இந்தோனேஷியாவில் நானோ கார் ஆலை அமைக்க டாடா முடிவு?

நானோ காரை அயல்நாட்டு சந்தைகளில் மார்க்கெட்டிங் செய்யும் முயற்சிகளை டாடா முடுக்கிவிட்டுள்ளது. இலங்கை, நேபாள நாடுகளில் நானோ கார் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு நானோ காருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷிய சந்தைகளில் நானோ காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, இந்தோனேஷியாவில் நானோ காரை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
இந்தோனேஷியாவை சேர்ந்த பிடி அஸ்ட்ரா இன்டர்நேஷனல் என்ற முன்னணி நிறுவனத்தின் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நானோ காரை தயாரிப்பது குறித்து டாடா மோட்டார்ஸ் பேச்சு நடத்தி வருகிறது.
முதலில் தாய்லாந்து நாட்டில்தான் நானோ காரை தயாரிக்க டாடா முடிவு செய்திருந்தது. ஆனால், அங்கு விதிக்கப்படும் அதிக வரிவிதிப்பு, அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் ஆகிய காரணங்களால், தனது திட்டத்தை இந்தோனேஷியாவுக்கு மாற்றியுள்ளது.
தவிர, இந்தோனேஷிய அரசும் டாடாவுக்கு அதிக சலுகைகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளம் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தாய்லாந்து சந்தையை கருத்தில்கொண்டு தயாரிக்கப்படும் நானோ கார் 600 சிசி எஞ்சின் கொண்டதாகவும், பவர் விண்டோ, ஏசி உள்ளிட்ட ஸ்டாண்டர்டு அம்சங்களுடன் அறிமுகம் செய்ய டாடா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் தாய்லாந்தில் நடைபெறும் ஆட்டோ ஷோவில் நானோவை காட்சிக்கு வைக்க டாடா முடிவு செய்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் தாய்லாந்தில் நானோ காரை டெலிவிரி கொடுக்கும் வகையில், இந்தோனேஷியாவில் உற்பத்தியை துவங்கும் முயற்சிகளையும் அந்த நிறுவனம் துவங்கியுள்ளது.
இந்தோனேஷியாவில் உற்பத்தி துவங்கியவுடன், அங்கிருந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் நாடுகளுக்கு நானோ காரை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








