ஷாரூக்கான் மனைவிக்கு பேட்டன் சொகுசு கார் பரிசளிக்கும் வோக்ஸ்வேகன்

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் கார் நிறுவனம் இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வருகிறது.
மேலும், தனது தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதிலும் அந்த நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஷாரூக்கான் சூப்பர் ஹீரோ பாத்திரத்தில் நடித்துள்ள ரா.ஒன் படத்தில் வோக்ஸ்வேகன் பிராண்டு கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வோக்ஸ்வேகன் கீழ் செயல்படும் புகாட்டி நிறுவனத்தின் வேரியோன் சூப்பர் காரை ரா.ஒன் படத்தில் ஷாரூக்கான் ஓட்டுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
உலகின் அதிவேகமாக செல்லும் கார் என்ற பெருமையை பெற்ற புகாட்டி வேரியோன் சூப்பர் காரை ஓட்டுவதற்காக நடிகர் ஷாரூக்கான் சிறப்பு டிரைவிங் பயிற்சியையும் எடுத்தாராம்.
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சினிமா மூலம் தனது பிராண்டு இந்தியாவில் வெகுவாக பிரபலமடையும் என்று வோக்ஸ்வேகன் கருதுகிறது.
இந்த நிலையில், படத்தில் தனது பிராண்டு கார்களை பயன்படுத்தியது வோக்ஸ்வேகனை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு பரிசாக தனது பேட்டன் சொகுசு காரை அந்த படத்தின் தயாரிப்பாளர் கவுரிகானுக்கு விரைவில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட விழாவில் வோக்ஸ்வேகன் வழங்க உள்ளது.
இந்தியாவில் வோக்ஸ்வேகன் விற்பனை செய்து வரும் விலையுயர்ந்த சொகுசு செடான் கார் பேட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹூண்டாய் கார்களின் விளம்பர தூதராக ஷாரூக்கான் இருப்பதால் இந்த படத்தின் சில காட்சிகளில் ஹூண்டாய் கார்களும் தலையை காட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








