ஹைபிரிட், எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு புதிய உயர்மட்ட குழுக்கள்:மத்திய அரசு முடிவு

நாட்டின் பெட்ரோல், டீசல் தேவையை நிறைவு செய்வதற்கு வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. நாட்டின் மொத்த பெட்ரோல் மற்றும் டீசல் தேவையில் 75 சதவீதத்தை நாம் இறக்குமதி மூலம் பெற வேண்டியிருக்கிறது.
பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பை ஊக்கப்படுத்துவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு பல்வேறு வரி சலுகைகளையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில், ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பை தீவிரப்படுத்துவதற்கு ஏதுவாக, தேசிய எலக்ட்ரிக் மொபைலிட்டி கவுன்சில்(என்.சி.இ.எம்.,) மற்றும் தேசிய எலக்ட்ரிக் மொபைலிட்டி வாரியம்(என்.பி.இ.எம்.,) ஆகிய இரண்டு புதிய உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அமைக்கிறது.
என்.சி.இ.எம்., அமைப்பு மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் தலைமையில், அமைக்கப்பட உள்ளது. இது, அரசியல் ரீதியான அமைப்பாக இயங்கும். என்.பி.இ.எம்., அமைப்பு அதிகாரிகள் மட்டத்தில் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய கனரக தொழிற்துறை செயலாளர் அம்புஜ் சர்மா கூறி்யதாவது:
"இன்னும் சில நாட்களில் இரண்டு உயர்மட்ட குழுக்கள் நிறுவப்பட உள்ளன. இதற்கு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்டுவிட்டது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, அதேவேளை, பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பை அதிகரிக்கும் பணிகளை இந்த உயர்மட்ட குழுக்கள் மேற்கொள்ளும்.
எலக்ட்ரிக் கார் தயாரிப்புகளை அதிகப்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம். இந்த புதிய அமைப்புகள் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கான சாதகமான அம்சங்களை அமல்படுத்துவது மற்றும் சலுகைகள் வழங்குவது குறித்த முடிவுகளை எடுக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications








