டாடாவிலிருந்து விலகி தனியாக கார் ஷோரூம்களை திறக்கும் ஃபியட்

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம் இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து கார் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. டாடா மோட்டார்ஸ் ஆலைகளில் ஃபியட் கார் உற்பத்தி செய்யப்படுகிறது.
தவிர, நாடு முழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸ் கார் ஷோரூம்களிலேயே ஃபியட் கார்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வேகமாக வளர்ந்து வரும் இந்திய கார் சந்தையில் முந்தாநாள் வந்த நிறுவனங்கள் எல்லாம் கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்து வருகின்றன.
ஆனால், இந்திய சந்தைக்கு வந்து நீண்ட காலமாக ஆன பின்பும் எதிர்பார்க்கும் அளவுக்கு ஃபியட் நிறுவனத்தால் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியை எட்ட முடியவில்லை. மாறாக, மாதத்திற்கு மாதம் விற்பனை குறைந்தது.
இதற்கு டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலேயே ஒண்டுக்குடித்தனம் செய்வதுதான் காரணம் என மிக தாமதமாக உணர்ந்துகொண்டுள்ளது ஃபியட்.
எனவே, விரைவில் தனியாக ஷோரூம்களை அமைத்து கார் விற்பனையில் ஈடுபடப்போவதாக ஃபியட் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஃபியட் இந்திய தலைமை செயல் அதிகாரி ராஜீவ் கபூர் கூறுகையில்,"விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இதற்கு தக்கவாறு, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 20 நகரங்களில் புதிய ஷோரூம்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
அதேவேளையில், டாடா ஆலைகளிலேயே தொடர்ந்து கார் உற்பத்தி செய்யப்படும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








