களில் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலைகளை அமைத்துள்ளது.
இதில், ஹலோல் தொழிற்சாலையில் கார் உற்பத்தியும், தலேகான் தொழிற்சாலையில் கார் மற்றும் கார் எஞ்சின்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தலேகானிலுள்ள தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில், அதனை விரிவுப்படுத்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ரூ.600 கோடி வரை அந்த தொழிற்சாலையில் முதலீடு செய்யப்பட இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
தற்போது தலேகான் தொழிற்சாலை ஆண்டுக்கு 85,000 கார்கள் மற்றும் எஞ்சின்களையும் உற்பத்தி செய்து வருகிறது.
விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தவுடன், அந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 1.4 லட்சம் கார்களையும், 1.6 லட்சம் எஞ்சின்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக மாறும் என ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








