தொழிற்சங்க தேர்தலை புறக்கணிக்க மாருதி தொழிலாளர்கள் முடிவு?

புதிய தொழிற்சங்கம் வேண்டி மானேசரில் உள்ள மாருதி தொழிலாளர்கள் கடந்த மாதம் 13 நாட்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டது அறிந்ததே. ஹரியானா மாநில அரசின் தலையீட்டின் பேரில் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.
ஆனால், புதிய தொழிற்சங்க கோரிக்கை குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், வரும் 16ந் தேதி மாருதியின் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கமான மாருதி உத்யோக் கம்கர் யூனியனுக்கு(எம்யூகேயூ) தேர்தல் நடக்கிறது.
குர்கான் மற்றும் மானேசர் ஆகிய இரண்டு ஆலைகளிலும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மானேசர் ஆலையின் புதிய தொழிற்சங்கமான மாருதி சுஸுகி எம்ப்ளாயீஸ் யூனியன் (எம்எஸ்இயூ) பொதுச்செயலாளர் ஷிவ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், மானேசர் ஆலை தொழிலாளர்களின் கோரிக்கை மற்றும் கருத்துக்களை எம்யூகேயூ தொழிற்சங்கம் கண்டுகொள்வதில்லை என்று குற்றம்சாட்டிய அவர், மானேசர் ஆலையின் புதிய தொழிற்சங்கத்துக்கு ஹரியானா அரசு அங்கீகாரம் பெற்றுதர வேண்டும் என்றும் வலியுறு்ததினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா கூறுகையில்," தேர்தல் புறக்கணிப்பு பற்றி மானேசர் ஆலை தொழிலாளர்களிடமிருந்து நோட்டீஸ் எதுவும் வரவில்லை. ஆனால், குர்கான் மற்றும் மானேசர் ஆலையில் தொழிற்சங்க தேர்தல் நடத்தப்படும்," என்றார்.
இந்த பிரச்னைகளால் மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் மீண்டும் ஒரு வேலைநிறுத்தப்போராட்டத்திற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆட்டோ துறையினர் கருதுகின்றனர். கடந்த மாதம் நடந்த வேலைநிறுத்தம், பராமரிப்பு பணிகளால் மாருதியின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், மானேசர் தொழிலாளர்களின் போக்கு மாருதி நிறுவனத்துக்கு விரைவில் நெருக்கடியை கொடுக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








