வாடிக்கையாளர்களை வளைக்க நூதனமாக விளம்பரம் செய்யும் ஃபோர்டு

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் நீண்ட காலமாக இந்திய சந்தையில் இருந்தாலும், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபிகோ கார் மூலமாகத்தான் வெகுவாக பிரபலமடைந்தது.
இந்த நிலையில், தனது கார் விற்பனையை அதிகரிக்க புதிய விளம்பர பிரச்சார முயற்சியை ஃபோர்டு மேற்கொண்டுள்ளது."ஸ்வாப் யுவர் டிரைவ்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விளம்பர பிரச்சாரத்தின் மூலம், மாருதி ஸ்விப்ட், டாடா இண்டிகோ மற்றும் டொயோட்டோ பார்ச்சூனர் கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்களிடம், அந்த கார்களுக்கு சரிசமமான ரகத்தை சேர்ந்த ஃபோர்டு கார்கள் ஒரு வாரம் தரப்படும்.
ஃபோர்டு கார்களை ஒரு வாரம் ஓட்டிபார்த்தபின், அந்த கார்கள் ஓட்டிய அனுபவம் குறித்து வாடிக்கையாளர்கள் கூறும் கருத்துக்களை ஃபோர்டு விளம்பரமாக வெளியிட உள்ளது. இந்திய சந்தையில் இதுபோன்று வேறு எந்த கார் நிறுவனங்களும் செய்ததில்லை. முதன்முறையாக, ஃபோர்டு நடத்தும் இந்த விளம்பர பிரச்சாரம் மூலம், எங்கே தங்களது வாடிக்கையாளர்கள் மனம் மாறிவிடுவார்களோ என்ற எண்ணம் முன்னணி கார் நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால், எந்தவொரு நிறுவனத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது. ஃபோர்டு கார்கள் குறித்து வாடிக்கையாளர்களின் அபிப்ராயத்தை தெரிந்துகொள்ளத்தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு இந்திய மார்க்கெட்டிங் பிரிவு துணைத்தலைவர் அனுராக் மேக்ரோத்ரா கூறுகையில்," எங்களது தயாரிப்புகள் குறித்து நாங்களே பெருமையடித்துக்கொள்வது சிறப்பாக இருக்காது. எனவே, வாடிக்கையாளர்கள் ஃபோர்டு கார் டிரைவிங் குறித்து நேரடியாக பெற்ற அனுபவங்கள் மற்றும் சொந்த கருத்துக்கள் குறித்து கூறுவது சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








