அடுத்தடுத்து 24 கார்கள் அறிமுகம்: பரபரக்கும் கார் நிறுவனங்கள்

ஆட்டோசந்தையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை அளித்து வரும் கார் விற்பனை கடந்த சில மாதங்களாக மிக மிக மந்தமாக உள்ளது. இதனால், இந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கு சாதகமான ஆண்டாக இருக்குமென்பதில் ஐயப்பாடு நிலவுகிறது.
கார் விற்பனையை அதிகரிக்க அனைத்து முன்னணி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன. இருப்பினும், அதற்கு போதிய பலன் கிட்டுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், கார் மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அடுத்தடுத்து புதிய கார்களை அறிமுகப்படுத்த பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதன்மூலம், கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடியும் என்று அந்த நிறுவனங்கள் கருதுகின்றன.
மொத்தத்தில் வரும் தீபாவளி பண்டி்கையையொட்டிய காலகட்டத்திற்கு முன்னும், பின்னும் இரண்டு டஜன் புதிய கார் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அடுத்தடுத்து கார்கள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால், எப்போது தங்களது புதிய மாடலை களத்தில் இறக்கலாம் என்பது குறித்து தற்போது வியூகம் அமைத்து கார் நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால், ஆட்டோ சந்தையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி நிறுவனம், அடுத்த மாதம் புத்தம் புதிய ஸ்விப்ட் காரை களமிறக்க உள்ளது. இதற்காக, தற்போதைய ஸ்விப்ட் கார் மாடலின் உற்பத்தியை கூட அந்த நிறுவனம் அண்மையில் நிறுத்திவிட்டது. தவிர, வேகன்- ஆர்III என்ற தனது முதல் எம்யூவீ காரையும், சிறிய டிசையர் செடான் காரையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
மாருதி தவிர, பிற முன்னணி நிறுவனங்களும் புதிய மாடல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளன. ஹூண்டாய் சின்ன கார், ஸ்கோடா ராபிட், ஹோண்டா பிரையோ உள்ளிட்ட மாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன. தவிர, ரினால்ட் கோலியோஸ் எஸ்யூவீ காரும் இந்த சமயத்தில்தான் வர இருக்கிறது. இவற்றை சேர்த்து மொத்தம் 24 புதிய கார் மாடல்கள் தீபாவளி பண்டிகை காலத்தில் சந்தையில் களமிறங்க உள்ளதால், ஆட்டோ சந்தையிலும், வாடிக்கையாளர் மத்தியிலும் பெருத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications