இந்திய கார் பந்தயத்திற்கான குறைந்த விலை டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

ஏர்டெல் இண்டியன் கிராண்ட் பிரிக்ஸ் எனப்படும் இந்தியாவின் முதல் பார்முலா ஒன் கார் பந்தயம், டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் அடுத்த மாதம் நடக்கிறது. அடுத்த மாதம் 28 மற்றும் 29ந் தேதிகளில் தகுதி சுற்று போட்டிகளும், 30ந் தேதி இறுதிச்சுற்று கார் பந்தயங்களும் நடக்கின்றன.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையை போட்டியை நடத்தும் ஜேபி ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சமீபத்தில் துவங்கியது. குறைந்தபட்சம் ரூ.2,500 முதல் அதிகபட்சம் ரூ.35,000 வரை டிக்கெட்டுகளுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், கார் பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதுவரை 20,000 டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஜேபி குழுமம் தெரிவித்துள்ளது.இதில், குறைந்தபட்ச கட்டணம் கொண்ட ரூ.2,500 டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்று தீர்ந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் டிக்கெட்டுகளை மொத்தமாக விற்பனை செய்ய இருப்பதாக ஜேபி குழுமம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச கட்டணம் கொண்ட டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதால், அடுத்து அதிக விலை கொண்ட டிக்கெட்டுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications








